ஒருநாள் போட்டிகளில் சேசிங் என்பது பேட்ஸ்மேனை மனதளவில் வலுப்படுத்தும். அதுவே இலக்குகள் அதிக அளவில் இருக்கும்போது விளையாடும் பேட்ஸ்மேன்களின் மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். அந்த நேரத்திலும் விராத் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து தன் அணியிற்காக வெற்றியினை பல முறை தேடித்தந்துள்ளார். எனவே இவரை சேசிங் நாயகன் என்று அனவரும் அழைக்கிறார்கள். இதுவரை இவர் சேசிங்ல் அடித்த சதங்களில் ஒரு முறை மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. இந்நிலையில் விராத் கோலி சேசிங்கில் அடித்த சிறந்த சதங்களை இங்கு காணலாம்.
#1) 183 vs பாகிஸ்தான், டாக்கா 2012
2012 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 330 ரன்னை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தனர். இந்த கடின இலக்கினை துரத்துவதற்காக களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் இரண்டாவது பந்திலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விராத்கோலி சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் குவித்தார். 48 ரன்களில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பின் ரோகித் ஷர்மாவுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு 172 ரன்களும் குவித்து வெற்றியை எளிதாக்கினார். அதிலும் விராத் கோலியின் அதிரடியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திகைத்து போனார்கள். ருத்ரதாண்டவம் ஆடிய கோலி அந்த போட்டியில் 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 22 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். விராத்கோலியின் இந்த அதிரடியில் இந்திய அணி 47.5 ஓவரில் வெற்றி இலக்கை துரத்தியது.இந்த போட்டியில் விராத்கோலி குவித்த 183 ரன்கள் தான் அவரின் ஒருநாள் பேட்டிகளில் அதிகபட்ச ரன் ஆகும்.
#2) 154* vs நியூசிலாந்து , மொகாலி 2016
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய துவக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியுற இந்திய அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்தது. அப்போது விராத்கோலி தோணியுடன் சேர்ந்து அதிரடியாக ஆடி இலக்கை துரத்த துவங்கினார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விராத்கோலி 154* ரன்கள் குவித்து 48.2 ஓவரில் போட்டியை முடித்து வைத்தார். இது அவரின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
#3) 133* vs இலங்கை, ஹோபர்ட் 2012
2012 ஆம் ஆண்டு நடந்த சிபி தொடரில் இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டி அது. அதில் இலங்கை அணி 320 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கினை இந்திய அணி 40 ஓவருக்குள் சேஸ் செய்தால் மட்டுமே இந்திய அணி அடுத்த போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் இருந்தது. இதனை கருத்தில் கெண்டு இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடத்துவங்கினர். ஆனால் அவ்வப்போது விக்கெட்டுகள் சரிந்த வண்ணமே இருந்தது. விராத்கோலியின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி இந்த இலக்கை 37 ஓவரிலேயே சேஸ் செய்து சாதனை படைத்தது.