குறைவான நேரத்தில் முடியும் டி20 தொடர்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. டி20யில் அடிக்கடி விளாசப்படும் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் டி20 போட்டியை மேலும் மெருகெற்றி அனைவரையும் கவர்ந்துள்ளது.
முதன் முதலில் கிரிக்கெட் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கிரிக்கெட்டில் டிரெண்டாக இருந்து. பின்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வந்தது. அதற்கு பிறகு 21 ஆம் நூற்றாண்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. டி20 போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கமாக அமைந்தது.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் குறைந்த நேரத்தில் அதிக சிக்சர்களை தாம் விரும்பும் வீரர் விளாச வேண்டும் என விரும்புகின்றனர். இதனாலேயே டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகெங்கும் அதிகமாக விளையாடப்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் உள்ளுர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 175 ரன்களை விளாசியதே இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிக தனிநபர் ரன்களாக உள்ளது. டி20யில் 200 ரன்கள் அடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும்.
ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 200-225 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது. ஆனால் தற்போது 330 ரன்களுக்கு மேல் அடித்தாலும் சேஸ் செய்யும் அளவிற்கு வீரர்கள் தங்களை தயார் செய்து வைத்துள்ளனர். தற்பொழுது ஒரு பேட்ஸ்மேன் 200 க்கு மேல் ரன்களை விளாசும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய வீரர் ரோஹித் சர்மா 3 முறை ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதத்தை விளாசியுள்ளார். இலங்கைக்கு எதிராக இரண்டும் , ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒன்றும் விளாசியுள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் யாரும் 200 ரன்களை அடித்ததில்லை. ஆஸ்திரேலியா அணி வீரர் ஆரோன் ஃபின்ச் ஜிம்பாப்வேவிற்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்கள் விளாசியதே சர்வதேச டி20 போட்டிகளில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாகும்.
தற்போது டி20யில் 200 ரன்களை விளாசும் திறமையுள்ள 4 சிறந்த ஆட்டத்திறனை கொண்டுள்ள வீரர்களை பற்றி காண்போம்.
#4.கிறிஸ் கெய்ல், மேற்கிந்தியத் தீவுகள்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதுபெரும் பேட்ஸ்மேன் கெய்ல் தற்போது சிறிது ஆட்டத்திறனை இழந்திருந்தாலும் , டி20 கிரிக்கெட்டின் தூதராக இன்றளவும் செயல்பட்டு வருகிறார். இவர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால்" யுனிவர்சல் பாஸ்" என அன்போடு அழைக்கப்படுகிறார்.
டி20யில் இவர் ஐபிஎல் தொடரில் அடித்த 175 ரன்கள் மறக்க முடியாத ஒன்றாகும்.அத்துடன் 30 பந்துகளில் சதத்தையும் விளாசியுள்ளார். இடது கை பேட்ஸ்மேன் கெய்ல் 56 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று 1607 ரன்களை அடித்துள்ளார். அத்துடன் 143.05 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 33 சராசரியையும், இரு சதத்தையும் விளாசியுள்ளார்.
#3.காலின் முன்ரோ, நியூசிலாந்து
அடுத்தாக இப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் இடதுகை தொடக்க வீரர் காலின் முன்ரோ உள்ளார். தற்பொழுது இவர் டி20யில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதத்தை விளாசியவர் என்ற வரலாற்று உலகச்சாதனையை படைத்துள்ளார். அத்துடன் தனது நாட்டை சேர்ந்த மார்டின் கப்டில் மற்றும் இந்திய வீரர் ரோஹித் சர்மா ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார்.
அவர் இதுவரை 3 சதங்களை சர்வதேச டி20யில் விளாசியுள்ளார். ஆனால் இந்திய வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20யில் சதத்தினை விளாசி மொத்தமாக நான்கு சதங்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
காலின் முன்ரோ நியூசிலாந்திற்க்காக 48 சர்வதேச டி20யில் பங்குபெற்று 1277 ரன்களுடன் 161.23 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 33.60 சராசரியையும் வைத்துள்ளார். காலின் முன்ரோவிற்கு 20 ஓவர் முழுவதும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் 200 என்ற இமாலய ரன்களை அடிக்க அதிக வாய்ப்புள்ளது.
#2.மார்டின் கப்தில் - நியூசிலாந்து
இப்பட்டியலில் உள்ள மற்றொரு நியுசிலாந்து வீரர் மார்டின் கப்தில். வலது கை பேட்ஸ்மேனான இவர் அதிரடியாக டி20யில் விளையாடுவதில் வல்லவராக உள்ளார். இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்தோர் வரிசையில் ரோஹித் சர்மாவிற்கு முன் இவர்தான் முதன்முதலாக மூன்று சதங்களை விளாசினார்.அத்துடன் நியூசிலாந்து அணியில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியல் முதல் இடத்தில் உள்ளார்.
கப்தில் 75 சர்வதேச டி20யில் பங்குபெற்று 2271 ரன்களை குவித்துள்ளார். இவர் உலகின் சர்வதேச டி20யில் அதிக ரன்கள் விளாசியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 132.88 மற்றும் சராசரி 34.80ம் வைத்துள்ளார்.அத்துடன் மூன்று சதங்களையும் விளாசியுள்ளார். இவர் ஸ்ட்ரோக் ஷாட்களை சிறப்பாக விளையாடுவார். ஒரு போட்டியில் சரியாக செட் செய்து விளையாட ஆரம்பித்துவிட்டால் இவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். மார்டின் கப்தில் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து ஆகிய இரு பந்துவீச்சினையும் வெளுத்து வாங்கும் திறமையுடையவர். இவர் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் நியுசிலாந்து அணியின் சார்பாக சிறப்பாக விளையாடியுள்ளார்.
#1.ரோஹித் சர்மா- இந்தியா
இந்திய வீரர் ரோஹித் சர்மா இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் முதலில் பந்துவீச்சை சரியாக கணிப்பதற்காக நிதானமாக தொடங்கி பின் இரண்டாவது அல்லது மூன்றாவது ஓவர்களுக்குப் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிவிடுவார். இவருடைய பேட்டிங் ஸ்டைல் மற்றும் போட்டியை வழிநடத்தும் விதம் அனைவரையும் கவரும் வகையில் அமையும். இந்திய அணியில் தற்போதைய அதிரடி ஆட்டக்காரர் என்றால் முதலில் நியாபகம் வருவது ரோஹித் சர்மா தான்.
இவர் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு பிரம்மாண்டமான 111* ரன்களை விளாசி சர்வதேச டி20யில் அதிக சதங்களை( 4 சதங்கள்) குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரோஹித் 88 டி20 போட்டிகளில் விளையாடி 2214 ரன்களுடன் 33.04 சராசரியை வைத்துள்ளார். அத்துடன் மார்டின் கப்டிலின் டி20யின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்கும் தருவாயில் உள்ளார். ரோஹித் சர்மா டி20யில் 200 ரன்களை விளாச அதிக வாய்ப்புகள் உள்ளன.
எழுத்து : திவ்யதர்ஷன் தாஸ்
மொழியாக்கம்: சதீஸ்குமார்