கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் ப்ளாஸ்டர் என பல பெயர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர், அதிக சதங்கள் அடித்த வீரர் என்பதில் துவங்கி அதிக அரைசதங்கள் குவித்த வீரர் என்ற சாதனை வரை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடத்தினை பிடித்துள்ளார். கிரிக்கெட் என கூறியவுடன் நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது சச்சின் தான். அந்த அளவுக்கு சிறியவர்கள் முதல் பெரிவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார் இவர். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் எவராலும் மறக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார் இவர். இந்நிலையில் இவர் 200 பேட்டிகளில் குவித்த பேட்டிங் சாதனை ஒன்றினை வெறும் 66 பேட்டிகளிலேயே சமன் செய்துள்ளார் டிம் சவுத்தி. அது குறித்து விரிவாக காணலாம்.
நியூசிலாந்து அணி இலங்கை-க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 பேட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது கால்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய வீரர்கள் ஆரம்பத்தில் நிலையாக ஆடினாலும் பின் அகிலா தனஜெயாவின் பந்து வீச்சில் கதிகலங்கினர். முதல் நாள் முடிவில் அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது தனஜெயா தான். பின்னர் துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சில நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் முதலாவது இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தது. நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சார்பில் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்திருந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியும் அஜாஸ் படேலின் சுழலில் சிக்கியது. இறுதியில் இலங்கை அணி 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் டிக்கிவாலா அதிகபட்சமாக 61 குவித்தார்.
இதன் பின் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். அந்த அணியானது மிகவும் தடுமாறி வந்தது. அப்போது ஒரு முனையில் அந்த அணியின் விக்கெட் கீப்பரான வால்டிங் நிலைத்து ஆடி அரைசதத்தை கடந்தார். அப்போது களமிறங்கிய அந்த அணியின் பந்துவீச்சாளர் டிம் சவுத்தி வால்டிங்-க்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். பின் அவரும் 23 ரன்னில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அந்த அணியின் முதலாவது இன்னிங்ஸில் 70வது ஓவரில் நிதானமாக ஆடிவந்த சவுத்தி திடீரென சிக்சரை பறக்க விட்டு அரங்கையே திரும்பி பார்க்க வைத்தார். அவர் அடித்த அந்த சிக்ஸரின் மூலம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்நாளில் டெஸ்ட் போட்டிகளில் அடித்த மெத்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை (69) சமன் செய்தார். வெறும் 66 போட்டிகளிலேயே விளையாடியுள்ள சவுத்தி 200 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சிக்ஸர் சாதனையை சமன் செய்தது ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுமட்டுமின்றி இவர் அடித்த 69 சிக்சர்கள் தற்போதைய டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான்களான விராத் கோலி, ஸ்டீவன் சுமித் மற்றும் பிராட்மேன் ஆகியோரின் டெஸ்ட் கேரியரின்.ஒட்டுமொத்த சிக்சர்களின் எண்ணிக்கையை காட்டிலும் 6 அதிகமாகும்.