சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வீரர் ஒருவர் 100 ரன்கள் அடிப்பது என்பது எளிதான காரியம் இல்லை. இருந்தபோதிலும் விராத் கோலி போன்ற வீரர்கள் அதை சுலபமாக எட்டிவிடுகின்றனர். ஆனாலும் சதமடித்த பின்னர் தேவையில்லாத ஷாட்களை ஆடி ஆட்டமிழந்துவிடுகின்றனர். இருந்த போதிலும் ஒருசில வீரர்கள் சதமடித்த பின்னும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடுகின்றனர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 125 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 100-லிருந்து 125 ரன்களுக்குள்ளேயே அதிகமுறை விக்கெட்டுகளை இழந்துவிடுகின்றனர். ஆனால் ஒருசில வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 125-க்கும் மேற்ப்பட்ட ரன்களை விளாசியுள்ளனர். அந்த பட்டியலில் உள்ள முதல் 5 இடங்களில் வீரர்களைப் பற்றிய தொகுப்பு இது.
#5) ஜெயசூர்யா - 10 முறை
இந்த வரிசைையில் ஐந்தாம் இடம் வகிப்பவர் இலங்கை அணியின் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யா. இலங்கை அணியின் அதிரடி துவக்க வீரராக விளங்கியவர் இவர் இலங்கை அணிக்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13430 ரன்கள் குவித்துள்ளார். இதில் 28 சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்சமாக 189 ரன்கள் குவித்துள்ளார் ஜெயசூர்யா. இவர் இதில்10 முறை 125+ ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு சொந்தக்காரர் ஆகிரார் சனத் ஜெயசூர்யா.
#4) கிரிஸ் கெயில் – 11 முறை
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் 2000 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதிரடி துவக்க வீரரான இவர் 286 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் அவர் 24 சதங்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன்கள் குவித்துள்ளார் கெயில். இவர் அடித்த 24 சதங்களில் 11 முறை 125 ரன்களுக்கும் மேலாக குவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 135 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த வரிசையில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் கெயில்.
#3) விராத் கோலி – 13 முறை
இந்த வரிசையில் இவரைத் தவிர மற்ற அனைவருமே துவக்க வீரர்கள். விராத் கோலியின் ஆட்டத்தைப் பற்றி நாம் அறிந்ததே. இவர் களமிறங்கி செட்டில் ஆகிவிட்டால் போதும் எவராலும் இவர் விக்கெட்டை வீழ்த்தவே முடியாது. சதமடிப்பது இவருக்கு சாதாரண விஷயமாக இருந்தாலும் அதன் பின் தன் விக்கெட்டை இழந்து விடுகிறார் கோலி. ஒருநாள் போட்டிகளில் சுமார் 39 சதங்களை விளாசியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார் இவர். இவர் அடித்த 39 சதங்களில் 13 முறை 125 ரன்களுக்கும் மேலாக குவித்துள்ளார். இதன் காரணமாக இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார் கோலி.
#2) ரோகித் சர்மா – 14 முறை
இந்த வரிசையிலேயே குறைந்த சதங்கள் விளாசிய வீரர் இவரே. தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த துவக்க வீரராக கருதப்படுபவர் ரோகித் சர்மா. ரோகித் சர்மா களத்திலிருந்தாலே எதிரணி பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்துவிடுவார். காரணம் இவர் சதமடித்தவுடன் பந்துகள் மைதானத்தை விட்டு வெளியே பறக்கும். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன்னான 264* குவித்த வீரர் இவரே. இதுமட்டுமல்லாமல் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ளார் ரோகித் சர்மா. இவர் ஒருநாள் போட்டிகளில் 22 சதங்கள் விளாசியுள்ளார். அதிலும் 14 முறை 125 ரன்களுக்கும் மேலாக குவித்துள்ளார். இவர் இதே உத்வேகத்தில் விளையாடும் பட்சத்தில் இவர் முதலிடத்தை விரைவில் எட்டிப்பிடிப்பார்.
#1) சச்சின் டெண்டுல்கர் – 19 முறை
கிரிக்கெட் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நியாபகத்துக்கு வரும் வீரர் சச்சின் டெண்டுல்கர். அதற்கு காரணம் அவரது தலைசிறந்த ஆட்டத்திறனே. இந்திய அணிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடியுள்ளார் இவர். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 49 சதங்கள் விளாசியுள்ளார். தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர் இவரே. அதிலும் 19 முறை 125 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலம் இந்த வரிசையில் முதலிடத்தை பிடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் போட்டிகளில் இவர் படைத்த சாதனைகள் பல. அதில் இதுவும் ஒன்று.