2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய டி20 திருவிழாவான ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அடுத்த மாதம் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியினரும் தங்களது பலத்தையும் வியூகங்களையும் தீட்டி வருகின்றனர்.
மேலும், எதிரணியை திக்குமுக்காட வைக்கும் அதிரடி பேட்ஸ்மேன்களையும் கட்டுக்கோப்பான பந்துவீச்சாளர்களையும் அட்டகாசமான பீல்டர்களையும் உள்ளடக்கிய அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணியாகும். அவ்வாறு, இந்த 12வது சீசனில் தங்களை சிறந்த முறையில் பலப்படுத்தி கோப்பையை வெல்ல காத்திருக்கும் மூன்று சிறந்த அணிகளை காண்போம்.
#3.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கடந்த சீசன்களில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2016-ஆம் ஆண்டு கோப்பையை வென்று சாம்பியனான ஐதராபாத் அணி இம்முறையும் கூடுதல் உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது. ஏனெனில், கடந்த சீசனில் விளையாட அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஓராண்டு தடைக்கு பின்னர் மீண்டும் அணியில் இணைய உள்ளார். நிச்சயம் இவரது வருகை அணியை மேலும் பலப்படுத்தும். இவர் இல்லாமலேயே கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை போட்டி வரை முன்னேறியது, ஐதராபாத் அணி. ஷிகர் தவான் இம்முறை டெல்லி அணிக்கு சென்றுவிட்டாலும் புதிய வரவுகளான விஜய்சங்கர், சபாஷ் நதிம் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இந்த அணிக்கு மேலும் வலுசேர்க்க உள்ளனர்.
ஏற்கனவே, டாப் ஆர்டரில் கலக்கிவரும் கேன் வில்லியம்சன் மற்றும் வார்னர் கூட்டணி, மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான் மற்றும் தீபக் ஹூடா என ஒரு பட்டாளமே பேட்டிங்கில் கலக்க காத்திருக்கின்றது. பவுலிங்கில் பில்லி ஸ்டேன்லேக், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுலுடன் ரஷித் கான் போன்றோர் பேட்டிங்கிற்கு சரிசம பவுலிங் கூட்டணியை உருவாக்கி மிரட்ட தயாராக உள்ளனர். எனவே, கடந்த வருடம் கோப்பையை தவறவிட்ட இவர்கள், இந்த ஆண்டு கைப்பற்ற தங்களது முழு முயற்சியும் தீவிர ஆட்ட திறனையும் அனைத்து போட்டிகளிலும் வெளிப்படுத்துவர்.
#2 .மும்பை இந்தியன்ஸ்:
இந்த ஆண்டு ஐபிஎல்-ல் மும்பை அணிக்கு என தனி ரசிகர் கூட்டமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சென்னை அணியை தவிர மும்முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற ஒரே அணி என்ற சாதனையையும் மும்பை அணி தன்னகத்தே கொண்டுள்ளது. புதிய வரவுகளான யுவராஜ் சிங்கும் தென்னாபிரிக்காவின் குயின்டன் டிகாக்-கும் தங்களது கூடுதல் திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
மேலும், ரோகித் சர்மா, இஷான் கிஷன், எவின் லெவிஸ், பொல்லார்ட், பாண்டிய சகோதரர்கள் என்று ஒரு மலைக்க வைக்கும் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது, மும்பை அணி. பந்துவீச்சில் பும்ரா, மயங்க் மார்கண்டே, மெக்லஹன் என சிறந்த பவுலர்களையும் கொண்டு மிரட்ட உள்ளது. இந்த அணியினரும் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வார்கள் எனவும் எதிர்பார்க்கலாம்.
#1.சென்னை சூப்பர் கிங்ஸ்:
பெருமைமிகு ஐபிஎல் தொடரின் சிறந்த அணியாக வலம் வருகின்றது, சென்னை சூப்பர் கிங்ஸ். மூன்று முறை ஐபிஎல் பட்டங்கள் மற்றும் இருமுறை சிஎல்டி20 பட்டங்கள் என எவரும் அசைக்க முடியாத சிறந்த ஒரு அணியாக திகழ்ந்து வருகின்றது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்த அணியாகவும் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணியாகவும் திகழ்ந்து வருகிறது. அதிக ஐபிஎல் ரன்களைக் குவித்த வீரரும் குவித்த வீரரும் (சுரேஷ் ரெய்னா) மற்றும் ஐபிஎல் தலைமை வகித்த கேப்டன் (தோனி) என்ற சாதனையையும் சென்னை அணி வீரர்களே கொண்டுள்ளனர். இரண்டாண்டு தடைக்கு பின்னர், மீண்டும் வந்து கடந்த ஆண்டு கோப்பையை வென்று அசத்தினர். இந்த சீசனில் 22 வீரர்களை தக்க வைத்தும் மோஹித் சர்மா போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளரையும் ஏலத்தில் எடுத்துள்ளது, சென்னை அணி நிர்வாகம்.
தொடக்க பேட்டிங் வரிசையில் ராயுடு மற்றும் வாட்சன் கூட்டணி, ரெய்னா, தோனி, பிராவோ, ஜடேஜா என வலுவான பேட்டிங் வரிசை கொண்டுள்ளது. பவுலிங்கில் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி போன்றோரும் தங்களது சளைக்காத ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வென்று சாம்பியனாக மல்லுக்கட்ட உள்ளனர். எனவே, உலகம் முழுவதும் உள்ள சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியும் தனி ஒரு விருந்தாக அமைய காத்திருக்கின்றது. இந்தாண்டின் முதல் ஐபிஎல் போட்டி சென்னை அணிக்கும் பெங்களூர் அணிக்கும் வருகின்ற மார்ச் மாதம் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று அணிகளும் சமபலத்துடன் விளங்குவதால் இந்த அணிகளே இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த வலிமையான அணிகளாக கருதப்படுகிறது.
எழுத்து: அமேய வைத்யா.
மொழியாக்கம்: சே.கலைவாணன்.