உலகின் மிகப்பெரிய டி20 தொடர் என்ற பெருமையை கொண்டது ஐபிஎல் போட்டிகள். 2008-இல் ஐபிஎல் தொடங்கிய காலம் முதலே கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த தொடரால் இந்திய அணிக்கு தரம் வாய்ந்த வீரர்கள் ஆண்டுதோறும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒருநாள் போட்டிகளில் தற்போது நம்பர் ஒன் பந்துவீச்சாளராக விளங்கி வரும் ஜஸ்ப்ரிட் பும்ரா, இலங்கை அணியின் மலிங்கா உடன் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும், அவரிடம் பெற்ற அனுபவத்தால் தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களின் ஒருவராக உருவெடுத்துள்ளார். அவ்வாறு, வெளிநாட்டு வீரர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தால் உலகத் தரத்திலான வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைத்த வண்ணம் உள்ளனர்.
அடுத்தாண்டு நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18ம் தேதி ஜெய்ப்பூரில் துவங்க உள்ளது. ஏலத்தில் பங்கு பெறப்போகும் இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் நேற்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள 346 வீரர்களில் 227 வீரர்கள் இந்தியர்கள். இதில், வெறும் 70 இடங்களுக்கு 346 வீரர்கள் ஏலத்தில் போட்டியிடுகின்றனர். 8 அணி நிர்வாகங்களும் வீரர்களை தேர்வு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். ஏலத்தின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் போக மீதம் 276 வீரர்கள் இருப்பர். அவ்வாறு, ஏலத்தில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படுத்த வாய்ப்பில்லாத மூன்று வீரர்களைப் பற்றி காண்போம்.
3. சேட்டேஷ்வர் புஜாரா:
தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியின் முதுகு தண்டாக விளங்கிவரும் சௌராஷ்ட்ரா வீரரான புஜாரா, தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரைவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அசாத்தியமான திறமைகளால், அடுத்த ராகுல் டிராவிட் என்று அனைவராலும் தொடர்ந்து புகழப்படும் வீரராகவும் திகழ்கிறார், புஜாரா. இவர் தொடர்ந்து தன் திறனை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தினாலும், குறுகிய கால கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதிக்க தவறினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 2010ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தனது முதல் ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கிய இவர், அடுத்த ஆண்டு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றார். தொடர்ந்து மூன்றாண்டுகள் அந்த அணியால் தக்க வைக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் இதுவரை 5 ஆண்டுகள் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளார். இறுதியாக 2014ம் ஆண்டு கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எந்த அணி நிர்வாகம் இவரை எடுக்க முன்வரவில்லை. அந்த ஆண்டு முதலே இவரின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுற்றதாக கருதப்படுகிறது. அதன்பின் வந்த ஆண்டுகளிலும் நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களில் இவர் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, இதுவரை 390 ரன்களை குவித்துள்ளார். இந்த முறையும் நிச்சயம் ஏலத்தில் விலை போக வாய்ப்பு இல்லை என தெரிகிறது.
2. இஷாந்த் சர்மா:
இஷாந்த் சர்மாவும் புஜாராவை போல இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பெற்றாலும் குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் தனது இடத்தை தக்கவைக்க தவறுகிறார். ஆரம்பகால ஐபிஎல் தொடர்களில் சிறந்த பவுலராக செயல்பட்ட இவர், பிற்காலங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சோபிக்க தவறினார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ( 2008 - 2010 ) மூன்றாண்டுகளும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ( 2011 - 2012 ) இரண்டு ஆண்டுகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ( 2013 - 2015 ) மூன்றாண்டுகளும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 2016-ஆம் ஆண்டிலும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக 2017-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளார். இவரது பத்தாண்டு ஐபிஎல் வாழ்வில் மொத்தம் 59 விக்கெட்களையும் 37.81 ஆவ்ரேஜையும் 8.17 என்ற பவுலிங் எக்கனாமிக்கையும் வைத்துள்ளார் .2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியதால் பஞ்சாப் அணி நிர்வாகம் இவரை அடுத்த ஆண்டு விடுவித்தது. கடந்த ஆண்டு எந்த ஒரு அணி நிர்வாகமும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கண்டிப்பாக இந்த ஆண்டும் அதே சோகம் இவருக்கு தொடரலாம்.
1.வினய் குமார் :
கர்நாடகாவை சேர்ந்த வினய் குமார், 100 ஐபிஎல் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள அனுபவமான பந்துவீச்சாளர் ஆவார். 2008ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் வினய் குமார், 2011, 2012 மற்றும் 2013- ஆம் ஆண்டுகளில் முறையே 12, 19 மற்றும் 23 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஆனால், 2014ஆம் ஆண்டு முதல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். கடந்த ஐந்து சீசன்களில் 28 போட்டிகளில் விளையாடி வெறும் 21 மட்டுமே எடுத்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பல ரன்களை வாரி வழங்கியும் ஆட்டத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றாமலும் தொடர்ந்து திணறி வருகிறார் இவர். கடந்த ஆண்டு வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி 16.95 என்ற வாழ்க்கையின் மோசமான எக்கனாமிக்கை பதிவுசெய்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு கொல்கத்தா அணி நிர்வாகம் இவரை விடுவித்தது. இவரும் இந்த ஏலத்தில் விலை போக வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.