ஐசிசி 2019 உலக கோப்பை தொடர் இன்று முதல் துவங்க இருக்கின்றது. உலகின் தலை சிறந்த 10 அணிகள் இந்த பெருமை மிக்க தொடரில் விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர் பிற்காலத்தில் ஜாம்பவனாக உருவெடுக்கலாம். இந்த தொடர் தொடங்கும் முன்னே, சில பயிற்சி ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்கும் தலா இரு போட்டிகள் என்ற வீதம் நடத்தப்படும். இவ்வகை ஆட்டங்களால், இங்கிலாந்து நாட்டின் மைதான நிலவரம் மற்றும் சீதோஷ்ண நிலைகளை அணி வீரர்கள் நன்கு அறிந்து கொள்ள இயலும். அவ்வாறு, நடந்து முடிந்த பயிற்சி ஆட்டங்களில் மூன்று சிறந்த பேட்டிங் செயல்பாடுகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.சதம் கண்டு வியக்கவைத்த தோனி:
பயிற்சி ஆட்டங்களில் பின்வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கினார், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி. வங்கதேச அணிக்கு எதிரான இந்த இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 78 பந்துகளை சந்தித்து 113 ரன்கள் குவித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்தார், தோனி. ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்ற தோனி, 8 பவுண்டரிகள் 7 மலைக்க வைக்கும் சிக்சர்கள் அடித்து இந்திய அணி 359 என்ற ஸ்கோரை எட்ட உதவினார். பின்னர், பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அணியில் இடம்பெற்றிருந்த கே.எல்.ராகுலுடன் இணைந்த தோனி ஐந்தாம் விக்கெட்டிற்கு தங்களது பார்ட்னர்ஷிப்பில் 164 ரன்கள் குவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#2.சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்பிய ஸ்டீவன் ஸ்மித்:
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஓராண்டுக்கு பின்னர், மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்ய முன்வந்த போது போது மைதானத்தில் அமர்ந்திருந்த இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் ஸ்மித்திற்கு எதிராக கூச்சலிட்டனர். அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாது, 102 பந்துகளை சந்தித்து 116 ரன்கள் குவித்து அசத்தினார். 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 297 என்ற ஸ்கோரை எட்ட இவரது ஆட்டம் உதவியது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. நெருக்கடி நிலைமையில் அருமையான பேட்டிங் திறமை மற்றும் இங்கிலாந்து ரசிகர்களின் கரகோசத்திற்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கூடுதல் உத்வேகம் அடைந்திருக்கிறார், ஸ்டீவன் ஸ்மித். இது போன்ற சிறப்பான பல ஆட்டங்களை இந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடரில் அளிப்பார் என இவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
#3.ஷாஹிதியின் மலைக்க வைக்கும் இன்னிங்ஸ்:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிதி அற்புதமான இன்னிங்சை விளையாடினார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு பாடுபட்ட ஷாஹிதி 102 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் உட்பட 74 ரன்களை குவித்தார். இதன் மூலம், பேட்டிங்கிலும் ஆஃப்கானிஸ்தான் அணி நம்பிக்கை அளித்து வருகிறது.
மேற்கூறிய வீரர்கள் மட்டுமல்லாது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாய் ஹோப், நியூசிலாந்து அணிக்கு எதிராக சதத்தை விளாசியுள்ளார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 421 ரன்களை குவித்து சாதனை படைத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.