ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஒரு சிறந்த பலம்வாய்ந்த அணியாக உலக கிரிக்கெட்டில் திகழ்கிறது. இதற்கு சாட்சியாக 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி இரண்டு முறை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வலிமையை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அணி அதிகபட்சமான 50 ஓவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகிற்கு தலைசிறந்த பேட்ஸ்மேன்களையும், சில அற்புதமான கிரிக்கெட் போட்டிகளையும் கிரிக்கெட் வரலாற்றில் அளித்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக அதிக முறை உலகின் ஒரு சில பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தியுள்ளனர். நாம் இங்கு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்களை குவித்த 4 வீரர்களை பற்றி காண்போம்.
#4: ஏ.பி.டிவில்லியர்ஸ்
தற்போதைய நூற்றாண்டின் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் என்றால் அவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் தான். Mr.360 என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் ஆடுகளத்தில் களமிறங்கினால் பந்தை நான்கு திசைகளிலும் செதறவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய திறமை பெற்றவர். இவர் போட்டியின் தன்மைக்கு ஏற்றவாறு தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தக்கூடியவர்.
கடந்த சில வருடங்களாக எதிரணி யாராக இருந்தாலும் தனது இயல்பான மற்றும் சிறப்பான ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா அணி சார்பாக ஆடி வந்தார். இவருக்கு ரன் குவிக்க மிகவும் பிடித்தமான அணி இந்திய அணியாகும்.
32 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ள ஏ.பி.டிவில்லியர்ஸ் 6 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு வித்தைகாரர் போல் இந்திய அணிக்கு எதிராக மட்டுமன்றி உலகின் கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று திகழ்கிறார்.
#3: ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிராக தனது பேட்டிங்கை சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். சிறந்த கிரிக்கெட் நுட்பத்தை தன் கட்டுக்குள் கொண்டிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிரான தொடரில் மட்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கி விடுவார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான இவர் தனது கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான பேட்டிங்கை ஆடியுள்ளார். இதனால் அனைத்து நேரங்களிலும் சிறந்த பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங் விளங்குகிறார்.
ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிராக 6 முறை 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அத்துடன் இவரது பெயரில் இந்திய அணிக்கு எதிராக 9 அரைசதங்களும் குவிக்கப்பட்டுள்ளது.
#2: குமார் சங்கக்காரா
குமார் சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களை குவித்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்கிறார். இலங்கை அணியின் பேட்ஸ்மேனாக இவர் தனது கிரிக்கெட் வரலாற்றில் 400 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆட்டத்தின் தன்மைகேற்றவாறு விளையாடும் திறமை உடையவர்.
சங்கக்காரா தனது கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடி சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார்.இவர் உலகில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
சங்கக்காராவின் சிறப்பான கிரிக்கெட் வாழ்வில் 25 சதங்களை விளாசியுள்ளார். இதில் 6 சதங்கள் இந்திய அணிக்கு எதிராக அடித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்கக்காரா பேட்டிங் செய்து ரன் விளாசுவதில் வல்லவராக திகழ்வார். குறிப்பாக தனது அன்டை நாடன இந்திய அணியுடன் விளையாடுவது என்றால் ஒரு அதிக உத்வேகத்துடன் தனது ஆட்டத்தை வெளிபடுத்துவார்.
குமார் சங்கக்காரா இந்திய அணிக்கு எதிராக 6 சதங்களை குவித்துள்ளார். இதன்மூலம் இலங்கை அணியில் இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார். அத்துடன் 18 அரைசதங்களை இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இவர் குவித்துள்ளார்.
#1: சனத் ஜெயசூர்யா
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வீரர்களுள் நம்பர்-1 இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த சனத் ஜெயசூர்யா உள்ளார். இவர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் ஜெயசூர்யாவின் அதிரடி பேட்டிங் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.
இவரது பேட்டிங் நுட்பங்கள் மற்றும் அதிரடி நுணுக்கங்கள் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். இவர் ஆடுகளத்தில் களமிறங்கினால் பந்து அதிகமுறை பவுண்டரி லைனில் சென்றுதான் விழும்.
இலங்கை பேட்ஸ்மேன் ஜெயசூர்யா ஒருநாள் போட்டிகளில் 28 சதங்களை குவித்து 13,000 ரன்களை குவித்துள்ளார். இவர் அடித்த 28 சதங்களுள் 7 சதங்கள் இந்திய அணிக்கு எதிராக அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக இவரை தவிர வேறு யாரும் அதிக சதங்களை குவித்தது இல்லை.