நேற்றைய ஏலத்தில் 70 இடங்களுக்கு 351 வீரர்கள் போட்டியிட்டனர். வெறும் 60 இடங்களை மட்டும் அணிகள் நிரப்பின. 8 அணிகளும் விடுபட்ட இடங்களை நிரப்ப தங்களின் விருப்பமான வீரர்களின் மேல் பந்தயம் கட்டினர். ஏலம் எடுக்கப்பட்ட 60 வீரர்களில் சில வீரர்கள் அதிக விலைக்கு பெறப்பட்டனர். சில வீரர்களின் தொகையானது அணிகளின் தேவைக்கேற்ப நியாயமாக இருந்தாலும், சில வீரர்கள் கோடிகளை தாண்டியது பலரை ஆச்சரியப்படுத்தி இருந்தது.
வீரர்களின் விலையானது ஐபிஎல் அணிகள், அவர்களின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை குறிக்கும். அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் தங்களின் அணிக்கு பங்களிக்காமல் போன வரலாறும் உண்டு.
நேற்று ஏலம் விடப்பட்ட வீரர்களில், கூடுதல் விலைக்கு வாங்கப்பட்ட 4 வீரர்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
#4. முகமது ஷமி - கிங்ஸ் XI பஞ்சாப் - 4.8 கோடி
இந்தியா டெஸ்ட் அணியை பொறுத்தவரை மிக முக்கியமான பந்துவீச்சாளராக இருந்தாலும், டி20 போட்டிகளில் இவரது ஆட்டம் சற்று மந்தம் தான். ஷமி பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்சில் அபாயகரமாக திகழ்வார், அதன் காரணமாக இவருக்கு “இரண்டாவது இன்னிங்ஸ் ஷமி” என்னும் பெயரும் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ் இல்லை என்பது பஞ்சாப் அணிக்கு தெரியாது போலும்.
கடந்தகால ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை, ஷமி சொல்லிக்கொள்ளும்படி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை. இவர் 35 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருபத்தோரு விக்கெட்களைச் சாய்த்துள்ளார், அத்துடன் இமாலய பௌலிங் எகானமி 9.14 வைத்துள்ளார். இந்த எகானமியானது ஐபிஎல் போட்டிகளில் நூறு ஓவர்களுக்கு மேல் போட்ட அனைத்து பந்துவீச்சாளர்களை ஒப்பிடுகையில் இதுவே முதல் இடம்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக கடுமையாக உழைத்து வரும் முகமது ஷமி, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது கேள்விக்குறிதான். டி20 போட்டிகளுக்கான யுக்திகளும் ஷமியிடம் எதிர்பார்க்க முடியாது.
உலககோப்பை காரணமாக, இந்திய பந்துவீச்சாளர்கள் ஓய்வெடுக்க கூடும் என்ற காரணத்தினால் மாற்று வீரராக ஷமியை பஞ்சாப் அணி தேர்வு செய்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அவர் வாங்கப்பட்ட விலை சற்று அதிகமே. இவரை 3 கோடிக்கு கீழ் வர்த்தகம் செய்திருக்கலாம்.
#3. கார்லோஸ் பிராத்வைட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 5 கோடி
பந்தை பலமாக அடிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்களில் இவரும் ஒருவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியின் மூலம் உலகப் புகழ் பெற்றார் பிராத்வைட். அந்தப் போட்டியில் வெறும் பத்தே பந்துகளில் 34 ரன்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் ஆல் ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட் டி20 போட்டிகளில் ரன்கள் இன்றி தவித்து வருகிறார். 20 சர்வதேச டி20 போட்டிகளில் இவரின் சராசரியானது வெறும் 19 ஆக இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட்டும் 122 ஆக இருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் இவர் பங்குபெற்ற டி20 போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த ஆண்டில் இவரது சராசரி 17-ஆக உள்ளது, ஸ்ட்ரைக் ரேட்டை பொறுத்தவரை 128-ஆக உள்ளது. இவர் பந்துவீச்சில் 33 போட்டிகளில் சுமார் 38 விக்கெட்டுகளை 8.5 பௌலிங் எகானமியோடு எடுத்துள்ளார்.
இவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இதுவரை பெரிதும் சோபிக்காத கார்லோஸ் பிராத்வைட்டை 5 கோடி கொடுத்து கேகேஆர் வாங்கியது சற்று அதிகம் தான்.
#2. வருண் சக்கரவர்த்தி - கிங்ஸ் KI பஞ்சாப் -8.4 கோடி
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாயாஜால பௌளரான இவர், உள்ளூர் போட்டிகளின் மூலம் இவர் அசுர வளர்ச்சி பெற்றார். கட்டட வடிவமைப்பாளராக இருந்த வருண், கிரிக்கெட் மீது உள்ள ஈடுபாட்டினால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். முதலில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த இவர் முழங்காலில் காயம் ஏற்பட்ட காயத்தினால் சுழற்பந்து வீச்சாளராக மாறியது குறிப்பிடத்தக்கது.
2018 தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் தனக்கான அடையாளத்தை பெற்றார் வருண். தொடர் முழுவதும் போட்டிருந்த 240 பந்துகளில் 125 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்பெறவில்லை (டாட் பால்) என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை அணிக்காக விளையாடி இருந்த வருண், 10 போட்டிகளில் நம்பமுடியாத எகானமியான 4.7-ஐ வைத்திருந்தார்.
டிஎன்பிஎல் போட்டிகளில் இருந்து கிடைத்த உத்வேகத்தால், விஜய் ஹசாரே கோப்பையிலும் நன்கு பங்காற்றியிருந்தார் வருண். 22 விக்கெட்டுகளை வெறும் 9 போட்டிகளிலே சாய்த்திருந்தார்.
இவர் ஏழு விதமான வேறுபாடுகளில் போடக்கூடியவர் : ஆப் பிரேக், லெக் பிரேக், கூகுலி, கர்ரோம் பால், பிலிப்பர், டாப் ஸ்பின்னர், ஸ்லைடிங் யார்க்கர்.
வருண் தான் ஆடியிருந்த அணிக்காக சிறப்பாக பங்காற்றியிருந்தாலும், ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை அவர் ஒரு புதியவர். கட்டாயமாக நன்கு ஆட வேண்டும் என்ற அழுத்தம் இருக்கத்தான் செய்யும். எனவே இவர் சொதப்புவதுற்கு வாய்ப்புள்ளது. மேலும் பஞ்சாப் அணியிடம் ஆப்கானிய மாயாஜால சுழற் பந்துவீச்சாளரான முஜீப், மற்றும் கேப்டன் அஸ்வின் உள்ளதால், ஏன் இன்னொரு ஸ்பின்னர்-க்கு போனார்கள் என்பது தெரியவில்லை.
மூன்று அல்லது நான்கு கோடிகளுக்கு இவரை வாங்கியிருக்கலாம்.
#1. பிரப்சிம்ரன் சிங் - கிங்ஸ் XI பஞ்சாப் - 4.8 கோடி
பிரப்சிம்ரன் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். இவரின் இலட்சிய மனிதர்கள் வீரேந்தர் சேவாக் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட். கிரிக்கெட் மீது இவரின் ஈடுபாடானது தனது மூத்த அண்ணன் வலைப்பயிற்சியில் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்து வளர்ந்ததுதான். இவருடைய மூத்த அண்ணன் வேறு யாருமில்லை ஏலத்தில் மும்பை அணியால் 80 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அன்மோல்ஃபீரித் சிங் தான்.
பிரப்சிம்ரன் சிங் சமீபத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சிக்காக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரூம் தற்போதைய தேர்வாளர்களில் ஒருவரான கிரண் மோரேவால் தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட அளவில் நடந்த 23 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில், அமிர்தசரஸ் அணிக்கு எதிராக 302 பந்துகளில் 298 ரன்கள் எடுத்திருந்தது மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர். இதற்கு முன்பாகவே பஞ்சாப் அணிக்காக கூச் பெஹார் டிராபியில் 557 ரன்களை எடுத்திருந்தார்.
இவரிடம் திறமை இருந்தாலும், இந்திய உள்ளூர் போட்டிகளில் இவர் இன்னும் களம் காணவில்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இவர் நன்கு ஆடுவாரா என்பது சந்தேகமே. யாரும் அறியப்படாத வீரரான இவர் ஐபிஎல் போட்டிகளில் எப்படி ஆடப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.