2008 முதல் வருடம் தோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல இந்திய வீரர்கள் தங்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் இடமாகவும் உள்ளது. இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களான ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராத்கோலி மற்றும் தோணி ஆகிய அனைவரும் தனித்தனி அணிகளில் பிரிக்கப்பட்டு தங்களது அணிக்காக வெறித்தனமாக ரன்களை குவித்து வருகின்றனர். தங்களது அதிரடி பேட்டிங் மூலம் தங்களது பேட்டிங் சராசரியை கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றனர். இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் அதிக சராசரி வைத்துள்ள முதல் 5 இந்திய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
( குறிப்பு: குறைந்தபட்சம் 500 ரன்கள் அடித்த வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளோம். )
#5) சச்சின் டெண்டுல்கர் - 34.37
இந்த வரிசையில் ஐந்தாவது இடம் வகிப்பவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர். 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இதில் அவர் விளையாடிய கடைசி சீசனிலும் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐபிஎல்-ல் அதிவேகமாக 1000 மற்றும் 2000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர். மொத்தம் 78 போட்டிகளில் விளையாடி, ஒரு சதமும், 13 அரை சதமும் விளாசியுள்ளார். இவரின் சராசரி 34.83 ஆகும். இதன் மூலம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
#4) ரிஷப் பண்ட் - 37.89
ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட், இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறார். 2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமானார் ரிஷப் பண்ட். அதன்பின் தனது அதிரடியால் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் இவர். இதுவரை 39 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு சதம் மற்றும் 9 அரை சதங்களுடன் 1326 ரன்கள் குவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அசத்தினார். அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதால் இவரின் சராசரி தற்போது 37.89-ஐ நெருங்கி உள்ளது. இதேபோல் இவர் இந்த சீசன் முழுவதும் விளையாடும் பட்சத்தில் இவரின் சராசரி இன்னும் அதிகரித்து இந்த பட்டியலில் முதலிடத்தை கூட தொடலாம்.
#3) கேஎல் ராகுல் - 37.51
இந்திய அணிக்காக டி20 போட்டியில் இருமுறை சேசிங்கில் சதமடித்த கேஎல் ராகுல் இந்த வரிசையில் மூன்றாம் இடம் வகிக்கிறார். இதுவரை 54 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1388 ரன்கள் குவித்துள்ளார். கடந்தாண்டு முதல் ஆரம்பம் முதலே தன் அதிரடியை காட்ட துவங்கி விட்டார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர். ஐபிஎல் தொடரில் 10 அரைசதங்கள் அடித்துள்ள ராகுலின் பேட்டிங் சராசரி 37.51 ஆகும்.
#2) விராத்கோலி - 38.11
இந்திய அணியின் கேப்டனான விராத்கோலி இந்த வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கிறார். சர்வதேச கிரிக்கெட்-ல் மூன்று வகையான போட்டிகளிலும் 50-க்கும் மேலாக சராசரி வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். ஐபிஎல் தொடரில் அனைத்து சீசனிலும் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் இவர் இதுவரை அந்த அணிக்காக 4954 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரரும் இவரே. இப்படி பல சாதனைகளுக்கு சோந்தக்காரரான இவரின் ஐபிஎல் சராசரி 38.11.
#1) மகேந்திர சிங் தோணி - 40.16
தற்போதைய சென்னை அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோணி இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார். ஐபிஎல் போட்டியில் பெரும்பாலும் 5வது மற்றும் 6வது இடங்களிலேயே களமிறங்கும் இவர் பெரும்பாலான போட்டிகளில் ஆட்டமிழக்காமலே கடைசி வரை களத்தில் உள்ளார். எனவே இவரின் சராசரி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் 40க்கும் மேல் சராசரி வைத்துள்ள ஒரே இந்தியரும் இவரே. 176 போட்டிகள் விளையாடியுள்ள இவரின் சராசரி 40.16 ஆகும்.