இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். மேலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்தது.
இந்தத் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் அளித்துள்ள பேட்டியில், இந்த தோல்வி உண்மையிலேயே மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “அடிலெய்டு டெஸ்ட் போட்டிதான் திருப்புமுனை என நான் கருதுகிறேன். அந்த போட்டியில் நாங்கள் முதலில் நல்ல நிலையில் இருந்து (இந்தியா முதல் இன்னிங்சில் 86/5 என தடுமாறியது) ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து நழுவ விட்டோம். உண்மையில் அந்த போட்டியில் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் அதை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது”.
“அந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால், அடுத்து நடந்த ‘பெர்த்’ டெஸ்டில் வெற்றி பெற்றோம். மெல்போர்னில் நடந்த போட்டியில் நாங்கள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம். சிட்னி போட்டி மழையால் டிரா ஆனது. ஆக இந்த தொடரை 2-1 என நாங்கள் கைப்பற்றி இருக்க முடியும்”.
“இது போன்ற ஒரு பெரிய தொடரில் போட்டி நடக்கும் 5 நாட்களிலும் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் நழுவ விடும்போது போட்டியின் முடிவு நம் கையை விட்டு சென்றுவிடும்”.
“ஸ்டீவ் ஸ்மித்’ மற்றும் ‘டேவிட் வார்னர்’ இல்லாதது உண்மையிலேயே எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை. அவர்கள் இல்லாமலேயே நாங்கள் இந்தத் தொடரில் இந்திய அணியை நிறுத்துவோம் என நம்பினோம். ஆனால் இந்திய அணி எங்களின் நம்பிக்கையை பொய்யாக்கியது”.
‘புஜாரா’ அதிகப்படியான ரன்களை சேர்த்தது, ‘கோலி’ இக்கட்டான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடியது, ‘பும்ரா’வின் துல்லியமான வேகப்பந்து வீச்சு இவற்றின் முன் நாங்கள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்”.
“உண்மையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது. அவர்களின் 3 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன் ரன்கள் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக ‘ஹாரிஸ்’, ‘ஹெட்’ ஆகியோர் அதிக ரன்கள் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்”.
“எங்கள் அணியின் 7 பேட்ஸ்மேன்களும் இந்த தொடரில் சரியாக செயல்படவில்லை என்பது உண்மையாகும். இந்த தொடரில் எங்கள் அணி வீரர் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வேதனையான விஷயம். இருப்பினும் எங்களது பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை சிறப்பாகவே செய்தனர். அது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அடுத்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்துள்ளது”.
இவ்வாறு டிம் பெயின் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.