கிரிக்கெட் போட்டிகளின் முடிவை முன்கூட்டியே எவரும் தீர்க்கமாக கூறிவிட முடியாது. நவீன கால கிரிக்கெட்டில் சில பந்துவீச்சாளர்கள் கூட கைதேர்ந்த பேட்ஸ்மேனாக அவ்வப்போது உருவெடுத்து வருகின்றன. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்கிய பந்துவீச்சாளரான சுனில் நரின், கடந்த இரு கடந்த இரு சீசன்களில் அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேனாகவே களமிறங்கி பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். ஒரு சில நேரங்களில் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறியதால், பந்துவீச்சாளர்கள் ரன்களை குவிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அந்த நேரங்களில் தங்களது அசாத்திய திறமையால் பேட்டிங்கிலும் ஒரு கணம் கலக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் அணியின் ஸ்கோரை உயர்த்தவும் முற்படுவார்கள். அவ்வாறு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் பதினோராவது இடத்தில் களமிறங்கி ஆட்டத்தில் அனல் பறக்க வைத்த தலைசிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.முகமது அமீர்:
இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கும் வீரராக மற்றொரு பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அமீர் பெறுகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்களைக் குவித்து அசத்தியது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்தது, இங்கிலாந்து. இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி விரைவிலேயே 9 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. ஆட்டத்தின் இறுதி கட்ட பேட்ஸ்மேனாக களமிறங்க முகமது ஆமீர், தனது அதிரடி பாணியை தொடுத்தார். ஆக்ரோஷமாக விளையாடிய இவர், பந்துவீச்சாளர்களை நொறுக்கி எடுத்து அரை சதம் கடந்தார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டியில் பதினோராவது இடத்தில் களம் இறங்கி அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 28 பந்துகளை சந்தித்து 58 ரன்கள் குவித்த வேளையில் கிறிஸ் வோக்ஸ் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். ஆமீர் அதிரடியான இன்னிங்சில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. யாஷிர் ஷாவுடன் இணைந்து இவர் உண்டாக்கிய 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் போற்றத்தக்கது.
#2.சோயிப் அக்தர்:
2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆட்டத்தின் இறுதி கட்ட பேட்ஸ்மேன்கள் பலர் பேட்டிங்கில் ஜொலித்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக, பிப்ரவரி மாதம் 22ம் தேதி கேப்டவுனில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது, இங்கிலாந்து. மைக்கேல் வாகன் மற்றும் பால் கோலிங்வுட் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை குவித்தது. இதன் பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் அணி எதிர்பாராவிதமாக 80 ரன்களுக்குள் 9 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. நம்பிக்கையாக விளங்கிய சாக்குலின் முஷ்டாக்குடன் சோயிப் அக்தர் இணைந்தார். அதிரடியாக விளையாடிய இவர், 16 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 பவுண்டரிகளையும் 3 மலைக்கவைக்கும் சிக்சர்களையும் குவித்தார். பரபரப்பாக விளையாடி 43 ரன்கள் குவித்த இவரை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஃப்லின்ட்டாஃப் ஆட்டமிழக்கச் செய்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#3.மக்காயா நிட்டினி:
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகளை உள்ளடக்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது, தென்னாப்பிரிக்கா. இருப்பினும், சொந்த மண்ணைச் சேர்ந்த நியூசிலாந்து 4 போட்டிகளில் வெற்றியும் தென்னாபிரிக்க அணி ஒரு வெற்றியும் பெற்று இருந்தது. எனவே, கடைசி மற்றும் ஆறாவது ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. போட்டியின் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, தனது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியமையால் 119 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை தாரை வார்த்தது. களத்தில் இறுதிகட்ட பேட்ஸ்மேன்களாக விளங்கிய அல்பி மோர்கல் உடன் மக்காயா நிட்டினி இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ச்சியாக ரன்களை குவித்த வண்ணம் இருந்தனர். 3 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களின் வெளுத்து வாங்கிய மக்காயா 35 பந்துகளில் 42 ரன்களை குவித்து இருந்தார். இருப்பினும், ஆட்டத்தின் 50 ஓவர் வரை தாக்குபிடித்தது பாராட்டுகுரியது. ஒரு கட்டத்தில் 130 ரன்களையே தாண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த இணை செயல்பட்டது. இவர்களது பார்ட்னர்ஷிப் உதவியுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்து இருந்தது. இவர்களுக்கு பின்னர், களமிறங்கிய நியூஸிலாந்து அணி 177 என்ற மிகச்சிறிய இலக்கை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு சேஸ் செய்தது.