உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கிரிக்கெட் உலகில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இது போன்ற தொடர்களில் கேப்டன்களின் பங்கு அளப்பெரியது. இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவுகளையும், அணியில் எந்த இடத்தில் யார் விளையாட வேண்டும் போன்ற முடிவுகளை சரியாக கணிக்க வேண்டிய பொருப்பு கேப்டனையே சாரும். பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் நிலைத்தன்மை (கன்சிஷ்டன்ஸி) ஒரு முக்கிய அம்சமாகும். உலகக் கோப்பையில் நிலைத்தன்மை என்பது வேறுபட்டது மற்றும் எந்தவொரு கேப்டனுக்கும் எளிதில் கிடைக்காத வரப் பிரசாதமான சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
பல கேப்டன்கள் ஒரு அணியை வழி நடத்தினாலும் உலக கோப்பையில் அந்த கேப்டன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொருத்தே அவரின் தரம் உயர்த்தப்படுகிறது. ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி நான்கு வித்தியாசமான கேப்டன்களுடன் ஐந்து முறை வென்றுள்ளது. ஆலன் பார்டர், ஸ்டீவன் வாஃக், ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் தங்களது நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளனர். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா இரண்டு முறை வெற்றிகளைப் பதிவு செய்து வெற்றிகரமான அணிகளாக உள்ளனர். புகழ்பெற்ற கேப்டன் கிளைவ் லாயிட் உலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். 1983 ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி அவர்களின் வெற்றிக் கோட்டையை முடிவுக்குக் கொண்டு வந்தனர். பின்னர் எம்.எஸ். தோனி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்காக கோப்பையை வென்று வரலாற்று சாதனையை மீண்டும் பதிவு செய்தார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை முறையே இம்ரான் கான் மற்றும் அர்ஜுனா ரனதுங்காவுடன் உலகக் கோப்பையை பெற்ற மற்ற இரு அணிகள் ஆகும்.
இந்திய அணியை பொறுத்தவரை பல்வேறு கேப்டன்கள் பல்வேறு இக் கட்டான சூழ்நிலையில் அணியை வழி நடத்திச் சென்றுள்ளனர். ஆனால் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த கபில் தேவ் மற்றும் தோனி மட்டுமே. அந்த வகையில் உலக கோப்பையில் அதிக வெற்றிகளை குவித்த முதல் ஐந்து கேப்டன்களின் தொகுப்பை காணலாம்.
#5. இம்ரான் கான் (பாகிஸ்தான்-14 வெற்றிகள்)
1992 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தனது இளம் பாகிஸ்தான் அணியை உலக சாம்பியன் அணியாக மாற்றினார். அந்த அணியின் கேப்டன் இம்ரான் கான். உலகக் கோப்பை வென்ற அணியில் வாசிம் அக்ரம், மோயின் கான், இன்சமாம் உல் ஹக் போன்ற இளம் படையினருடன் ஜாவித் மியான்தத், ரமிஸ் ராஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை ஒருசேர கட்டமைத்து அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1992 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்றாவதுவீரராக களமிறங்கி 72 ரன்கள் அடித்து அணியை நல்ல நிலைமைக்கு கொண்டுசென்றார். கடினமான சூழ்நிலையில் அழுத்தத்தை கையாள்வதில் இம்ரான்கான் வல்லவர். இவரது தலைமையின் கீழ் 1983 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
#4. எம். எஸ் தோனி (இந்தியா- 14 வெற்றிகள்)
உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக பதினோரு வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமைக்குரியவர். உலக கோப்பையை வெல்லும் கனவில் 2011-இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. அத்துடன் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் கடைசி தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற செய்து இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார் தோனி. 2015 ஆம் ஆண்டு மீண்டும் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது எனினும் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி வெளியேறியது.
#3. கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்- 14 வெற்றிகள்)
கிளைவ் லாயிட் முதல் உலக கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமை இவரையே சாரும். இவரது தலைமையின் கீழ், வெஸ்ட் இண்டீஸ் அணி 1975 மற்றும் 1979 இல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளைப் பெற்ற மூன்றாவது மிக சிறந்த கேப்டனாக லாயிட் சாதனை படைத்துள்ளார். இரண்டு முறை சாம்பியன், ஒரு ரன்னர்-அப் ஸ்பாட் என உலகக் கோப்பைகளில் இவர் தலைமையிலான அணியின் வெற்றிகளின் சதவீதம் 88. கிளைவ் லாய்ட் சிறந்தவர்களில் சிறந்தவர் (பிக் கேட்) என கிரிக்கெட் விமர்சகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழி நடத்தியவர்களில் மிக சிறந்த கேப்டனாக இருந்துள்ளார்.
#2. ஸ்டீபன் ஃப்ளெமிங் (நியூசிலாந்து- 16 வெற்றிகள்)
உலகக் கோப்பை தொடர்களில் 16 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை தங்களது அணிக்கு பெற்றுதந்த கேப்டன்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் தலைமையின் கீழ் நியூசிலாந்து அணி கருப்புக் குதிரைகளாகவே ( டார்க் ஹார்ஸஸ்) செயல் பட்டனர். இவரது கேப்டன்சிப்பில் நியூசிலாந்து அணி இரு முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 2007 இல் உலகக் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று ஆனால் அரையிறுதியில் தோல்வியடைந்தது. மேலும், 2007 உலகக் கோப்பையில் அதுவரை நியூசிலாந்து தோல்வியை சந்திக்காமல் இருந்தது. உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை அணியை வழி நடத்தியுள்ளார்.
#1. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா- 26 வெற்றிகள்)
எதிர்பார்த்தபடி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக (பேக் டு பேக்) 24 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளைப் பெற்ற சாதனையாளராகவும் உள்ளார். அவரது தலைமையில், ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் உலகக் கோப்பையை வென்றது. 2011 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவரது தலைமையின் கீழ் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியுடன் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. உலகக் கோப்பையில் வெற்றி சதவீதமாக அதிகபட்சமாக 90 வைத்துள்ளார். உலகக் கோப்பையின் மிக வெற்றிகரமான கேப்டன் என்றால் ரிக்கி பாண்டிங் வரலாற்றை நினைவுபடுத்துவார். இவரது அணியில் உலகின் தலை சிறந்த வீரகளாக மதிக்கப்படும் மத்யு ஹேடன், ஆடம் கில்கிறிஸ்ட், டேமியன் மார்டின், மைக்கேல் பெவன், க்ளென் மெக்ராத், ஜேசன் கில்லெஸ்பி மற்றும் பிரட் லீ ஆகியோர் இடம் பெற்றிருந்ததும் வெற்றிக்கு முக்கிய காரணம்.