டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு சிறந்த அணி என்றால் பேட்டிங் சிறப்பானதாக இருத்தல் வேண்டும். ஐபிஎல் தொடரில் கடந்த கால வரலாற்றை காணும் போது பெரும்பாலும் பேட்டிங்கில் வலிமையாக திகழும் அணிகளே கோப்பையை வென்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டு திகழும். சென்னை அணி கடந்த சீசனில் வலிமையான பௌலிங் வரிசை இல்லையெனினும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்ததால் சுமாரான பௌலிங்கை வைத்து அந்த அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த வருடமும் அனைவரது கவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதுதான் அதிகம் உள்ளது. காரணம் வலிமையான அனுபவ பேட்டிங் வரிசையை சென்னை அணி கொண்டுள்ளது. சில அணிகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் உலகக் கோப்பை அருகில் வரவிருப்பதால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாதி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பர் என தெரிகிறது.
நாம் இங்கு கடந்த ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து 2019 ஐபிஎல் தொடரில் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டு உள்ள 3 அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#3 மும்பை இந்தியன்ஸ்
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் அந்த அணியின் மோசமான பேட்டிங். ரோகித் சர்மா சரியான தொடக்கத்தை அளிக்கத் தவறினார். ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டின் தவறான ஷாட் தேர்வு போன்றவை அந்த அணியை பெரிதும் பாதித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குவிண்டன் டிகாக் இனைந்துள்ளார். தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் அசத்தி சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அருமையான தொடக்கத்தை 2019 ஐபிஎல் தொடரில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் கடந்த வருடத்தில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஈவன் லிவிஸ் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அசத்துவார். ரோகித் சர்மா மற்றும் பாண்டியா சகோதரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தூண்களாக திகழ்ந்து எதிரணிக்கு மிகுந்த நெருக்கடியை அளிப்பார்கள். இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக இடம்பெற்றிருப்பது அந்த அணியின் கூடுதல் பலமாகும்.
மேற்கண்ட இந்த பேட்டிங் வரிசை தனியாக நின்று நெருக்கடி சமயங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். மும்பை அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சிதிஸ் லேட் போன்ற வலிமையான உள்ளுர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.