டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில்(இரண்டாவது இன்னிங்ஸில் 2வதாக பேட்டிங் செய்யும் அணியின் இன்னிங்ஸ்) ரன் குவிப்பில் ஈடுபடுவது என்பது மிகப்பெரிய சவாலாக பேட்ஸ்மேன்களுக்கு இருக்கும். இந்த சூழ்நிலையில் கடந்த 3 வருடங்களாக கிரிக்கெட் அணிகள் ரன் குவிக்க கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. 2016 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் 250+ ரன்கள் 5 முறை மட்டுமே சேஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆடுகளத்தின் தன்மை மாறுதல், மற்றும் 4வது மற்றும் 5வது நாள் டெஸ்ட் இன்னிங்ஸில் வீரர்கள் சோர்வடைதல் போன்றன காரணியாக திகழ்கிறது.
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கும் இலங்கை, 8வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள், 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே இதுவரை 250+ ரன்களை 4வது டெஸ்ட் இன்னிங்ஸில் வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இதனை தலா ஒரு முறை செய்துள்ளது. ஆனால் இலங்கை இதனை 3 முறை செய்து அசத்தியுள்ளது.
நாம் இங்கு கடைசி 3 வருடங்களில் 250+ ரன்கள் சேஸ் செய்யப்பட்ட 5 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் பற்றி காண்போம்.
#1 இலங்கை vs ஜீம்பாப்வே, கொலும்பு (2017)
ஜீம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என இலங்கையை வீழ்த்தி அசத்தியது. இதைத்தொடர்ந்து ஒரெயொரு டெஸ்ட் போட்டியில் ஜீம்பாப்வே இலங்கையை எதிர்த்து மோதியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜீம்பாப்வேயில், கிராய்க் எர்வினின் 160 என்ற சிறப்பான ரன்களினால் முதல் இன்னிங்சில் 356 ரன்களை குவித்தது. ரெங்னா ஹேராத் தனது சுழலில் 32 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜீம்பாப்வே இலங்கையை 346 ரன்களில் மடக்கியது. அதிகபட்சமாக உப்புல் தரங்கா 71 ரன்கள் குவித்தார். ஜீம்பாப்வே கேப்டன் கிரேம் கிரிமர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தின்ர். மற்ற பௌலர்கள் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜீம்பாப்வே 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஒரு நிலையான பார்ட்னர் ஷீப்பிற்கு ஜீம்பாப்வே ஏங்கிக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் களம் கண்ட ஷீகாந்தர் ரஜா (127), பீட்டர் மோர் (40), மல்கோல்ம் வாலர் (68) மற்றும் கேப்டன் கிரேம் கிரிமர் (48) ஆகியோரது பங்களிப்பால் கடைசி 5 விக்கெட்டுகளுக்கு 318 ரன்கள் சேர்க்கப்பட்டது. இலங்கை பந்துவீச்சாளர்கள் ஜீம்பாப்வேவின் டாப் ஆர்டரை எளிதாக வீழ்த்தியது. ஆனால் கடை நிலை பேட்டிங்கை கட்டுப்படுத்த தவறியதால் 387 என்ற இலக்கை தன் தலைமேல் ஏற்றிக் கொண்டது.
387 என்ற இலக்கு 4வது இன்னிங்ஸில் அடைவது சாதரண விஷயமல்ல. இருப்பினும் இலங்கை பேட்ஸ்மேன்கள் ஜீம்பாப்வே சுழற்பந்தை சரியாக பயன்படுத்தி கொண்டு அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட தொடங்கியது. குசல் மென்டிஸ் (66), திக்வெல்லா (66) மற்றும் குணரத்னே (80*) ஆகியோரது பங்களிப்பினால் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை ஜீம்பாப்வேவிற்கு எதிராக அதிக ரன் வித்தியாசத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்று சாதனை படைத்தது.
#2 இங்கிலாந்து vs மேற்கிந்தியத் தீவுகள், ஹேண்டிங்லே, 2017
2017ல் மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. எட்ஜ்பாஸ்டோனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேண்டிங்ளேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியும் மண்ணின் மைந்தர்களுக்கே ஆதரவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஷை ஹோப் இப்போட்டியின் இரு டெஸ்ட் இன்னிங்ஸிலும் சதத்தினை விளாசி மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 என்ற சுமாரான ரன்களில் சுருட்டப்பட்டது. ஷெனான் கப்ரீல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். மேற்கிந்திய தீவுகள் பதிலளிக்கும் வகையில் கிராய்க் பிராத்வெய்ட்(147) மற்றும் ஷை ஹோப்பின்(147) அற்புதமான சதத்தினால் முதல் இன்னிங்சில் 427 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 169 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் 3வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு 8 விக்கெட்டுகளை இழந்து 490 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. ஜோ ரூட், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரைசதம் விளாசியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 321 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஷை ஹேப் இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களை குவித்ததுடன், கிராய்க் பிராத்வெய்டுடன் பார்டனர்ஷீப்பில் ஈடுபட்டு 144 ரன்களை சேர்த்து மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஷை ஹோப்-பின் இரு சதத்திற்காக ஆட்டநாயகன் விருதினை வென்றார். ஆன்டர்சன், பிராட், வோக்ஸ், ஸ்டோக்ஸ், மொய்ன் அலி ஆகியோரை கொண்டு மிகவும் வலிமையான பௌலிங் வரிசையை கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக ஷை ஹோப் சிறப்பாக விளையாடினார்.
#3 தென்னாப்பிரிக்கா vs இலங்கை, டர்பன், 2019
இலங்கை அணி இங்கிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிராக அந்நிய மண்ணிலும் கடும் தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் தென்னாப்பிரிக்காவில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இலங்கை இழக்கும் என அனைவரும் எண்ணினர்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இலங்கை 11 முறை தோல்வியும், 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1 முறை சமனில் முடிந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் எந்த ஆசிய அணியும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா முழு அதிக்கத்தை செலுத்தியது. இருப்பினும் குசல் பெரரா 4வது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட்த்தின் போக்கை மாற்றினார். பேட்டிங் செய்ய சற்று கடினமான ஆடுகளமான டர்பனில் தென்னாப்பிரிக்கா 235 ரன்களை முதல் இன்னிங்சில் குவித்தது. இலங்கை தனது முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்டது. கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸியின் பொறுப்பான ஆட்டத்தால் 90 ரன்களை இரண்டாம் இன்னிங்ஸில் குவித்தார். இதன் மூலம் இலங்கைக்கு 303 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸில் 226 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. குசல் பெராரா அணியின் வெற்றிக்கு முழு பொறுப்பேற்று விளையாடிக் கொண்டிருந்தார். நம்பர் 11 பேட்ஸ்மேன் பெர்னான்டோவுடன்(6) சேர்ந்து 78 ரன்களை கடைசி விக்கெட்டிற்கு குவித்தார் குசல் பெரரா.
குசல் பெரரா இப்போட்டியில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 153 ரன்களை எடுத்தார். டேல் ஸ்டேய்ன், வெர்னோன் பிளாந்தர், காகிஸோ ரபாடா, கேசவ் மஹாராஜ், ஆலிவர் போன்ற சிறந்த பௌலர்கள் தங்களது நுணுக்கமான பௌலிங்கை வெவ்வேறு கோணங்களில் இலங்கை பேட்ஸ்மேன் குசல் பெரராவிற்கு எதிராக வெளிபடுத்தியும் அது பலிக்கவில்லை. பெரரா 304 என்ற இலக்கை கிட்டத்தட்ட தனி ஒருவராக இலங்கையை அடையச் செய்தார்.
இதைத்தொடர்ந்து போர்ட்ஸ் ஆஃப் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி இலங்கை என்ற பெருமையை பெற்றது.
#4 இலங்கை vs நியூசிலாந்து, காலே, 2019
தற்போது நடைபெற்று வரும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் 250+ ரன்கள் இலங்கை சேஸ் செய்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் காலேவில் நடந்த முதல் டெஸ்டில் 4வது இன்னிங்ஸில் இலங்கைக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் திமுத் கருடாரத்னே மற்றும் லஹீரு நிரமன்னே ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 164 ரன்கள் பார்ட்னர் செய்து விளையாடினர். திரமன்னே 64 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். கருடாரத்னே பொறுப்பாக விளையாடி சதம் விளாசி மொத்தமாக 122 ரன்களை விளாசினார். இதன்மூலம் இலங்கை 6 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையிலே வெற்றி பெற்று அசத்தியது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 247ற்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களை குவித்தது. பின்னர் நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் பி ஜே வாட்லிங்கின் 77 மற்றும் சோமர் வில்லின் 40ன் மூலம் 285 ரன்களை அடித்தது.
நியூசிலாந்தின் சிறந்த சுழற்பந்துவீச்சிற்கு இடையில் 268 ரன் இலக்கை இலங்கை அடைவது சற்று கடினம் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால் இலங்கை எளிதாக இந்த இலக்கை சேஸ் செய்து உலக டெஸ்ட் சேம்பியன் ஷீப்பின் புள்ளிப்பட்டியலில் தனது கணக்கை தொடங்கியது.
#5 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஆஸஷ், ஹேண்டிங்லே, 2019
2019 உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்து நாயகன் பென் ஸ்டோக்ஸ் மீண்டுமொருமுறை தன்னை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக நிறுபித்துள்ளார். ஹேண்டிங்லேவில் நடந்த இப்போட்டியில் 4வது இன்னிங்ஸில் இங்கிலாந்திற்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து 286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில் நம்பர் 11 பேட்ஸ்மேன் ஜேக் லீச், பென் ஸ்டோக்ஸுடன் கைகோர்த்தார். ஜேக் லீச் வருகையின் மூலம் பென் ஸ்டோக்ஸ் சற்று சுதந்திரமாக ரன் குவிப்பில் ஈடுபட தொடங்கினார். ஸ்டோக்ஸ் கடைசி விக்கெட்டிற்கு 76 ரன்களை ஜேக் லீச்சுடன் சேர்ந்து குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 1-1 என ஆஸஷ் தொடர் சமன் செய்யப்பட்டுள்ளது. பேட்டிசன், பேட் கமின்ஸ், நாதன் லயான், ஹசில் வுட் போன்றோது வலிமையான பந்துவீச்சை தடுத்து விளையாடி ஜேக் லீச் 17 பந்தில் 1 ரன் எடுத்தார். ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸருடன் 135 ரன்களை குவித்தார்.
இந்த டெஸ்ட் வெற்றியானது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்றாகும். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 179 என்ற மிகச் சுமாரான ரன்களில் சுருண்டது. அதன்பின் இங்கிலாந்து 67 ரன்களில் ஆஸ்திரேலிய பௌலர்களிடம் சரணடைந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 259 ரன்களை குவித்து மொத்தமாக 359 ரன்களை இங்கிலாந்திற்கு நிர்ணயித்தது.
மீண்டுமொருமுறை இங்கிலாந்து வெற்றிக்கு பொறுப்பேற்று விளையாடத் தொடங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவுடன் 89 ரன்கள் பார்டனர் ஷீப்பும், கடைநிலை பேட்ஸ்மேன்களுடன் பொறுப்பான ஆட்டத்தையும் வெளிபடுத்தினார். ஆச்சரியமளிக்கும் விதமாக கடந்த 3 வருடங்களில் 250+ ரன்கள் சேஸ் செய்யப்பட்ட டெஸ்ட் இன்னிங்ஸில் ஹேண்டிங்ளே மைதானம் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது.