டி.என்.பி.எல் (TNPL) 4-வது சீசனில் விளையாட 45 வீரர்கள் ஏலத்தில் தேர்வு

TNPL Team Captains
TNPL Team Captains

இந்த வருட தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL) தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அணுபவம் வாய்ந்த தமிழ் குமரன், திறமை வாய்ந்த புதுமுக வீர்ர் முஹமது ஆசிக் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் பெரியசாமி ஆகியோர் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மொத்தம் 878 வீரர்களில் நேற்று மட்டும் 45 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் தங்கள் அணிக்காக ஒன்பது வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் ஏழு வீரர்களை தேர்வு செய்துள்ளனர். ஏலம் தொடங்கியதும் முதல் நபராக தமிழ்நாடு ரஞ்சி அணியில் விளையாடும் 35 வயதான வேகப் பந்துவீச்சாளர் தமிழ்குமரனை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்தது டூட்டி பேட்ரியாட்ஸ்.

இரண்டாவது சுற்றில் 21 வயதான முஹமது ஆசிக்கை ஒப்பந்தம் செய்தது லைகா கோவை கிங்ஸ். கோயமுத்தூரைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பிற்கு எதிராக சதம் விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார். “நான் இந்த வருட ஏலத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். என்னை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒரு வீரராக வளரவும் அணுபவம் கிடைக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு” என சந்தோஷமாக கூறுகிறார் ஆசிக்.

மலிங்கா போன்று பந்துவீசும் பெரியசாமியை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தேர்ந்தெடுத்துள்ளது. இவர் இரண்டாம் டிவிஷன் அணியான UFCC அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு ஒரு கண்ணில் மட்டுமே பார்வை உள்ளது என்பது குறிபிடத்தக்கது. இவர்கள் தவிர விஜய் மெர்சண்ட் கோப்பையில் 302 ரன் குவித்த 16 வயதான நேயன் ஷியாம் கங்கயனை ஒப்பந்தம் செய்துள்ளது திருச்சி வாரியர்ஸ்.

“இந்த முறை ஆல்-ரவுண்டரை எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினோம். அது நல்ல முடிவு என்றே நான் நினைக்கிறேன். கீழ்மட்ட அளவில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அடுத்த நிலைக்குச் சென்று தங்கள் திறமையை பெரிய அரங்கில் வெளிப்படுத்த இதுவே நல்ல வாய்ப்பு” என்கிறார் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சுப்ரமணியன் சிவா.

தங்கள் திட்டப்படி எல்லாம் நிறைவேறியுள்ளது என கூறும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி, “கடந்த சீசனில் எங்கள் அணியில் பவுலிங்கில் மோசமாக இருந்தோம். அதனால் இந்த முறை மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இது எங்கள் அணிக்கு கூடுதல் வலிமையை சேர்க்கும்” என்றார்.

TNPL Draft
TNPL Draft

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் கூறுகையில், “ஏலத்தின் முடிவில் எங்கள் பட்டியலில் உள்ள அனைத்து பவுலர்களையும் நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோம். இந்த சீசனில் எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள ஜெப செல்வின் அசத்துவார் என எதிர்பார்க்கிறோம். அவரிடம் அசாத்திய திறமை உள்ளது” என்றார்.

முடிவில் டூட்டி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பேந்தர்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மொத்தமாக 22 வீரர்களை கொண்டுள்ளது. விபி காஞ்சி வாரியர்ஸ் 21 வீரர்களையும், கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் 19 வீரர்களையும் தங்கள் அணியில் கொண்டுள்ளது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கின் நான்காவது சீஸன் ஜூலை 19-ம் தேதி தொடங்குகிறது. திண்டுக்கல்லில் உள்ள நத்தம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர்கொள்கிறது.