லாராவின் கடைசி போட்டியானது உலகக் கோப்பை போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியுடன் மோதியது. இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரண்டு அணிகளுக்கும் 2007 ஆம் ஆண்டின் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பில்லை, இருப்பினும் இது லாராவின் கடைசி போட்டி என்பதால் அத்தொடரில் முதன்முறையாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.
இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்தது லாராவிற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய கிறிஸ் கெய்ல் தனது அரை சதத்தை வெறும் 29 பந்துகளில் எட்டினார். இப்போட்டியில் 58 பந்துகளில் 79 ரன்கள் அடித்த இவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் மற்றும் கெயில் துவக்க வீரர்களாக களம் இறங்கி 23.5 ஓவர்களில் 131 ரன்கள் சேர்த்தனர், கெயில் தனது ஆட்டத்தை இழந்ததும் லாரா தனது கடைசி போட்டியில் களமிறங்கினார், இவருக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் வரவேற்பு அளித்தார்கள்.
தனது கடைசி போட்டியில் அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்த லாரா 17 பந்துகளில் 18 ரன்களை குவித்திருந்தார், இவற்றில் 3 பவுண்டரிகள் உள்ளடங்கும். இந்நிலையில் சாமுவேல் ரன் எடுக்க முயன்றபோது இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் துல்லியமான முறையில் ஸ்டெம்பை அடித்து லாராவை ரன் அவுட் செய்தார்.
தொடர்ந்து விளையாடிய சாமுவேல்ஸ் 39 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார், சந்திரபால் உடன் ஜோடி சேர்ந்த இவர் 9.3 ஓவர்களில் 77 ரன்களை குவித்தனர். கடைசிக்கட்ட ஒவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்ததால் 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் கேப்டனான மைக்கேல் வாகன் 10 ஓவர்களில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திய மைக்கேல் வாகன் போபரவுடன் ஜோடி சேர்ந்து 13 ஓவர்களில் 90 ரன்களை குவித்தனர், இதன் பின்பு 11 ஓவர்களில் பீட்டர்சன் உடன் 50 ரன்களை குவித்தார். இப்போட்டியில் வாகன் 68 பந்துகளில் 79 ரன்களை குவித்தார், இவற்றில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்ர்கள் உள்ளடங்கும்.
இதன் பின்பு பீட்டர்சன் அதிரடியாக விளையாடினாலும் மறுபுறம் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இதன் பின்பு பீட்டர்சன் உடன் ஜோடி சேர்ந்த நிக்சன் மீண்டும் ரன் வேட்டையை துவங்கினார், இருவரும் சேர்ந்து 10.3 ஓவர்களில் 80 ரன்கள் குவித்தனர். 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்த பீட்டர்சன் 90 பந்துகளில் சதத்தை கடந்தார்.
மீண்டும் இந்த ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது, கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்திடம் 2 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்தது. கோலிமோர் வீசிய ஓவரில் முதல் 4 பந்துகளில் நிக்சன் 3 பவுண்டரிகளை விளாசினார், ஐந்தாவது பந்து பைசில் பவுண்டரிக்கு சென்றது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார் நிக்சன், இதன் மூலம் கடைசி 12 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
49வது ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரை வீச பிராவோவை அழைத்தார் லாரா. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார் நிக்சன், ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ள நிலையில் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் பிராட் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க வெற்றி இங்கிலாந்து வசப்பட்டது.
போட்டி முடிவடைந்ததும் லாரா ரசிகர்களிடம் "நான் உங்களை மகிழ்வித்தேனா?" என கேட்டார், இதற்கு ரசிகர்கள் "ஆம்" என்ன பதில் அளித்தனர்.