ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெறும் இந்திய அணியை நேற்று அறிவித்தது பிசிசிஐ. அதனுடன் இணைந்து நியூஸிலாந்து தொடரில் இடம்பெறும் டி20 அணியையும் அறிவித்தது. இதில் ஆச்சரியமான விஷயம் ஒன்று என்றால் இந்திய டி20 அணியில் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெற்றதே ஆகும். இது தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. காரணம், நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனி இடம்பெறவில்லை. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியால் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காரணம், அப்போதைய இந்திய அணியை வழி நடத்தியது தோனி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முடிந்துள்ள டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. காரணம், இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. தற்போது, ஓரிரு மாதங்களிலேயே அணிக்கு திரும்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். தோனி, அணியில் மீண்டும் இடம்பெற்றதற்கான 3 காரணங்களைப் பற்றி விவரித்து உள்ளேன்.
1.விலைமதிப்பற்ற அனுபவம்:
2004- ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் சமீபத்தில் 14 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. அந்த ஆண்டு முதலே இந்திய அணிக்கு ஒரு முக்கிய வீரராக பெரும் பங்காற்றியுள்ளார். மேலும் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இவரின் தலைமையில் தான் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடர்களிலும் இவர் வழிநடத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுவே இவரது விலைமதிப்பற்ற அனுபவத்தின் சான்றுகளாகும். தற்போதைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் விக்கெட் கீப்பர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோர் தொடர்ந்து அணியில் தங்களது பணியை செய்தாலும், தோனியை போன்று நிலையான ஒருவிக்கெட் கீப்பிங் பணியை எவராலும் வெளிப்படுத்த முடியவில்லை. ஏனெனில், இவர் பலமுறை பந்துவீச்சாளர்களுக்கு யோசனை கூறி அதில் வெற்றியும் கண்டுள்ளார். மேலும், இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் அவ்வாறான யோசனைகளை அவ்வப்போது கூறியும் வந்துள்ளார். இதனை ரசிகர்களாகிய நாம் பல சர்வதேச போட்டிகளில் கண்கூடாக பார்த்துள்ளோம். எனவே, டி20 போன்ற குறுகிய கால போட்டிகளில் தோனியின் பங்கு போற்றத்தக்கது. அதில் அவர் தொடர்ந்து இடம்பெறு வேண்டும்.
2.ரிஷப் பண்டின் தொடர்ச்சியான சறுக்கல்கள்:
தோனியை இந்திய டி20 அணியிலிருந்து நீக்கிய பிறகு அவருக்கு மாற்றாக இடம்பெறும் வீரராக திகழ்கிறார், இந்த இளம் வீரர் பண்ட். இந்திய டி20 அணியின் தொடர்ந்து இடம்பெறும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். இவர் டெஸ்ட் போட்டியில் நன்கு ஜொலித்தாலும் சர்வதேச குறுகிய கால போட்டிகளில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இவர் ரன்களை குவிப்பதில் தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறார். தற்போது இந்திய அணிக்கு தேவை தகுந்த விக்கெட் கீப்பிங் அனுபவமும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறன் கொண்ட வீரராக திகழும் தோனி தான் தற்போது உள்ள இந்திய அணிக்கு தேவைப்படுகிறது.
3. உலக கோப்பைக்கு முன்னர் தோனி நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டும்:
இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடங்க இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்திய அணி வெறும் 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. இதன் அனைத்து ஆட்டங்களிலும் தோனி நிச்சயம் விளையாட வேண்டும். ஏனெனில், தோனி தற்போது ரன்களை குவிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார். அணித் தேர்வாளர்கள் தோனிக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தால் தான் உலக கோப்பை போட்டியில் இவர் ஜொலிக்க ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்லாது, மற்றொரு குறுகியகால போட்டியான டி20 போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு முன்னர், டி20 போட்டிகளிலும் இவருக்கு இடமளித்தால், மொத்தம் இன்னும் 18 போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் இருக்கும். ஏனென்றால், இவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும்,உலக கோப்பையில் தனது சிறப்பான ஃபார்முக்கு திரும்ப இதுவும் ஒரு காரணமாக அமையும்.
இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் தோனி இடம்பெற்றதற்கான மூன்று காரணங்கள் ஆகும். மேலும், ஏதேனும் ஒரு காரணத்தை நான் குறிப்பிட தவறியிருந்தால் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும்.