உலகில் கால்பந்தை அடுத்து கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் ரசிகர்கள் அதிகம் என கூறலாம். ஒரு போட்டி என எடுத்துக்கொண்டால் வெற்றி தோல்விகள் சகஜம். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்படி எடுத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே பார்க்கின்றனர். முக்கியமான போட்டிகளின் போது தெருக்கள் காலியாக இருக்கும். முக்கியமான சாலைகளில் வழக்கத்தை விட போக்குவரத்து சற்று குறைவாகவே காணப்படும்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை டிவிக்கு முன்பு அமர்ந்திருப்பார்கள். ஆஷஸ் தொடருக்கு பிறகு அனைத்து மக்களாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள். மக்களால் அதிகம் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகளை பற்றி தான் கீழுள்ள தொகுப்பில் காணவிருக்கிறோம்.
#5 ஐசிசி உலகக்கோப்பை 2015: இந்தியா vs தென்னாபிரிக்கா
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ஒரே குரூப்பான பி பிரிவில் இடம் பெற்றிருந்தனர். தொடர் தோல்விகளுடன் உலகக்கோப்பையில் பங்கு பெற்ற இந்திய அணியை விட கோப்பை வெல்லும் என பலரால் கணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி இடையே போட்டி நடைபெற்றது. ஆனால் இதற்கு முந்தய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 76 ரன்கள் வித்தியாத்தில் வென்ற உற்சாகத்தில் இருந்தது. இதனால் இந்தியா தென்னாபிரிக்கா இடையே ஆனா போட்டிக்கு ஆர்வம் அதிகமானது.
முதலில் ஆடிய இந்தியா 307 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 137 ரன்கள் விளாசினார். 308 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தென்னாபிரிக்கா 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா தரப்பில் 3 விக்கெட்களை சாய்த்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியை 30 கோடி மக்கள் கண்டுகளித்தனர்.
#4 ஐசிசி உலகக்கோப்பை 2015: இந்தியா vs பாகிஸ்தான்
நாம் ஏற்கனவே கூறி இருந்தது போல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் போட்டிகள் அதிக மக்களால் காணப்படும். ஆட்டத்தில் இறுதி வரை ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமேதும் இருக்காது. 2015ம் ஆண்டு உலகக்கோப்பை குரூப் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 300 ரன்களை எட்டியது இந்தியா. வழக்கம் போல் சிறப்பாக ஆடிய கோஹ்லி சதம் அடித்தார். பின்பு இதனை சேஸ் செய்த பாகிஸ்தான் 47 ஆவது ஓவரிலேயே 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஹமது ஷமி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டை சாய்த்தார். இந்த போட்டியை உலகம் முழுவதும் 31.3 கோடி மக்கள் ரசித்தனர்.
#3 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோபி 2017: இந்தியா vs பாகிஸ்தான் (குரூப் ஆட்டம்)
இப்பட்டியலில் 3வது இடம் பிடிப்பது மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ரோபி குரூப் ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா, 320 ரன்கள் எடுத்தது. வழக்கம் போல் சேஸிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் வீரர்கள் வெறும் 170 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா, DLS முறைப்படி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 32.4 கோடி மக்களால் காணப்பட்டுள்ளது.
#2 ஐசிசி உலகக்கோப்பை 2011: இந்தியா vs பாகிஸ்தான் (அரை இறுதி)
மீண்டும் இப்பட்டியலில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரை இறுதி போட்டி மொஹாலியில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 115 ரன்கள் சேர்க்க இந்திய அணி 260 என நல்ல ஸ்கோரை எட்டியது. வஹாப் ரியாஸ் தனது வேகத்தால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெவிலியன் திரும்ப வைத்தார். சிறப்பாக பந்து வீசிய இவர், 45 ரன்கள் வழங்கி 5 விக்கெட்களை சாய்த்தார். 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியை 49.5 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
#1 ஐசிசி உலகக்கோப்பை 2011: இந்தியா vs இலங்கை (இறுதிப்போட்டி)
நீங்கள் நினைத்தது சரி தான். இப்பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது இந்தியா மற்றும் இலங்கை இடையே 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டி. 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான அணி உலக கோப்பையை வென்று சாதித்தது. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என்பதால் எப்படியாது வென்றிடவேண்டும் என்ற முனைப்பில் இருந்த இந்திய அணி, தோனியின் இமாலய சிக்ஸருடன் வெற்றி வாகை சூடியது. உலகம் முழுவதும் இந்த போட்டி 55.8 கோடி மக்களால் காணப்பட்டுள்ளது.