இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாடவிருக்கும் 15 வீரர்களை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், அம்பத்தி ராயுடு போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. எனினும், இவர்களின் இடத்தில் இளம் வீரர்களான கே.எல்.ராகுல் ,விஜய் சங்கர் மற்றும் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் போன்றோர் இடம்பெற்றனர். பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா, முகமது சமி, புவனேஸ்வர் போன்றோரும் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், சாகல், ஜடேஜா ஆகியோரும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.
இங்கிலாந்து ரோஸ் பவுல் மைதானத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் போட்டி நடக்கவிருக்கின்றது. திறமையான இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இங்கு இந்திய அணிக்கு வெற்றியை தேடி தரக்கூடிய மூன்று வீரர்களை பற்றி காணலாம்.
#1. ரோகித் சர்மா (தொடக்க வீரர்):
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடிய உலகின் மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர்,ரோகித் சர்மா. சமீப காலங்களில் இவரின் ஆட்டத்தின் திறனை பார்க்கும் போது, இந்திய பேட்டிங்கில் இவர் ஒரு முக்கியமான துருப்புச்சீட்டாக பயன்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இவரின் தொடர்ச்சியான சதங்களும் ,ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே இவர் நிகழ்த்திய மூன்று இரட்டை சதங்களும் இந்திய அணியில் இவரின் அவசியத்தை உறுதிப்படுத்துகின்றன.
"ஹிட் மேன்" என்று அழைக்கப்படும் இவர் தனது நிதானமான ஆட்டத்தை ஒரு புறமும் ,அதிரடியான ஆட்டத்தை மற்றொரு புறமும் காண்பித்தால் இந்தியா ஒரு நல்ல இலக்கை நிச்சயம் எட்ட முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
#2. ஹர்திக் பாண்டியா ( ஆல்ரவுண்டர்):
இன்றைய காலகட்டத்தில் "ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் "என்ற சொல்லுக்கு சொந்தக்காரர், ஹர்திக் பாண்டியா. இவரின் ஆட்டம் ஒரு மாயை என்றும் கூட கூறலாம் .பவுலராக வலம் வந்த இவர், தற்போது பேட்டிங்கிலும் தனது அதிரடியை தொடங்கியுள்ளார். குறிப்பாக, சுழல் பந்து வீச்சில் சிறப்பாக ஆடக்கூடிய ஒரு வீரரும் ஆவார். இக்கட்டான சூழ்நிலைகளில் நல்ல பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் இவர் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு நல்ல பினிஷர் என்றே கூறலாம்.
அதுமட்டுமல்லாது, பவுலிங்கில் நன்கு ஸ்வுங் பந்து வீசக்கூடிய ஒரு நல்ல பவுலர்.இது எதிரணிக்கு ஒரு சவாலாக அமையலாம். பீல்டிங்கிலும் நன்கு கைதேர்ந்த இவரின் பங்களிப்பு இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.
#3. ஜஸ்பிரித் பும்ரா (பவுலர்) :
சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் தனது திறமையான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் மற்றொரு வீரர், ஜஸ்பிரித் பும்ரா. இவரது இன்ஸ்விங் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும், இவர் யார்க்கரை செலுத்தும் விதம் மற்றும் ஷார்ட் பால் போடும் விகிதமும் மிகவும் அருமையாக உள்ளது.
டெத் ஓவர்களின் ஸ்பெஷலிஸ்ட் ஆக விளங்கிய புவனேஷ்வர்குமார் சற்று பார்மில் இல்லாத போதிலும், அவரின் இடத்தை இவர் நிரப்புவார் என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக்கில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர், தனது பார்மை தக்க வைப்பதன் மூலம் உலக கோப்பையில் இவர் ஒரு திருப்புமுனையை அமைப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..