டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு நல்ல துவக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். துவக்க வீரர்கள் பொதுவாகத் தலைசிறந்த வேகப்பந்து வீச்சளார்களை எதிர்த்தும், நீண்ட நேரம் விளையாடும் சூழ்நிலைகளில் செயல்பட வேண்டுமென்பதால் மனோநிலை, திறமை, ஆட்ட நுணுக்கம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
டெஸ்ட் வரலாற்றில் பல துவக்க வீரர்கள் இருந்தாலும் ஆட்டத்தின் அழுத்தம் காரணமாகவும், மோசமான மனோநிலை காரணமாகவும் பலரும் தனது திறமையை வெளிப்படுத்தத் தவறினர். இருப்பினும் ஒருசில வீரர்கள் தனது ஆட்டத்தின் மூலம் வரலாற்றில் தனக்கென ஒரு இடம் பிடித்தது மட்டுமின்றி தனது அணிக்குத் தாக்கத்தையும் எற்படுத்தியுள்ளார்கள்.
இவற்றில் டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 8 துவக்க வீரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
#8 கார்டன் கிரீனிட்ஜ்
1974 ஆம் ஆண்டு கார்டன் கிரீனிட்ஜ் தனது முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். அதிலிருந்து 17 வருடங்களாகத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வந்த இவர் 108 போட்டிகளில் 7558 ரன்கள் குவித்தார். சராசரி 44.72 ஆகும்.
ஆட்ட நுணுக்கங்களைத் தனது பலமாக வைத்திருந்த கிரீனிட்ஜ் தடுப்பாட்டத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவருடன் துவக்க வீரராகச் செயல்பட்ட டெஸ்மண்ட் ஹேன்ஸ் 148 போட்டிகளில் 6482 ரன்களை குவித்தார். இன்றளவிலும் இவர்களைச் சிறந்த துவக்க வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.
#7 ஜெஃப்ரி பாய்கட்
இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஜெஃப்ரி பாய்கட், இவரது காலங்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அதிக மனஉறுதியும் தரமான ஆட்ட நுணுக்கங்களையும் கொண்ட இவர் நீண்ட நேரம் விளையாடும் தன்மை பெற்றவர்.
108 போட்டிகளில் விளையாடி 8114 ரன்களை குவித்தார். சராசரி 47.72 ஆகும். மிகவும் திமிர்பிடித்த வீரர் என அப்போது கருதப்படும் பாய்கட் தனது அணி வீரர்களுடனும் கூட நட்பைக் கடைபிடித்ததில்லை.
#6 வீரேந்தர் சேவாக்
டெஸ்ட் போட்டிகளில் மற்ற துவக்க வீரர்களைப் போல் இல்லாமல் சேவாக் தனது அதிரடி ஆட்டத்தை யுக்தியாகக் கொண்டவர். இந்திய அணிக்காக முச்சதம் அடித்த முதல் வீரர் ஆவார்.
சேவாக்கிடம் சரியான ஆட்டநுணுக்கம் இல்லாமல் இருந்தாலும், தனது திடமான மனோநிலையின் மூலம் எந்தவொரு அணியாக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
"ரிச்சார்ட்ஸ் ஒய்வு பெறும்பொழுது அதிரடி ஆட்டம் இத்துடன் முடிவிற்கு வந்தது என எண்ணினேன். ஆனால் அதன்பின்பு வந்த சேவாக் அதை மாற்றிவிட்டார், அதிரடியின் அரசன் சேவாக்" என்று சேவாக்கை புகழ்ந்தார் பாகிஸ்தானின் ரமிஸ் ராஜா.
#5 கிரீம் ஸ்மித்
டெஸ்ட் வரலாற்றில் வெற்றிகரமாகக் கேப்டனான ஸ்மித் பேட்டிங்கிலும் திறமை வாய்ந்தவர். இடது கை வீரரான இவர் 'ஹூக்' 'பூல்' போன்ற 'ஷாட்'களை எளிதில் ஆடக்கூடியவர். டெஸ்ட் வரலாற்றில் சந்தேகமின்றி சிறந்த துவக்க வீரர்களில் ஒருவர் ஆவார். 117 போட்டிகளில் விளையாடிய இவர் 9265 ரன்களை குவித்துள்ளார். 48.25 இவரது சராசரி ஆகும்.
"நான் இன்னும் ஓரிறு வருடம் ஸ்மித் விளையாடுவாரா என நினைத்தேன். ஆனால் இது அவரது முடிவு, இதுவே ஒய்வு பெற சரியான தருணம் என அவர் நினைத்திருக்கலாம், இருப்பினும் பல வருடங்களாகச் சிறப்பாக விளையாடி வந்த இவருக்கு எனது வாழ்த்துக்கள்" என ஏ பி டிவில்லியர்ஸ், ஸ்மித் ஒய்வு பெறும் தருணத்தில் கூறினார்.
#4 லென் ஹட்டன்
லென் ஹட்டன் டெஸ்ட் வரலாற்றில் தலைசிறந்த துவக்க வீரர் என "விஸ்டன் கிரிக்கெட்டர்'ஸ் அல்மனாக்" புகழ்ந்துள்ளது. இவர் சிறந்த துவக்க வீரர் மட்டுமின்றி இங்கிலாந்து அணியை வழிநடத்தி அதிலும் வல்லவர் என நிருபித்தார். 79 போட்டிகளில் விளையாடிய இவர் 6971 ரன்களை குவித்தார். சராசரி 56.67 ஆகும்.
"நாங்கள் நல்ல நண்பர்கள், ஹட்டன் நான் பார்த்த வீரர்களில் சிறந்த துவக்க வீரர், ஏனெனில் நாங்கள் விளையாடிய காலங்களில் கடினமான, ஆடுகளங்களில் விளையாடியுள்ளோம். அவரின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது" என டெனிஸ் காம்டன் புகழ்ந்தார்.
#3 அலஸ்டைர் குக்
இடதுகை துவக்க வீரரான அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். 1000,2000, மற்றும் 3000 ரன்களை விரைவாக கடந்த இளைய வீரர் என்ற சாதனையை தக்கவைத்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்ப்பந்து வீச்சாளர்களை எளிதில் ஆடக்கூடிய இவர் 161 டெஸ்ட் போட்டிகளில் 12254 ரன்களை குவித்துள்ளார். சராசரி 44.88 ஆகும்.
"குக் இங்கிலாந்து அணியின் உண்மையான ஜாம்பவான் ஆவர், தனது ஆட்டத்த்தின் காரணமாக மட்டுமல்லாமல், அவரது மனப்பான்மையின் காரணமாகவும், அவரது தியாகங்கள், அவர் தன்னைத் தானே நடத்திய விதத்தையும் கொண்டே ஜாம்பவானாக திகழ்கிறார்" என கிரகாம் கூச் புகழ்ந்தார்.
#2 மத்தேயு ஹேடன்
ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானான மத்தேயு ஹேடன் அதிரடி துவக்க வீரர் ஆவர். இவர் லாரா வைத்திருந்த 375 ரன் சாதனையை 380 ரன்களை குவித்து முறியடித்தார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 8625 ரன்களை குவித்துள்ளார். சராசரி 50.73 ஆகும்.
"அவருடன் விளையாடுவதற்கான ஒரு முழுமையான கௌரவம், பாக்கியம், மற்றும் அவருடன் ஃவிளையாடியதில் பெருமைபடுகிறேன். நான் விளையாடிய ஒவ்வொரு அணியிலும் அவரை பெற விரும்புகிறேன்" என மெக்ராத் புகழ்ந்துள்ளார்.
#1 சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர், மிகவும் திறமை வாய்ந்த துவக்க வீரரான இவர் எந்தவொரு நாட்டிலும் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவரின் அர்ப்பணிப்பு மற்றும் மனோநிலை ஒப்பிட முடியாதவையாகும்.
அனைத்து வித பந்துவீச்சையும் எளிதில் ஆடக்கூடிய திறமை பெற்ற கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ளார்.
"ஒரு துல்லியமான பாதுகாப்பு மற்றும் வியத்தகு துப்பாக்கிச்சூடுடன் கூடிய ஒரு பாக்கெட் அளவிலான போர்வீரன். பெரிய போரில் அசத்த கூடிய சிறந்த செயல்திறன்" என கோலின் கோட்ரி புகழ்ந்துள்ளார்.
இம்ரான் கான், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர் மற்றும் ஆண்டி ராபர்ட்ஸ் ஆகியோர் மணி நேரத்திற்கு 90 மைல் வேகத்தில் வீசப்பட்ட பந்துகளை எதிர் கொண்டவர் கவாஸ்கர், தனது நேர்த்தியான ஸ்ட்ரோக் விளையாட்டின் மூலம் ஆதிக்கம் செலுத்தினார்.
எழுத்து
பிரவிர் ராய்
மொழியாக்கம்
கார்த்திக் ராம்