கிரிக்கெட் போட்டியானது உலகின் மிகப்பிரபலமான போட்டிகளில் ஒன்றாகும். ஏனெனில், இது பல சுவாரஸ்யங்களையும், எதிர்பாராத நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. பற்பல வீரர்களை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர்களின் தனிப்போக்கான ஆட்டத்திறமையால் அடையாளப்படுத்தியுள்ளது, இந்த கிரிக்கெட் போட்டி. மேலும், அத்தகைய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் உலகின் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடி தங்களது அணியை பெரும் உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், தங்களது உடல் தகுதி காரணங்களாலும் சொந்த குடும்ப காரணங்களாலும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர். பின்னர், தங்களது அணியின் தேவையை உணர்ந்து ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடியுள்ளனர்.
அவ்வாறு ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டு வந்து அணியில் இடம் பிடித்த மூன்று வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#3 கெவின் பீட்டர்சன்:
21ஆம் நூற்றாண்டின் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சிறந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாக கருதப்படுபவர், கெவின் பீட்டர்சன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தென் ஆப்ரிக்காவில் பிறந்தவரான இவர், தான் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆண்டிலே தனது சொந்த நாட்டு அணிக்கு எதிராக 96 பந்துகளில் 108 ரன்களைக் குவித்து மிரட்டினார். இந்த இன்னிங்ஸ் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார், கெவின் பீட்டர்சன். பின்னர், 2012 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் எவரும் எதிர்பாராத வகையில், ஓய்வு பெறுவதாக அறிவித்த அதே ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் மீண்டும் அணியில் இணைந்தார். அந்த தொடரில் 185 ரன்களை குவித்தார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியதே இவரது கடைசி சர்வதேச போட்டியாகும். 136 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4440 ரன்களை குவித்துள்ளார்.
#2 கார்ல் கூப்பர்:
குறுகிய கால போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய ஒரு வெற்றிகரமான ஆல்ரவுண்டர், கார்ல் கூப்பர். 1987-ஆம் ஆண்டு தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும், தனது தொடர் சாதனைகளால் மேற்கிந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தார்.
1999-இல் நடைபெற்ற உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு 3 வாரங்கள் முன்னர், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், இந்த கூப்பர். இது, மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், 2001ஆம் ஆண்டு, சர்வதேச போட்டிகளில் தனது அணி சோபிக்க தவறியதை கண்டு மீண்டும் அணியில் இணைந்தார். மேலும்,2003- ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் இவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படாத காரணத்தினால், அணியின் தலைமை பிரையன் லாராவுக்கு வழங்கப்பட்டது.
#1 இம்ரான் கான்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான்கான். 1971-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் கண்டார். பின்னர், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார், இம்ரான் கான்.
1887ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், மிகவும் வேதனை அடைந்த இம்ரான் கான், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜியா- உல்- ஹக்கின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த ஆண்டே சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். மேலும், 1992- இல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்டு தனது அணிக்கு முதலாவது உலக கோப்பையையும் பெற்றுத்தந்தார்,இம்ரான் கான்.
எழுத்து: விஷால் சிங்
மொழியாக்கம்: சே. கலைவாணன்