கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் களமிறங்கும் வீரர்கள் பந்துகளை ஏற்றவாறு ரன்களை குவித்து வருவர். 300 ரன்களை இலக்காக குவித்தாலே வெற்றிபெறுவதற்கு போதுமானதாக கருதப்படும். எனவே களமிறங்கும் வீர்கள் நிதானமாக ஆடி ரன்களை தேவைக்கேற்ப எடுப்பர். ஏனென்றால் இதில் அதிரடியாக ஆட முயற்சிக்கும் போது தேவையில்லாமல் தனது விக்கெட்டினை இழக்க நேரிடும். அதனால் தனது அணிக்கு பின்னால் களமிறங்கப்படும் வீர்களின் மீது அழுத்தம் ஏற்பட்டு அது அணியின் வெற்றியினை பாதிக்கும். எனவே வீரர்கள் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் பந்துகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ரன்களை குவிக்கவே விரும்புவர். ஆனால் ஒருசில வீரர்கள் தங்களது அசாத்திய ஆட்டத்தினை வெளிப்படுத்தி டி 20 போட்டிகளில் விளையாடுவது போன்று அதிவேகமாக 150 ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ள டாப்-5 வீரர்களை பற்றிய தொகுப்பு இது.
(குறிப்பு: இதில் முதல் தர போட்டிகளும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.)
#5) கோலின் டி கிராண்ட்ஹோம் ( 80 பந்துகள் )

நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிராண்ட்ஹோம் இந்த வரிசையில் ஐந்தாவது இடம் வகிக்கிறார். 2014 ஆம் ஆண்டு நியூஸிலாந்து ஏ அணியும் நார்தோம்ப்டன்ஷிரி அணிகளும் மோதின. அதில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி மிகவும் தடுமாறியது. 48 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கிராண்ட்ஹோம் மற்றும் முன்ரோ அந்த அணியினரின் பந்துவீச்சினை பறக்க விட்டனர். அதிரடியாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து 150 ரன்களை கடந்தனர். இதில் கிராண்ட்ஹோம் 80 பந்துகளிலேயே 150 ரன்களை கண்டது அசத்தினார். அப்போதைய காலகட்டத்தில் இதுவே அதிவேகமாக 150 ரன்கள் கடந்த இன்னிங்ஸ் ஆக இருந்தது. இவரின் அதிரடியில் மூலம் அந்த போட்டியை நியூஸிலாந்து ஏ அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
#4) தினேஷ் கார்த்திக் ( 80 பந்துகள் )

இந்த வரிசையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நான்காம் இடம் வகிக்கிறார். அப்போதைய கலகட்டநாளில் தமிழக அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் பல போட்டிகளை ஒற்றையாளாக போராடி தமிழக அணிக்கு வெற்றியினை தேடித்தந்துள்ளார். அந்தவகையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் மூலம் 376 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி இந்த இலக்கை நெருங்க முடியாமல் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தினேஷ் கார்த்திக் இந்த 150 ரன்களை குவிக்கும் போது கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைந்த பந்துகளில் 150 ரன்களை கடந்தவராக இருந்தார். இந்த சாதனையானது நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏபி டீவில்லியர்ஸால் முறியடிக்கப்பட்டது.
#3) ஜாஸ் பட்லர் ( 76 பந்துகள் )

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் இந்த வரிசையில் மூன்றாவது இடத்துக்கு சொந்தக்காகரராகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் 76 பந்துகளில் 150 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார் இவர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டும் பார்க்கும் போது இவர் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தையும் பிடிக்கிறார்.
#2) மேத்யூ வேடு ( 68 பந்துகள் )

சமீபத்தில் இந்த வரிசையில் இடம்பிடித்துள்ளவர் மேத்யூ வேடு. ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரரான இவர் உலககோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. எனவே இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் ஆஸ்திரேலிய ஏ அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடியாக சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இவர். அதன் பின் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெர்பைஷிரி அணிக்கெதிராக 68 பந்துகளிலேயே 150 ரன்களை இடந்தார். இவரின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியை எளிதில் வென்றது. இதன் மூலம் இவர் விரைவில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#1) ஏபி டிவில்லியர்ஸ் ( 64 பந்துகள் )

இந்த வரிசையில் ஏபி டிவில்லியர்ஸ் தான் முதலிடத்தில் இருப்பார் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட் உலகின் மிஸ்டர் 360° என அழைக்கப்படும் இவர் பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளாக பறக்கவிடும் தன்மை பெற்றவர். இவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் மற்றும் சதமடித்த வீரர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய இவர் வெறும் 64 பந்துகளிலேயே 150 ரன்களை கடந்து கிரிக்கெட் உலகில் எவரும் படைக்காத புதிய சாதனையை படைத்தார். இந்நிலையில் இவர் 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.