அதிரடி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருவது, ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் மிக முக்கியமான அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக முறை இறுதிப் போட்டிக்குச் சென்ற ஒரே அணி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது.
ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி தான் வழி நடத்தி வருகிறார். இதுவரை மொத்தம் மூன்று முறை, தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் தலை சிறந்த அணியாக விளங்குவதற்கு முக்கிய காரணம், சென்னை அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் தான். சென்னை அணிக்காக அதிக சிக்சர் விளாசிய பேட்ஸ்மேன்களை பற்றி இங்கு காண்போம்.
#1) மகேந்திர சிங் தோனி ( 179 சிக்சர்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடரில் தலை சிறந்த கேப்டன் என்றால், அது மகேந்திர சிங் தோனி தான். ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, தற்போது வரை இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும்தான் விளையாடி வருகிறார்.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டதால், அந்த இரண்டு வருடம் புனே அணிக்கு விளையாடினார். சென்னை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பல சூழ்நிலைகளில், இவர் தனது அதிரடி மூலம் சென்னை அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இவர் இதுவரை மொத்தம் 179 சிக்சர்களை ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) சுரேஷ் ரெய்னா ( 171 சிக்சர்கள் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான, சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சென்னை அணி, வலுவான அணியாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர். ஐபிஎல் தொடரில் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வரை, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி, இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி, சுரேஷ் ரெய்னாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளினார். அதற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவிற்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகச் சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை மொத்தம் 171 சிக்சர்களை, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) முரளி விஜய் ( 68 சிக்சர்கள் )
ஒரு காலகட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய பேட்ஸ்மேன் தான், முரளி விஜய். அதன் பிறகு இவர் பஞ்சாப் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்பு மீண்டும் சென்னை அணி, ஏலத்தில் இவரை தனது அணியில் எடுத்துக் கொண்டது. இந்த ஆண்டு முரளி விஜய்க்கு சரியாக விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. சென்னை அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில், இவர் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் சென்னை அணிக்காக 67 போட்டிகளில் விளையாடி, அதில் 1676 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை மொத்தம் 68 சிக்சர்களை, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.