இந்திய அணியானது தலைசிறந்த பல பேட்ஸ்மேன்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தவகையில் இந்திய அணி அந்த அளவிற்கு சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகளில் பெரும்பாலான வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்கர்களாலும் விரும்பி பார்க்கப்படுவது பேட்டிங் தான். தங்களது சிறு வயதிலேயே கவாஸ்கர், டிராவிட் மற்றும் சச்சின் போன்ற வீரர்கள் தங்களது பேட்டிங் திறமையை நிரூபித்தனர். அந்த வகையில் குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) சேட்டன் ஷர்மா ( 19 வயது 246 நாட்கள் )
1980களின் பிற்காலத்தில் சேட்டன் ஷர்மா இந்திய அணியின் சிறந்த மிதவேக பந்துவீச்சாளராக திகழ்ந்தார். இவர் சிறந்த வேகம் மற்றும் கோணத்தில் பந்துகளை வீசும் தன்மை பெற்றவர். இவர் தனது 16 வயதில் ஹரியானா மாநிலத்திற்காக தனது முதல்தர போட்டிகளில் அறிமுகமானார். பின்னர் 17 வயதில் சர்வதேச போட்டிகளிலும், 18 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். இவர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட்டுகளை 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வீழ்த்தி அசத்தினார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்ல் 118 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சேட்டன் ஷர்மா. இதன் மூலம் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸ்ல் 385 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் ஒரு விக்கெட்டினை வீழ்த்தி மொத்தம் 6 விக்கெட்டுகளுடன் அந்த போட்டியை நிறைவு செய்தார். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் அந்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் கவர்ந்தார் இவர். அதன் பின்னர் 1986-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலேயே 16 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் இவர். அதுமட்டுமின்றி இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில்10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் இவர். இறுதியில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#4) இஷாந்த் ஷர்மா ( 19 வயது 97 நாட்கள் )
இந்திய அணியின் உயரமான பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா இந்த பட்டியலில் நான்காம் இடத்தினை பிடிக்கிறார். இவர் தனது 18 வயதில் டெல்லி அணிக்காக தனது முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். அதன் பின்னர் குறுகிய காலத்திலேயே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி வங்கதேசம் செல்லும் போது அதன் டெஸ்ட் தொடரில் இஷாந்த் ஷர்மா அறிமுகமானார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் ஆஸ்திரேலிய ஜாம்பவானான ரிக்கி பாண்டிங் விக்கெட்டை பலமுறை வீழ்த்தினார். இன்றளவும் இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முக்கிய வீரராக விளையாடி வருகிறார்.
#3) நரேந்திர ஹிர்வானி ( 19 வயது 85 நாட்கள் )
இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளரான நரேந்திர ஹிர்வானி தனது அறிமுக டெஸ்ட் போட்டிகளிலேயே தனது சிறப்பான பந்து வீச்சினை பதிவு செய்தார். 16 வயதில் முதல்தர போட்டிகளில் அறிமுகமான இவர் அதன் பின் மூன்றாண்டுகளில் 19 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். அதில் முதல் இன்னிங்ஸ்ல் 8 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸ்ல் 8 விக்கெட்டுகள் என ஒரே போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இன்றளவும் அறிமுக போட்டியின் சிறந்த பந்துவீச்சாக வரலாற்றில் இதுவே பார்க்கப்படுகிறது.
#2) எல் சிவராமகிருஷ்ணன் ( 18 வயது 333 நாட்கள் )
தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் இந்த வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கிறார். தனது 16 வயதில் தமிழக அணிக்காக ரஞ்சி போட்டிகளில் அறிமுகமான இவர் அடுத்த வருடமே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதகரான டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகமாகும் போது குறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 1984-ல் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்ல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இவர். அதன் மூலம் இந்திய அணி அந்த போட்டியை வென்றது. ஆனால் இவர் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார்.
#1) ரவி சாஸ்திரி ( 18 வயது 290 நாட்கள் )
தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தான் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு சொந்தக்காரர் ஆகிரார். இவர் இந்த பட்டியலில் மட்டுமல்லாமல் உலக அரங்கில் குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்திலும் உள்ளார். பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் இந்தியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இவர் விளங்கினார். 1980-ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் இவர். இதுவரை மொத்தத்தில் இவர் 80 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.