கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் துவக்க வீரராக களமிறங்கும் வீரரே அதிக நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். பந்து புதியதாக உள்ளதால் அது ஸ்விங் ஆகும் தன்மை அறிந்து விளையாட வேண்டும். மேலும் தான் சிறப்பான துவக்கம் தந்தால் மட்டுமே அடுத்து வரும் வீரர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாட வேண்டும் என்ற எண்ணமும் கருத்தில் கொண்டு விளையாடுவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொருத்தவரையில் ஒரு சில வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் வாழ்வினை தொடங்கி அதன் பின்னர் துவக்க வீரராக உருவெடுத்து அசத்தியுள்ளனர். அத்தகைய டாப் 10 வீரர்களைப் பற்றிய தொகுப்பு இது.
#10) சனத் ஜெயசூர்யா
இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யா 90'களில் கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். அதிரடி துவக்க வீரராக விளங்கிய இவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே தனது கிரிக்கெட் பயணத்தை துவங்கினார். 1989 ஆம் ஆண்டு அறிமுகமான போட்டியில் இவர் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 5 வது வீரராக களமிறங்கி 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே குவித்தார். அதன் பின்னர் 1993-94 காலகட்டத்தில் இவர் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். 1994-ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீராக அர்ஜுனா ரனதுங்காவுடன் களமிறங்கிய இவர் அந்த போட்டியில் 77 ரன்கள் குவித்து அசத்தினார். சிறந்த துவக்க வீரராக விளங்கிய இவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 21,032 ரன்கள் குவித்து நிறைவு செய்தார்.
#9) ஜஸ்டின் லாங்கர்
ஆஸ்திரேலிய அணியின் மறக்க முடியாத வீரர்களுள் ஒருவரான ஜஸ்டின் லாங்கர் ஆரம்ப காலகட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே விளையாடி வந்தவர். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி தனது முதல் 6 ஆண்டுகளில் வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். அதன் பின் மேத்யூ ஹைடனுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது. பின்னர் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராக இவர் இடம்பிடித்தார். இவர் ஹைடனுடன் இணைந்து 5000 ரன்கள் குவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் 105 டெஸ்ட் போட்டிகளில் 7596 ரன்கள் குவித்து நிறைவு செய்தார். அதில் அதிகபட்சமாக 250 ரன்கள் குவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
#8) மார்க் வாக்
ஆஸ்திரேலிய அணியின் கில்கிறிஸ்ட் உடன் இணைந்து சிறந்த துவக்க வீரராக விளையாடி வந்தவர் மார்க் வாக். இவரும் கில்கிறிஸ்ட்ம் இணைந்து 93 இன்னிங்ஸ்ல் 3919 ரன்கள் குவித்துள்ளனர். ஹைடன் - கில்கிறிஸ்ட்-க்கு பின் ஆஸ்திரேலியாவின் சிறந்த துவக்க ஜோடி இதுவே. ஆரம்ப காலகட்டத்தில் இவர் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் களமிறங்கப்பட்டு சோதிக்கப்பட்டார். அதன் பின் தனக்கு கிடைத்த துவக்க வீரராகும் வாய்ப்பினை நிரந்தரமாக்கிக் கொண்டார். 2002 ஆம் ஆண்டு ஓய்வினை அறிவித்த இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8500 ரன்கள் குவித்திருந்தார்.
#7) கிரிஸ் கெயில்
யுனிவர்சல் பாஸ் என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் கிரிஸ் கெயில். இவர் ஆரம்ப காலத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நான்காவது இடத்திலும் அதன் பின் ஏழாவது இடத்திலும் களமிறக்கப்பட்டார். இவரின் அதிரடி தன்மையை உணர்ந்த அந்நாட்டு வாரியம் இவருக்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பினை வழங்கியது. 2000 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கெதிராக துவக்க வீரராக களமிறக்கப்பட்ட இவர் 41 ரன்கள் குவித்தார். அதன் பின்னர்2001-ல் கென்யா அணிக்கெதிரான போட்டியில் இவர் குவித்த 154 ரன்கள் இவரை துவக்க வீரராக நிரந்தரமாக்கியது. அதன் மூலம் தற்போது வரை துவக்க வீரராக களமிறங்கி வரும் இவர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் மற்றும் டி20 போட்டிகளில் சதம் என விளாசி பல சாதனைகளை படைத்துள்ளார்.
#6) ரோகித் ஷர்மா
தற்போதைய கிரிக்கெட் வீரர்களுள் தலைசிறந்த துவக்க வீரராக விளங்குபவர் ரோகித் ஷர்மா. இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டார். அதிலிருந்து பல பேட்டிகளில் விளையாடிய இவர் பெரும்பாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே களமிறக்கப்பட்டார். 2013-லிருந்து துவக்க வீரராக களமிறங்கிய இவர் நம் அனைவருக்கும் வித்தியாசமான வீரராகவே தெரிந்தார். துவக்க வீரராக களமிறக்கப்பட்ட முதல் போட்டியிலேயே 83 ரன்கள் குவித்த இவர் இந்திய அணியின் நிரந்தர துவக்க வீரராகவே மாறிவிட்டார். அதன் பின்னர் இவர் ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதங்கள் விளாசியும் அசத்தியுள்ளார்.
இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் வீரர்களைப் பற்றி அடுத்த தொகுப்பில் காணலாம்