சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் சில போட்டிகள் டையில் முடிந்துள்ளது. அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ஆஸ்திரேலியா Vs தென் ஆப்பிரிக்கா ( 1999 ஆம் ஆண்டு )
ஆஸ்திரேலியா – 213/10 ( 49.2 / 50 ஓவர்கள் )
தென் ஆப்பிரிக்கா – 213/10 ( 49.4 / 50 ஓவர்கள் )
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஆடம் கில்கிறிஸ்ட், 20 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரிக்கி பாண்டிங், நிதானமாக விளையாடி 37 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் ஸ்டீவ் வாக் மற்றும் பெவன் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்டீவ் வாக் 56 ரன்களும், பெவன் 65 ரன்களும் விளாசினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே அடித்தது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. கிப்ஸ் மற்றும் கிறிஸ்டன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். கிப்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டாகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஜேக்யூஸ் காலிஸ், 53 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ரோட்ஸ், 43 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 1 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த 1 ரன் எடுப்பதற்குள், தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி பேட்ஸ்மேனான ஆலன் டொனால்ட், ரன் அவுட்டாகி வெளியேறினார். எனவே இந்தப் போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்பட்டது.
#2) இலங்கை Vs தென் ஆப்பிரிக்கா ( 2003 ஆம் ஆண்டு )
இலங்கை – 268/9 ( 50 ஓவர்கள் )
தென் ஆப்பிரிக்கா – 229/6 ( 45 ஓவர்கள் ) D/L முறை
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்வன் அதாப்பட்டு மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஜெயசூர்யா 16 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய அரவிந்தா டி சில்வா, 73 ரன்கள் விளாசினார். இறுதிவரை சிறப்பாக விளையாடிய மார்வன் அடப்பட்டு, 124 ரன்கள் விளாசினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்தது.
தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்யும் பொழுது மழை குறுக்கிட்டதால், போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 230 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கிரேம் ஸ்மித் மற்றும் கிப்ஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே நிதானமாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய கிப்ஸ், 73 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய மார்க் பவுச்சர், 45 ரன்கள் விளாசினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த குல்செனர், 1 ரன் மட்டுமே அடித்தார். எனவே போட்டி டையில் முடிந்தது.