1003 வீரர்கள் ஐபிஎல் 2019 காண ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த ஏலம் வரும் டிசம்பர் 18-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. காலியாக இருக்கும் 20 வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் களம் காண சுமார் 232 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
அந்த 232 வீரர்களில் 35 பேர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள், இதில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலக கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு, ஐபிஎல் ஏலத்தில் இருந்து தங்களது பெயரை விலக்கிக் கொண்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் பதிவு செய்துள்ளனர், அந்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை 59 பேர். கிரிக்கெட் வளர்ந்துவரும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் சுமார் 27 பேர் பதிவு செய்துள்ளனர். பல ஆப்கானிய வீரர்கள் குறிப்பாக லெக் ஸ்பின்னர்களை அணிகள் எதிர்பார்க்கக்கூடும் என்று தெரிகிறது.
ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலானது இன்னும் முழுமை அடையவில்லை, ஐபிஎல் அணிகளுக்கு நிர்வாகம் டிசம்பர் 10-ஆம் தேதி தனது விருப்பமான பிளேயர்களின் இறுதி பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே இப்பட்டியலில் பலரை நீக்கயும் புதியவர்களை சேர்த்தியும், பிரதான பட்டியல் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய 5 வெளிநாட்டு வீரர்களைப் பற்றி இத்தொகுப்பில் கீழ்வருமாறு காண்போம்.
#5. ஹார்டஸ் விலோஜென்
ஹார்டஸ் விலோஜென் சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடந்த முடிந்த டி10 போட்டி தொடரில் அசத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். டி10 தொடரில் சுமார் 18 விக்கெட்டுகளை 18 போட்டிகளில் வீழ்த்தியிருந்தார் விலோஜென். திறமையாக செயல்பட்ட இவர் அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக விளங்கினார்.
டி10 தொடரில், இவர் பந்துவீச்சில் 7.70 என்ற சராசரியை வைத்திருந்தார். இவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டும் நம்பமுடியாத வகையில் 6.0 ஆக இருந்தது. 29 வயதான இவர் பௌன்சர்களை பயன்படுத்துவதில் வல்லவர். லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்காகவே தன்னை செதுக்கி கொண்டவர் விலோஜென். இவர் பந்துவீச்சில் போட்டியின் தொடக்கத்திலும் , டெத் ஓவெர்ஸ் எனப்படும் போட்டியின் இறுதி கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்.
இவர் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் நன்கு ஆடி இருந்தாலும், தேசிய அணியில் ஆட இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பெறவில்லை. இவரது கிரிக்கெட் வாழ்க்கையை பொருத்தமட்டில் ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் மட்டுமே ஆடியுள்ளார். 2016-ஆம் ஆண்டு கோல்பாக் ( சொந்த நாட்டில் வாய்ப்புகள் கிடைக்காததால் இங்கிலாந்து கிரிக்கெட் கவுண்டி போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒப்பந்தம்) என்னும் ஒப்பந்தத்தில் சேர்ந்தார் விலோஜென்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் போட்டிகளை புறந்தள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விலோஜென் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு ஏலத்தில் அதிக விலை கொடுக்க அணிகள் தயங்கமாட்டர் என்று கூறப்படுகிறது.
#4. ரீஸா ஹெண்டிரிக்ஸ்
29 வயதான ரீஸா ஹெண்டிரிக்ஸ் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர். தென்னாபிரிக்காவின் டி20 தொடரான மசான்ஸி டி20 லீக்கில் நன்கு ஆடி வருகிறார். சமீபத்தில் டி20 வரலாற்றில் சதங்களை தொடர்ச்சியாக அடித்த இரண்டாவது டி20 பிளேயர் என்னும் பெருமையைப் பெற்றார் ஹெண்டிரிக்ஸ்.
மசான்ஸி டி20 லீக்கில் ரன்களை குவித்து வருகிறார் ஹெண்டிரிக்ஸ். வெறும் ஐந்து போட்டிகளில் 236 ரன்களை குவித்து, வியக்கத்தக்க சராசரி 115.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை 164.76 வைத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.
லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரராக ஹெண்டிரிக்ஸ் இருக்கிறார். ஐபிஎல் எலத்திற்கு வெறும் 10 நாட்களே உள்ள நிலையில், இவர் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டத்தை மேம்படுத்துவதற்காக இவரை ஏலத்தில் எடுக்க போட்டியிடும் என்று தெரிகிறது.
#3. சிம்ரான் ஹெட்மேயர்
21 வயதான இவர், மேற்கிந்திய தீவுகளின் எதிர்காலம் என்று பலராலும் புகழக்கூடிய வீரர். 2018 கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸுக்காக திறம்பட பங்காற்றியிருந்தார் ஹெட்மேயர். களம் கண்ட 12 இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரை சதங்கள் என 440 ரன்களை 40 சராசரியில் அடித்திருந்தார் ஹெட்மேயர். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 150-ஐ எட்டியது.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹெட்மேயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தொடரின் முதல் போட்டியில் சதத்தை விளாசி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஹெட்மேயர். இரண்டாவது போட்டியிலும் 94 ரன்களை வெறும் 64 பந்துகளில் விளாசியிருந்தார். இந்திய பந்து வீச்சை கதி கலங்க வைத்தார் ஹெட்மேயர் என்றே கூறலாம். இவரது ஆட்டத்தில் அதிரடியான ஷாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹெட்மேயர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 594 ரன்களை எடுத்துள்ளார்.
இவரது சராசரி 43.41 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 108.52 ஆக உள்ளது. 3 டி20 போட்டிகளில் களம் கண்டுள்ள ஹெட்மேயர் 31.12 என்ற சராசரி மற்றும் வியக்கத்தக்க 144.34 ஸ்ட்ரைக் ரேட்டுடை வைத்துள்ளார். இவர் ஆட்டத்தின் போக்கை தனியாளாக மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர்.
#2. நிக்கோலஸ் பூரன்
நிக்கோலஸ் பூரன் மற்றுமொரு மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திரம். சமீபகாலமாக பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகிறார் பூரன். 26 வயதான இவர் 2018 கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பார்படாஸ் ட்ரிடென்ட்ஸ் அணிக்காக விளையாடிருந்தார். இவர் 10 ஆட்டங்களில் 267 ரன்களைக் 144.32 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்திருந்தார்.
நவம்பர் மாதத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியில் தேர்வு செய்யப்பட்டார் பூரன்.
மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தார். சமீபத்தில் நடந்த டி 10 போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியிருந்தார் பூரன்.
நார்தன் வாரியர்ஸுக்காக விளையாடிய இவர், தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இத்தொடரில் 324 ரன்களுடன் 54 என்ற சராசரியை வைத்திருந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் உச்சத்தில் இருந்தது அதாவது வியக்கத்தக்க 245.45 என்ற ஸ்ட்ரைக் ரேட். இந்த தொடரில் அதிக சிக்ஸர்களை(33) அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் பூரன்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், ஐபிஎல் 2019-ற்கான ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#1. சாம் கர்ரன்
வரும் ஐபிஎல் ஏலத்தில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் கர்ரன் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவு செய்துள்ள அனைத்து வீரர்களிலும் சாம் கர்ரன் முதன்மையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏலத்தில் பங்குப்பெறும் ஐபிஎல் அணிகளுக்கு இவர் மீது ஒரு கண் இருக்கும்.
20 வயதான இவர் கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்காக களம் கண்டார். இளம் வயதிலேயே தனது ஆட்டத்தினால் உலக ரசிகர்களை கவர்ந்துள்ளார் கர்ரன்.
சாம் கர்ரன் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 404 ரன்கள் குவித்துள்ளார். இவரது டெஸ்ட் சராசரி 36.72 ஆகும். பந்துவீச்சில் இதுவரை 14 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் கர்ரன். இவர் இங்கிலாந்துக்காக 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி, தனது ஆட்டத்திறனை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.
பதிவு செய்துள்ள வீரர்களில், சொல்லிக்கொள்ளும் வகையில் ஆல்ரவுண்டர்கள் இல்லாததால், இவர் அதிக விலைக்கு விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்ரன் தனது அடிப்படை விலையாக 2 கோடியை நிர்ணயித்துள்ளார் . அடிப்படை விலையை தாண்டி, இவரது விலை பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இவர் ஏலத்தை தெறிக்கவிடப் போகிறார்.