சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். ஒரு அணி வெற்றி பெறுவதற்கு, பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடுவது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு விக்கெட் கீப்பரின் சிறப்பான பணியும் முக்கியம்தான். பீல்டிங் செய்யும் பொழுது, மற்ற வீரர்களைக் காட்டிலும் விக்கெட் கீப்பர் தான் மிக கவனமாக விளையாட வேண்டும். பேட்ஸ்மேன் சிறிது கோட்டை விட்டு வெளியே சென்றாலும், அவரை ஸ்டம்பிங் செய்வதற்கு கவனமாக காத்திருக்க வேண்டும். இவ்வாறு உலக கோப்பை தொடரில் சிறந்து விளங்கிய விக்கெட் கீப்பர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) குமார் சங்கக்காரா ( 41 கேட்ச், 13 ஸ்டம்பிங் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் ஜாம்பவனான, குமார் சங்கக்காரா. ஒரு காலகட்டத்தில் இலங்கை அணி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த அணியாக திகழ்ந்ததற்கு, முக்கிய காரணம் இவர்தான். தனது சிறப்பான விளையாட்டின் மூலம் பல போட்டிகளில் இலங்கை அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்து, இலங்கை அணிக்கு பெருமை சேர்த்து சென்றுள்ளார். இவர் பேட்டிங்கில் மட்டுமின்றி விக்கெட் கீப்பர் பணியிலும் மிகச் சிறப்பாக விளையாட கூடியவர். இவர் உலக கோப்பை தொடரில் மொத்தம் 37 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 41 கேட்ச் மற்றும் 13 ஸ்டம்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ஆடம் கில்கிறிஸ்ட் ( 45 கேட்ச், 7 ஸ்டம்பிங் )
சிறந்த விக்கெட் கீப்பர்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவனான, ஆடம் கில்கிறிஸ்ட். இவர் ஒரு காலகட்டத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் களத்தில் இருக்கும் வரை அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. ஒரு காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நம்பர்-1 அணியாக விளங்கியதற்கு முக்கிய காரணங்களில், இவரது பேட்டிங் மற்றும் சிறப்பான விக்கெட் கீப்பர் பணியும் ஒன்று. இவர் உலக கோப்பை தொடரில் மொத்தம் 31 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 45 கேட்ச் மற்றும் 7 ஸ்டம்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) மகேந்திர சிங் தோனி ( 27 கேட்ச், 5 ஸ்டம்பிங் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான, மகேந்திர சிங் தோனி. சங்கக்கார மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற சிறந்த விக்கெட் கீப்பர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து விட்டனர். எனவே தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்றால், அது மகேந்திர சிங் தோனி தான். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யக்கூடியதில் வல்லவர்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விக்கெட் கீப்பர் பணியில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலைகளில், தனி ஒருவராக போராடி பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இவர் உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 27 கேட்ச் மற்றும் 5 ஸ்டம்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.