நேற்று முன்தினம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிரேகன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ். முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை குவித்தது. ஒரு இறுதிப்போட்டிக்கு தகுதியான ரன்களாக இவை இல்லை என்றாலும் கூட தங்களது அயராத போராட்டத்தால் இரண்டாவது இன்னிங்சில் திக்குமுக்காட வைத்தது, கௌசிக் காந்தியின் இளம் படை.
பெரியசாமியின் துள்ளிய வேகப்பந்து வீச்சு தாக்குதலால் திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து ஒட்டுமொத்தமாக 114 ரன்கள் மட்டுமே திண்டுக்கல் அணியால் குவிக்க முடிந்தது. தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் கர்நாடக பிரீமியர் லீக் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டால் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் உள்ளூர் நாயகர்கள் இடம்பெற்று விளையாடி உள்ளனர்.
நடராஜன், வருண் சக்கரவர்த்தி போன்றோர் கடந்த சீசன்களில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி பஞ்சாப் ஐதராபாத் போன்ற ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ளனர் இந்த டிஎன்பிஎல் சீசனிலும் கூட கடின உழைப்பை வெளிப்படுத்தியவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் நிச்சயம் இடம்பெறுவார்கள் அவ்வாறு இந்த சீசனில் தங்களது சீரான ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள 3 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ஹரி நிஷாந்த்:
இவ்வருடம் நடைபெற்ற டிஎன்பிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார், ஹரி நிஷாந்த். ஊட்டியை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான ஹரி, இந்த தொடர் முழுக்க விளையாடி 372 ரன்கள் 119.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். இன்னிங்சின் தொடக்கத்தில் நங்கூரம் போல் தம்மை ஈடுபடுத்தி ரன்களை குவிக்கும் இவர் தமது அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவி புரிந்து வருகிறார். 23 வயது மட்டுமே ஆன இவர் இன்னும் தமது பேட்டிங் முறையை மெருகேற்றுவதற்கு போதிய காலம் உள்ளது.
ஹரி நிஷாந்த் போன்ற துடிப்பான இளைஞர்களை தேடிக் கொண்டிருக்கும் ஐபிஎல் அணிகள் நிச்சயம் ஏலத்தில் எடுக்க முன் வரும். ஆட்டத்தை எந்த நேரத்தில் மாற்றக்கூடிய திறன் படைத்த இவ்வகையான வீரர்கள் கிரிக்கெட் உலகிற்கு மிகவும் தேவைப்படும் பேட்ஸ்மேன்களாக உருப்பெற்று வந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள இளம் வீரர்கள் பலரும் சிக்சர் மூலம் தங்களது அதிரடி பாணியை தொடுத்து வரும் வேளையில் ஆட்டத்தின் நிலைமையை உணர்ந்து சூழ்நிலையை சாதகமாக்கி விளையாடும் வீரர்கள் கிடைப்பது மிகவும் சொற்பமே.
எனவே, இம்முறை நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ஹரி நிஷாந்த் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஏலம் போவது மட்டுமல்லாமல் தமது அணிக்காக வெற்றிகளைக் குவிக்கும் வீரராகவும் திகழ்வார் என்பதில் மாற்று கருத்து இல்லை.
#2.பாபா அபராஜித்:
2012-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பாபா அபராஜித், இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவதற்கான போட்டியில் களமிறங்கியுள்ளார். 25 வயதான இவர், உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே அணிகளில் இடம்பெற்ற போதிலும் ஆடும் லெவனில் இடம்பெறாமல் தவித்து வந்துள்ளார். சமீப காலங்களில் பெரும்பாலும் பந்து வீசுவதை தவிர்த்து வரும் அபராஜித், தற்போது முடிந்த டிஎன்பிஎல் சீசனிலும் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தாலும் தனது டி20 எக்கானமியை 5.67 என்று வைத்துள்ளார்.
ஆனால், பேட்டிங்கில் அபாரமாக செயல்படும் இவரை எந்த ஒரு ஐபிஎல் அணி நிர்வாகமும் ஏலத்தில் எடுக்க முன் வரலாம். காஞ்சி வீரன்ஸ் அணியில் இடம்பெற்று 8 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 242 ரன்களை 40.33 என்ற சராசரியுடன் வைத்துள்ளார். மிடில் ஆர்டரில் தகுந்த ஸ்திரத்துடன் விளையாடும் இவர், ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்துத் தாக்கக்கூடிய வீரராக திகழ்ந்து வந்துள்ளார். ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விரைவிலேயே விக்கெட்களை இழந்த போதிலும் தனக்கென தனி பாணியை வழிவகுத்து இறுதிகட்ட ஓவர் வரை அணியை அழைத்துச் செல்லும் திறன் படைத்துள்ளார்.
#1.பெரியசாமி:
நேற்று முன்தினம் நடந்த முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார், பெரியசாமி. இவர் தொடக்க சீசனில் சிறப்பாக விளையாடாத போதிலும் நேற்று நடைபெற்ற முக்கியமான இறுதி போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றி தமது அணியை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியுள்ளார். யார்க்கர் மன்னன் லசித் மலிங்காவை போல பந்து வீசும் பெரியசாமி 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மேலும், இவரது எக்கனாமிக் 6.47 என்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ள காரணத்தால் பல்வேறு ஐபிஎல் அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்ககூடும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் முக்கியமாக மாற்று வேகப்பந்துவீச்சாளரை தங்களது அணியில் இணைக்க பெரும் முயற்சி மேற்கொள்ளும். எனவே, அவர்களின் தேவையை போக்கும் வகையில் பெரியசாமி சன் ரைசர்ஸ் அணியில் இணைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.தமது பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் பெரியசாமி ஆட்டத்தின் தொடக்கம் மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி உள்ளார்.
மேற்கண்ட காரணங்களாலேயே இம் மூன்று வீரர்களும் அடுத்து ஐபிஎல் சீசனில் பல்வேறு அணிகளில் இணைய காத்திருக்கின்றனர்.