2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை தக்கவைத்துள்ள இந்திய அணி தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடந்த டெஸ்ட் தொடரில் குறிப்பிடும்படி ஒரு போட்டியிலாவது வென்றது.
ஓரு நாள் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி முதன்முதலாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற தொடரை வென்றது. மேலும் ஆசிய கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
டி20 போட்டியில் இந்திய அணி இந்த ஆண்டு ஒரு தொடரில் கூட தோற்கவில்லை. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, விண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றது. மேலும் இலங்கையில் நடைபெற்ற மூன்று நாடுகள் பங்கேற்ற நிதஹாஸ் கோப்பையையும் இந்திய அணி வென்றது.
இந்த தொகுப்பில் பார்மட் வரியாக இந்திய வீரர்களின் சிறந்த இன்னிங்ஸ் பற்றி காண்போம்
டி20 - தினேஷ் கார்த்திக் (வங்கதேச அணிக்கு எதிராக)
2018 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் பங்கேற்ற நிதாஹஸ் கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற இந்திய அணி 2 ஓவர்களில் 34 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.
அப்பொழுது ஏழாவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ருபேல் ஹுசைன் வீசிய 19 ஓவரில் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் குவித்தார். இதில் 2 பௌண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஓவரின் ஐந்தாம் பந்தில் விஜய் ஷங்கர் ஆட்டமிழக்க கடைசி பந்தில் இந்திய அணி 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. 4 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர் என்ற நிலையில் சௌம்யா சர்க்கார் வீசிய ஓவரின் கடைசி பந்தை தோனி போன்று சிக்ஸர் அடித்து இந்தியா அணிக்கு வெற்றியை தேடி தந்தார் தினேஷ் கார்த்திக் .8 பந்துகளில் 27 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் .
பின்னர் நடந்த தொடரில் சிறப்பாக விளையாடி 498 ரன்கள் குவித்தார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டி20 அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
டெஸ்ட் - சேடேஸ்வர் புஜாரா (ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக)
இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டி வெல்ல முக்கிய காணமாக இருப்பவர் சேடேஸ்வர் புஜாரா. 2018 ஆம் அண்டு இந்திய அணி வெளிநாடுகளில் வென்ற அனைத்து போட்டிகளிலும் புஜாரா அரை சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது விளையாடிவருகிறது.
அடிலெய்டு நகரின் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்சின் இரண்டாவது ஓவரில் KL ராகுல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய புஜாரா வழக்கம் போல தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மறுமுனையில் விக்கெட்கள் வீழ்ந்த போதும் புஜாரா பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் பொறுமையாக விளையாடி 119 பந்துகளில் 35 ரன்களை குவித்த புஜாரா ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் சற்று அதிரடியாக விளையாடினார். நாளின் கடைசி செஷனில் 109 பந்துகளில் ரன்கள் 77 குவித்தார். முதல் இன்னிங்சில் மொத்தம் 123 ரன்கள் குவித்த புஜாரா துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சிலும் பொறுமையாக விளையாடிய புஜாரா 204 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது. ஆட்டநாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார் .
ஒரு நாள் போட்டி- விராட் கோலி (தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக)
ஒரு நாள் போட்டிகளில் சேஸ் மாஸ்டர் என்று கருதப்படுபவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தான் ஒரு நாள் போட்டி விளையாடியுள்ள அனைத்து நாடுகளிலும் சதம் அடித்துள்ளார் கோலி. தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு இந்த வருடம் துவக்கத்தில் இந்திய அணி சுற்றுபயணம் மேற்கொண்டது
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவுடன் களமிறங்கினார் கேப்டன் கோலி. மறுமுனையில் தவான் அதிரடியாக விளையாடியதால் கோலி மெதுவாக விளையாடினார்.
தவான் ஆட்டமிழந்தவுடன் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது, இருப்பினும் கோலி பொறுமையாக விளையாடி 119 பந்துகளில் தனது 34 ஆவது ஒரு நாள் போட்டி சதத்தை அடித்தார். இது கோலி ஒரு நாள் போட்டிகளில் மெதுவாக அடித்த சதமாகும் சதம் அடித்த பின்னர் அதிரடியாக விளையாடிய கோலி அடுத்த 40 பந்துகளில் 60 ரன்களை குவித்தார் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 159 பந்துகளில் 160 ரன்கள் குவித்தார். இந்திய அணி போட்டியை 124 ரன் வித்தியாசத்தில் வென்றது.