தற்போது உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் தொடர் 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடராகும். 12வது ஐபிஎல் திருவிழா சீசனில் நிறைய எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன.
ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இளம் வீரர்கள் தங்களின் திறமையை ஆடுகளத்தில் வெளிப்படுத்துவதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக ஐபிஎல் தொடர் திகழ்கிறது. இந்த தொடரில் நிறைய வீரர்களின் ஆட்டத்திறன் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் மூலம் நிறைய இளம் வீரர்கள் தேசிய அணியில் விளையாடி வருகின்றனர். அத்துடன் தங்களது ஆட்டத்திறனை இழந்த வீரர்கள் ஐபிஎல் தொடரை சரியாக பயன்படுத்தி தங்களது பழைய ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணர்ந்து தேசிய அணியில் இடம்பிடிக்க மிகவும் உதவியாக உள்ளது ஐபிஎல் தொடர்.
2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னை சிதம்பரம் ஆடுகளத்தில் நடைபெறவுள்ளது. சில வீரர்கள் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் இடம்பெற்று தங்களது ஆட்டத்திறனை சீரான முறையில் வெளிபடுத்தி வருவர். அவ்வாறு தங்களது சீரான ஆட்டத்திறனை வெளிபடுத்தக்கூடிய 3 வீரர்களை பற்றி காண்போம்.
#1.லாசித் மலிங்கா
தற்போதைய கிரிக்கெட்டில் நிறைய திறமையான பந்துவீச்சாளர்கள் உலக கிரிக்கெட்டில் உருவாகி கொண்டுதான் உள்ளனர்.பேட்ஸ்மேன்கள் பௌலர்களின் பந்துவீச்சை இரண்டு அல்லது மூன்று போட்டிகளிலே கணித்து விளையாட ஆரமிப்பர். ஆனால் சில பௌலர்களின் பந்துவீச்சை மட்டும் சரியாக கணிப்பது கடினமான ஒன்றாகும். அத்தகைய பந்துவீச்சாளர்யை தற்காலங்களில் காணப்படுவது சற்று கடினமான ஒன்றாகும். ஆனால் ஒரு சில பௌலர்கள் தற்போதும் அவ்வாறு தங்களது சீரான ஆட்டத்திறனை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி கொண்டுதான் உள்ளார்கள்.
லாசித் மலிங்கா அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் தனது சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.ஐபிஎல் தொடர்களில் 110 போட்டிகளில் பங்கேற்று 154 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அரணாக விளங்கும் இவரது பந்துவீச்சு சராசரி 19.01 ஆகவும் , ஸ்ட்ரைக் ரேட் 16.61 ஆகவும் உள்ளது. இவர் 4- விக்கெட்டுகள் மற்றும் 5-விக்கெட்டுகளை 4 முறை ஐபிஎல் தொடரில் வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் 6.86 ஆகும். ஐபிஎல்-ல் சிறந்த சாதனை நாயகனாக லாசித் மலிங்கா திகழ்கிறார்.
மலிங்கா மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் சேம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலிங் ஆலோசகராக இருந்தார். தற்போது இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் மலிங்கா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரராக களமிறங்க உள்ளார். 2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் தனது சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை சேம்பியன் பட்டம் வெல்லச் செய்வார் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
#2.சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இருப்பினும் சர்வதேச போட்டிகளில் அவரது ஆட்டத்திறனை கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் தொடர்களில் அவரது சீரான ஆட்டத்திறனிற்கு ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் அடிமையாகி உள்ளனர். சென்னை அணியின் மிக முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் பங்கேற்று 4985 ரன்களை குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார் சுரேஷ் ரெய்னா. இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 163 போட்டிகளில் பங்கேற்று 4948 ரன்களையும் குவித்துள்ளனர். ரோகித் சர்மா 173 போட்டிகளில் பங்கேற்று 4493 ரன்களை குவித்து மூன்றாவது இடத்தையும் வகிக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா 5000 ரன்களை குவித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் ரெய்னா கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிராக ஒரு சதத்தையும் , ஐபிஎல் தொடரில் மொத்தமாக 35 அரை சதங்களையும் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 138.47 ஆகவும் , சராசரி 34.37 ஆகவும் உள்ளது. சென்னை அணியில் இவரது சிறப்பான பங்களிப்பினால் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
ரெய்னா 2019 ஐபிஎல் தொடரிலும் மஞ்சள் நிற சட்டையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி நிறைய சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3.தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடர்களில் இதுவரை 5 வெவ்வேறு அணிகளில் விளையாடி தனது சிறப்பான மற்றும் சீரான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் விக்கெட்கீப்பிங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதல் இடத்தை வகிக்கிறார்.
163 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்கில் 124 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதில் 94 கேட்சுகள் மற்றும் 30 ஸ்டம்பிங்குகள் அடங்கும். இவருக்கு அடுத்தாக 114 விக்கெட்டுகளை வீழ்த்தி தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். 90 விக்கெட்டுகளை வீழ்த்தி ராபின் உத்தப்பா மூன்றாவது இடத்தை வகிக்கிறார்.
2018 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 16 போட்டிகளில் 498 ரன்களை குவித்துள்ளார். இவர் இதுவரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மூன்று சீசனில் விளையாடியுள்ளார்.
இவர் தற்போது இந்திய அணியின் இரண்டாவது ஃபினிஷராக திகழ்கிறார். கடினமான சமயங்களில் ஆட்டத்தினை தன் கட்டுப்பாட்டில் கொண்டு சரியாக கையாண்டு நிறைய சமயங்களில் ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார். அத்துடன் இந்திய டி20 அணியில் வழக்கமான வீரராக எந்த பேட்டிங் வரிசையிலும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
2019 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக வழிநடத்தி கொல்கத்தா அணியை சேம்பியன் பட்டத்தை வெல்லச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.