அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை ஆண்டாண்டு காலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய கிரிக்கெட் அணி. ஆனால், தற்போது சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் இந்திய பந்துவீச்சாளர்களை போல கடந்த காலங்களில் இந்திய அணிக்கு அவ்வாறு சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் மைதானங்கள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகத் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட மைதானங்களில் ஒரு பந்துவீச்சாளர் விக்கெட்களை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. மேலும்,ஒருநாள் போட்டிகளில் மெய்டன் ஓவரை வீசுவது என்பது தற்போதைய பந்துவீச்சாளர்களின் கனவாகவே உள்ளது. இருப்பினும், தங்களது அயராத உழைப்பாலும் முயற்சியாலும் அதிகப்படியான மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றிய தொகுப்பு இது.
#3. ஜாகீர் கான்:
பத்தாண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர், இந்த ஜாகீர் கான். 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிமுகமான இவர், தனது தொடர்ச்சியான பவுலிங் பங்களிப்பால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். 2011- ஆம் ஆண்டில் இந்தியா கோப்பையை வெல்ல இவரும் ஒரு காரணமாக இருந்தார். மேலும், அக்காலகட்டத்தில் இவரது பவுலிங் பங்களிப்பு உலக தரத்திலான ஒன்றாகவே கருதப்பட்டது. தனது 12 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில், 200 போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, இவர் வீசிய மெய்டன் ஓவர்களின் எண்ணிக்கை, 117. இது, இந்திய பந்துவீச்சாளர்களில் மூன்றாவது அதிகபட்சமாகும் .
#2.ஜவகல் ஸ்ரீநாத்:
1991- ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்,ஸ்ரீநாத். வடக்கை பந்துவீச்சாளரான இவர், எக்ஸ்ட்ரா பவுன்சர்களை வீசுவதில் வல்லவர். அதுவும் ஒருநாள் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பந்துவீச்சாளராகவும் சில சமயங்களில், பின்வரிசையில் களமிறங்கி ஓரளவுக்கு ரன் குவிக்கும் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வந்தார். 229 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 315 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர் ஒருநாள் கிரிக்கெட்டில், 137 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இது இந்திய பந்துவீச்சாளர்களில் இரண்டாம் அதிகபட்ச சாதனை ஆகும்.
#1. கபில்தேவ்:
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐசிசியின் உலக கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர், கபில்தேவ். இவர் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. சர்வதேச போட்டிகளில், இந்திய அணி பலமுறை இவரின் பங்களிப்பால் வெற்றி பெற்றுள்ளது. 1978-இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார், இந்த ஹரியானா புயல்.1983-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில்175* ரன்களைக் குவித்து தான் பேட்டிங்கில் சளைத்தவன் அல்ல என்றும் நிரூபித்தார்.1994-இல் இவர் ஓய்வு பெறும் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்னிடம் வைத்திருந்தார்.225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 253 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும்,ஒருநாள் கிரிக்கெட்டில் 235 மெய்டன் ஓவர்களை வீசியது இந்தியளவில் தனி பெரும் சாதனையாக உள்ளது.தற்போது, சர்வதேச கிரிக்கெட் உலகில் இது ஐந்தாவது பெரும் சாதனையாகவும் உள்ளது.
எழுத்து: விஷால் சிங்
மொழியாக்கம்: சே.கலைவாணன்