ஐபிஎல் தொடரானது இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 11 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் திறமையான இளம் வீரர்களுக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி அதிரடிக்கு பெயர் போன பல முன்னணி வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற முன்னணி நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு இந்த ஐபிஎல் தொடரில் பல சிறப்பம்சங்கள் அமைந்துள்ளது. சிறப்பம்சம் மிக்க இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய, சிறந்த அண்ணன்-தம்பி ஜோடிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா
இவர்கள் இருவரும் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த ஐபிஎல் தொடர் தான். இவர்கள் இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் சிறந்த ஆல்ரவுண்டர்கள். இருவரும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் மிகச்சிறப்பான விளையாட்டை தற்போது இந்திய அணியில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக குருணால் பாண்டியா சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்று வருகிறார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா இதுவரை இரண்டு அரை சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குருணால் பாண்டியா இதுவரை 39 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில் 668 ரன்களையும், 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
#2) இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான்
இவர்கள் இருவரும் இந்திய அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர்கள். இர்பான் பதான் இடது கை வேகப்பந்து வீச்சாளர். வலதுகை பேட்ஸ்மேன்கள் அனைவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தில் சற்று திணறுவார்கள். எனவே மற்ற பவுலர்களை காட்டிலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று மதிப்பு அதிகம்தான். யூசுப் பதான் அதிரடிக்கு பெயர் போனவர். மைதானத்தில் வந்தவுடன் சிக்ஸர்கள் அடிக்க தொடங்கிவிடுவார். யூசுப் பதான் இதுவரை 164 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில் மொத்தம் 3164 ரன்களை குவித்துள்ளார். அதில் 13 அரை சதங்களும், 1 சதமும் அடங்கும். ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 144.08 ஆகும். இர்பான் பதான் இதுவரை 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1139 ரன்களையும், 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
#3) அல்பி மோர்கல் மற்றும் மோர்னே மோர்கல்
இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வீரர்கள். இருவருமே சற்று உயரமான வீரர்கள் என்பதால், அதிகமாக பவுன்சர்கள் வீசக்கூடிய திறமை படைத்தவர்கள். அல்பி மோர்க்கல் ஐபிஎல் தொடரில் 121 மீட்டர் தூரத்தில் சிக்ஸர் அடித்து, அதிக மீட்டர் சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். மோர்னே மோர்கல் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவர் இதுவரை 70 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் மொத்தம் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அல்பி மோர்கல் இதுவரை மொத்தம் 91 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 141.98 ஆகும்.