உலகின் வெற்றிகரமான டி20 லீக்கில் ஒன்றான ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணி என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். காரணம், கட்டுக்கோப்பான திட்டமிடுதலும் தகுதியான தலைமையும் இந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணம். மும்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டமும் இருமுறை சிஎல்டி20 பட்டமும் வென்றுள்ள சென்னை அணி, தான் பங்கேற்றுள்ள அனைத்து தொடர்களிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையையும் கொண்டுள்ளது. பல்வேறு பெருமைகளை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிக ரன்களை குவித்த முதல் 5 வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5. சுப்பிரமணியன் பத்ரிநாத்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்ஸ்மேனான பத்ரிநாத், 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர், 2014ஆம் ஆண்டில் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஓப்பனிங் பேட்டிங்கில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் அணியை தூக்கி நிறுத்த தேவையான மிடில் ஆர்டரில் இறங்கி தனது பங்களிப்பை அற்புதமாக அளித்துள்ளார், பத்ரிநாத். இவர் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் அணியின் வெற்றிக்கு பாடுபட்டுள்ளார், இந்த வலதுகை பேட்ஸ்மேன்.
இவர் பங்கேற்றுள்ள 67 இன்னிங்சில் 1441 ரன்களை 30.66 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 118.89 என்ற வகையில் அமைந்துள்ளது. இவரது ஐபிஎல் வாழ்க்கையில் மொத்தம் 11 அரைசதங்களை அடித்துள்ளார். இவரது ஐபிஎல் வரலாற்றில் 71* குவித்ததே சிறந்த பேட்டிங் ஆகும்.
#4.முரளி விஜய்:
பத்ரிநாத்தை போலவே இவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஆவார். ஆனால், ஐபிஎல் தொடரின் 3-வது சீஸனில் தான் தொடர்ச்சியான போட்டியில் பங்கேற்று சில அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். 2011இல் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் 95 ரன்களும் 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஒரு சதமும் அடித்துள்ளார். 2013ம் ஆண்டுவரை சென்னை அணியில் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தார். பின்னர், இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மீண்டும், கடந்த ஆண்டில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்த ஆண்டும் சென்னை அணியிலேயே நீடிக்கிறார்.
மொத்தம் இவர் விளையாடி உள்ள 65 இன்னிங்சில் 1612 ரன்களும் 26.43 என்ற சராசரியில் 127.84 என்ற ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார், முரளி விஜய். ஏழு அரை சதங்களும் இரு சதங்களையும் சென்னை அணிக்காக அடித்துள்ளார் முரளி விஜய். 127 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்ததே இவரது அதிகபட்ச ஐபிஎல் ரன்களாகும். மேலும், சென்னை அணிக்காக இவர் அடித்துள்ள 67 சிக்சர்கள் இந்த அணியின் அதிக சிக்சர்களை அடித்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
#3.மைக் ஹசி:
"மிஸ்டர் கிரிக்கெட்" என்று அழைக்கப்படும் மைக்கல் ஹஸ்ஸி சென்னை அணியின் பிரதான பேட்ஸ்மேனாக 2008 ஆம் ஆண்டு முதல் களம் இறங்கி வந்தார். 2011இல் மேத்யூ ஹைடன் இல்லாதபோது அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார், மைக் ஹசி. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்து ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக மாறியது இவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. 2014ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டும் இவருக்கு ஆட்டத்தில் களமிறங்க அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை பின்னர், அடுத்த ஆண்டே சென்னை அணியில் இணைந்தார், ஹசி. கடந்த ஆண்டு முதல் இவர் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
மொத்தம் 49 இன்னிங்சில் 1768 ரன்களை 42.10 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 123. 64 என்ற வகையில் உள்ளது. சென்னை அணிக்காக பதிமூன்று அரை சதங்களும் ஒரு சதமும் இவர் குவித்துள்ளார். 116 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்ததே இவரது அதிகபட்ச ரன்களாகும். மேலும், 181 பவுண்டரிகளை விளாசிய இவரே சென்னை அணியின் அதிகபட்ச பவுண்டரிகளை அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் வகிக்கிறார்.
#2.மகேந்திர சிங் தோனி :
சென்னை அணியின் தொடர் வெற்றிகளுக்கு அணியின் கேப்டன் தோனி தான் அனைத்திற்கும் காரணம். ஈராண்டு தடை காலத்திற்கு பின்னர், மீண்டு வந்த சென்னை அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல வைத்தவர், மகேந்திர சிங் தோனி. இவருக்கு வயதானாலும் அந்த அனுபவத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றிவிடுகிறார், தல தோனி. இவர் விளையாடியுள்ள 135 இன்னிங்சில் 18 அரை சதங்கள் உள்பட 3599 ரன்களை 41.97 என்ற சராசரியுடன் குவித்துள்ளார்.
மேலும், இவரது 140.68 என்ற ஸ்ட்ரைக் ரேட் சென்னை வீரர்களிடையே அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 79 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது இவரது அதிகபட்ச ரன்களாகும். 242 பவுண்டரிகளும் 156 சிக்சர்களும் சென்னை அணிக்காக இவர் அடித்துள்ளார்.
#1.சுரேஷ் ரெய்னா:
ஐபிஎல் தொடரின் பத்து சீசன்களிலும் தலா 400 ரன்களை குவித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை கொண்டவர், சுரேஷ் ரெய்னா. இவர் சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ளார். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் வரை இவர் சென்னை அணிக்காக ஒரு போட்டியையும் கூட தவறியதில்லை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், மூன்று போட்டிகளுக்கு இவர் சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
சென்னை அணிக்காக மொத்தம் இவர் விளையாடியுள்ள 148 இன்னிங்சில் 4,260 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது சராசரி 34.53 என்றும் ஸ்ட்ரைக் ரேட் 139.01 என்ற வகையிலும் உள்ளது. மேலும், சென்னை அணிக்காக அதிக முறை அரைச்சதங்களை கடந்தவர் என்ற பெருமையும் தன் வசம் வைத்துள்ளார். இவர் 367 பவுண்டரிகளையும் 162 சிக்சர்களையும் அடித்துள்ளார்.