இந்தியன் பிரீமியர் லீக்கானது இந்திய இளம் வீரர்களுக்கு தங்களது திறனை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடிக்க காரணமாய் உள்ள களமாக விளங்கி வருகிறது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஃபார்ம் இன்றி தவிக்கும் வீரர்களும் கூட அவ்வப்போது தங்களது ஃபார்மை இந்த தொடரின் மூலம் நிரூபித்தும் வருகிறார்கள். இந்த தொடரில் அந்தந்த அணியில் விளையாடும் வீரர்கள் ஏலத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் வீரர்கள் அனைவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. இருப்பினும், பல வீரர்கள் தங்களது சக்திக்கும் அப்பாற்பட்டு விளையாடி தங்கள் அணியை வெற்றி பெற செய்துள்ளனர். ஆனாலும் சில வீரர்கள் தங்களை முழுமையாக இந்த விளையாட்டில் ஈடுபடுத்த தவறுகின்றனர். அவ்வாறு, ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு தங்களது பொன்னான வாய்ப்பை வீணடித்தும் உள்ளனர். அப்படிப்பட்ட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள் பற்றியும் அவர்கள் ஏலம் போன தொகையை பற்றியும் இங்கு காண்போம்.
5.முகமது ஆசிப் ( $ 650, 000 ) :
2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கியபோது பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடரில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது . அவ்வாறு பங்கு கொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை, அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்றும் கூட கூறலாம்.ஏனென்றால், தற்போது உள்ளதுபோல இந்திய ரூபாய் கணக்கில் ஏலம் விடும் முறை அப்போது கடைபிடிக்கவில்லை. அதற்கு மாறாக அமெரிக்க டாலர் கணக்கில் ஏலம் விடும் முறை கையாளப்பட்டது. இதனால், அந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆசிப் எனும் பந்துவீச்சாளர் $ 650, 000 என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனார். அந்த தொடரில் 32 ஓவர்களை வீசிய இவர் வெறும் 8 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றம் அளித்தார்.
4. மஷ்ரஃப் மோர்டசா ( $ 600,000 ) :
2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனான மஷ்ரஃப் மோர்டசா விளையாடியதை அறிந்தவர்கள் ஒரு சிலரே. ஆல்ரவுண்டரான இவர், தொடர் முழுவதுமே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சோபிக்க தவறினார். குறிப்பாக, அந்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் பேட்டிங்கில் வெறும் 2 ரன்களை மட்டுமே குவித்து நான்கு ஓவர்கள் பந்துவீசி 58 ரன்களை வாரி வழங்கி தனது மோசமான பார்மை வெளிப்படுத்தினார்.
3. பவன் நெகி ( INR 8.5 கோடி ) :
2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்கிய ஆல்ரவுண்டர் பவன் நெகி, அடுத்த ஆண்டு அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். இதனால், ஐபிஎல் ஏலத்திற்கு வந்த அவர், டெல்லி அணியால் 8.5 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டார். மேலும், இவரே அந்த ஆண்டின் அதிக தொகைக்கு ஏலம் போன இந்தியராகவும் இருந்தார். அந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய இவர், பேட்டிங்கில் மொத்தம் 57 ரன்களை மட்டுமே குவித்து பவுலிங்கில் வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி அணி நிர்வாகத்திற்கு பேரதிர்ச்சி அளித்தார்.
2. டைமல் மில்ஸ் ( INR 12 கோடி ) :
2017 இல் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 12 கோடிக்கு ஏலம் போனவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டைமல் மில்ஸ். இவர் இந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டில் அனைவராலும் அறியப்பட்டார். இது பெங்களூர் அணி நிர்வாகத்திற்கு 2014ஆம் ஆண்டு யுவராஜ் சிங்கை 14 கோடி ரூபாய் என்ற அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதுக்கு அடுத்து, இரண்டாவது மோசமான தேர்வாகும். மேலும், அந்த தொடரின் ஐந்து போட்டிகளில் விளையாடிய மில்ஸ், வெறும் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
1. யுவராஜ் சிங் ( INR 16 கோடி ) :
பவன் நெகியை 2016-இல் எடுப்பதற்கு முன்னர் யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த மோசமான அனுபவம், இந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்திற்கு உண்டு. 2015-இல் பெங்களூர் அணிக்காக ஓராண்டு விளையாடிய பின்னர் அந்த அணியால் விடுவிக்கப்பட்டார், யுவராஜ் சிங். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மிக அதிக தொகைக்கு டெல்லி அணிக்காக ஒப்பந்தம் ஆனார். அந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 248 ரன்களை குவித்தும் பவுலிங்கில் வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி 8-க்கு மேல் எக்கனாமிக்கை கொண்டும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், யுவராஜ் சிங். இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரரும் இவரே.
எழுத்து: சச்சின் அரோரா.
மொழியாக்கம்: சே.கலைவாணன்.