நியூசிலாந்திற்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த T20 தொடரில் இந்திய அணிக்காக பல சாதனைகளை பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா இழந்திருந்தாலும், பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தார் ரோகித். இரண்டாவது டி20 போட்டியில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதே போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த மார்டின் கப்டில் அவர்களின் சாதனையை முறியடித்தார். இதுபோன்ற சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களுக்குத் தெரியாத மூன்று தனித்துவமான ரோகித்தின் சாதனைகளை பற்றி இங்கு காண்போம்.
1. சர்வதேச டி20 போட்டியில் சதம் மற்றும் மூன்று கேட்சுகளை பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர்:
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே லக்னோவில் இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்ய அழைத்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இந்திய தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா நான்காவது சதத்தை டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் ஏழு இமாலய சிக்ஸர்கள் உட்பட 111 ரன்கள் எடுத்தார். இந்தியா 195 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா மூன்று கேட்சுகளை பிடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சதம் மற்றும் மூன்று கேட்சுகளை பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
2. அதிக சதவீதம் ரன்கள் பவுண்டரியில் அடித்த ஒரே வீரர்:
2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா 118 ரன்கள் விளாசினார். இதில் 108 ரன்களை பவுண்டரிகள் மூலம் விளாசினார். இன்னிங்சில் மொத்தம் 22 பவுண்டரிகளை விளாசினார் இதில் 10 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் 90% ரன்களை பவுண்டரிகள் மூலம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.
3. சர்வதேச டி20 வரலாற்றில் பத்து நாடுகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர்:
ரோகித் சர்மா இதுவரை இருபது முறை டி20 கிரிக்கெட் போட்டியில் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்தார். நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் அரை சதம் அடித்ததன் மூலம் 10 நாடுகளில் அரை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய பத்து நாடுகளில் அவர் சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.