விரைவில் 12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு 2 முறை சாம்பியனான இந்திய அணி 'விராட் கோலி' தலைமையில் இந்த உலக கோப்பையில் பங்கேற்கிறது. 1983 & 2011 உலகக்கோப்பையை போன்று இந்த ஆண்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய படை உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 'சச்சின் தெண்டுல்கர்' ஆடியது போன்ற ஒரு சிறப்பான ஆட்டத்தை 'விராட் கோலி' இந்த வருடம் ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் சச்சின் மற்றும் கோலிக்கு இடையேயான எதிர்பாரா 3 உலக கோப்பை ஒற்றுமைகளை பற்றிக் காண்போம்.
1 ) முதல் உலகக்கோப்பை ஆட்டநாயகன் விருது.
'சச்சின்' மற்றும் 'விராட் கோலி' ஆகிய இருவருமே தங்களது முதல் உலகக் கோப்பை ஆட்டநாயகன் விருதை தங்களின் 'பரம எதிரி'யான பாகிஸ்தான் அணிக்கு எதிராகவே பெற்றனர். 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சச்சினின் அரை சதத்தால் 216-7 ரன்கள் சேர்த்தது. பின்னர் 217 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 173 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. 'சச்சின்' 62 பந்துகளில் சேர்த்த 54 ரன்கள் அவருக்கு ஆட்ட நாயகன் விருதை பெற்று தந்தது.
2015-ஆம் ஆண்டு முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் 'விராட் கோலி' மற்றும் 'ஷிகர் தவான்' ஆகியோரின் சதத்தால் 300 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 126 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்த 'விராட் கோலி' ஆட்டநாயகன் விருது பெற்றார்.
2 ) முதல் உலகக் கோப்பைக்கு முன்பாக அடித்த அரைச்சதங்களின் எண்ணிக்கை.
'சச்சின்' மற்றும் 'விராட் கோலி'க்கு இடையேயான ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இதுவாகும். சச்சின் மற்றும் கோலி ஆகிய இருவருமே தங்களது முதல் உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு நாள் போட்டியில் 12 அரை சதங்களை அடித்து இருந்தனர். சச்சின் 1989-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் ஆடினார். 1992-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். இடைப்பட்ட இந்த மூன்று வருடத்தில் தெண்டுல்கர் 12 அரைச்சதங்களை அடித்திருந்தார்.
'விராட் கோலி' 2008-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். மேலும் 2011-ஆண்டு உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடினார். இவரும் இடைப்பட்ட இந்த 3 வருடத்தில் ஒருநாள் போட்டியில் 12 அரை சதங்களை தனது முதல் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3 ) முதல் 2 உலகக்கோப்பையில் அடித்துள்ள சதங்களின் எண்ணிக்கை.
'சச்சின் தெண்டுல்கர்' இதுவரை 1992 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மொத்தம் 6 உலக கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். 'விராட் கோலி' 2011 & 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார். சச்சின் மற்றும் விராட் ஆகிய இருவருமே தங்களது முதல் 2 உலகக்கோப்பை தொடரில் 2 சதங்களை அடித்து இருந்தனர்.
தனது முதல் உலகக் கோப்பையில் சதமடிக்க தவறிய தெண்டுல்கர், 1996-ஆண்டு உலகக்கோப்பையில் 2 சதங்களை விளாசித் தள்ளினார். மேலும் அந்த உலக கோப்பையில் 523 ரன்கள் குவித்த சச்சின், அந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரானார்.
மறுமுனையில் 'விராட் கோலி' தான் ஆடிய 2011 & 2015 உலக கோப்பை தொடர்களில் தலா ஒரு சதம் அடித்திருந்தார். 2011-ஆண்டு தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார் கோலி. மேலும் 2015-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஒரு சதத்தை விளாசினார் கோலி. மேலும் 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார் விராட் கோலி.