இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அதிலும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சமீபத்தில் இந்திய அணியின் உலககோப்பை தொஞரில் பங்கேற்கபோகும் அணி அறிவிக்கப்பட்டது. அதில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் என இரு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள தமிழக வீரர்களின் முழு பட்டியலை இங்கு காண்போம்.
#) வெங்கட்ராகவன் – 1975, 1979 உலககோப்பை
உலககோப்பை தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதே 1975 ஆம் ஆண்டில் தான். அப்போது உலககோப்பை ஒருநாள் தொடரானது 60 ஓவர்களை கொண்டது. அந்த காலகட்டத்தில் 1975 மற்றும் 1979 என இரண்டு உலககோப்பை தொடர்களிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராகவன். வலதுகை சுழல் பந்து வீச்சாளரான இவர் பல விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த பின் சர்வதேச போட்டிகளில் நடுவராகவும் செயல்பட்டுள்ளார் இவர்.
#) கிரிஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் – 1983, 1987, 1992.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் வீரர்களுள் ஒருவர் கிரிஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த். சிறந்த பேட்ஸ்மேனான இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இவர் 1983 உலககோப்பை தொடரில் களமிறங்கி துவக்க ஆட்டக்காரராக விளையாடினார். முதல்முறையாக இந்திய அணி அந்தாண்டு உலககோப்பையை கைப்பற்றியது. அந்த தொடரின் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும். அதன் பின்னர் 1987 மற்றும் 1992 என அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று உலககோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக அதிக முறை உலககோப்பை தொடரில் விளையாடியுள்ள தமிழக வீரரும் இவரே.
#) லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் – 1992 உலககோப்பை
1992 உலககோப்பை தொடரில் ஶ்ரீகாந்த் உடன் இணைந்து லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். சுழல் பந்து வீச்சாளரான இவர் அந்த காலகட்டத்தில் சிறப்பாக பந்துவீசி வந்தார். ஆனால் இவருக்கு உலககோப்பை தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வருட உலககோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியிருந்தார்.
#) சடகோபன் ரமேஷ் – 1999 உலககோப்பை
1975 முதல் 1992 வரை நடைபெற்ற அனைத்து உலககோப்பை தொடரிலும் தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் மட்டும் துர்தஷ்டவசமாக தமிழக வீரர்கள் யாரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதன்பின் 1999 உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கு தமிழக வீரரான சடகோபன் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார். இடதுகை துவக்க ஆட்டகாரரான இவர் அந்த தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். அந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் இவர் துவக்க ஆட்டக்காரராகவே விளையாடினார். அந்த தொடரில் சிறப்பாக விளையாடி பல போட்டிகளை வெற்றி பெற காரணமாக அமைந்தார் இவர்.