இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பெரும்பாலான போட்டியின் வெற்றியினை தீர்மானிக்கின்றனர். அவர்கள் பந்து வீசும் வேகம், கோணம் மற்றும் ஸ்விங் ஆகியவை பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. வலது கை பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் தங்களது விக்கெட்டுகளை இவர்களிடம் பறிகொடுத்து விடுகின்றனர். எனவே உலககோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஒரு இடதுகை வேகப்பந்து வீசாசாளராவது இடம்பிடிப்பர்.
உலககோப்பை தொடர் இருக்கட்டும் டி20 போட்டிகளில் இடதுகை பந்நு வீச்சாளர்களின் அருமை நம் அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரைக் கூட உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிறந்த அணி என கருதப்படும் அனைத்து அணிகளிலும் சிறந்த இடது கை பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்குவகிப்பனர். தற்போதைய உலககோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் (இந்தியாவை தவிர்த்து) தங்களது அணிகளில் சிறந்த இடதுகை பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளன. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமீர், வாகப் ரியாஸ் மற்றும் ஷாகின் அப்ரிடியும், ஆஸ்திரேலியா சார்பில் மிட்சில் ஸ்டார்க், பெஹன்ட்ராப், நியூசிலாந்தில் ட்ரெண்ட் போல்ட், வங்கதேச அணியில் முஸ்தபிசூர் ரகுமான், இலங்கை அணியில் உடானா என சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் உலககோப்பை வரலாற்றில் தங்களது ஆதிக்கத்தை செலுத்திய சிறந்த இடதுகை பந்துவீச்சாளர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3) ஜாகீர் கான்
போட்டிகள் : 23, விக்கெட்டுகள் : 44, மெய்டன் : 12
சிறந்த பந்துவீச்சு : 4/42
இந்தியாவின்தலைசிறந்த பந்து வீச்சாளரான ஜாகீர் கான் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தினை பிடிக்கிறார். இவரின் உலககோப்பை பயணமானது 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் துவங்கி 2011 இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதுடன் முடிவடைந்தது. இவர் இதுவரை இரண்டு முறை உலககோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக பந்து வீசியுள்ளார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் இவரே. இவர் 2003 உலககோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார். எனவே இன்றளவும் இவர் உலககோப்பை வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.
#2) சமிந்தா வாஸ்
போட்டிகள் : 31, விக்கெட்டுகள் : 49, மெய்டன்: 39
சிறந்தபந்துவீச்சு : 6/25
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான சமிந்தா வாஸ் 2003 உலககோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த போட்டியில் இவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இலங்கை அணி வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதில் 9.1 ஓவர்கள் பந்து வீசிய வாஸ் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை இலங்கை அணிக்காக நான்கு உலககோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார் இவர்.
தனது பந்து வீசும் நீளம் மற்றும் வேகத்தினை மாற்றி அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடிப்பவர் வாஸ். இது இவர் 31 போட்டிகளில் 39 மெய்டன் ஓவர்களை வீசியதிலிருந்தே நமக்கு தெரியவரும். இப்படிப்பட்ட ஜாம்பவனான இவருக்கு சரியான மரியாதையுடன் இறுதிப் பேட்டியினை அமைத்துக் கொடுக்க அந்நாட்டு நிர்வாகம் தவறியது. இவர் தான் விளையாடிய கடைசி உலககோப்பை தொடரிலும் இலங்கை அணியை இறுதிப் போட்டிவரை முன்னேற காரணமாக இருந்துள்ளார். இன்றளவும் இவரின் இடத்தினை நிரப்புவதற்கு சரியான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை இலங்கை அணி தேடி வருகிறது.
#1) வாசிம் அக்ரம்
போட்டிகள் : 38, விக்கெட்டுகள் : 55, மெய்டன் : 17
சிறந்த பந்துவீச்சு : 5/28
பாகிஸ்தான்அணி தனது முதல் உலககோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த ஒரே பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தான். உலககோப்பை தொடரில் பங்கேற்ற சிறந்த இடதுகை பந்துவீச்சாளராக பார்க்கும் போது இவருக்கே முதலிடம் கிடைக்கிறது. மொத்தம் 38 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 1987 முதல் 2003 வரையிலான உலககோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி 55 விக்கெட்டுகளை வீழ்த்திய இவரது எகானமி வெறும் 4.04 தான். வேகத்தை காட்டிலும் இவரின் ஸ்விங் தான் இவருக்கு பலமாக அமைந்துள்ளது. 2003 உலககோப்பை தொடரில் நம்பியா அணிக்கெதிரான போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சான 5/28-யை பதிவு செய்தார். 1990 காலகட்டத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் இவரது அருமை தெரியும்.