2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை ஆகிய இரண்டையும் இந்திய அணி வென்றது. இந்த இரு தொடர்களிலுமே யுவராஜ் சிங் ஹிரோவாக திகழ்ந்தார். அதேபோல் ஐபிஎல் தொடர் ஆரமித்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய தொடர் 2019 தொடர் வரை சிறந்த ஆட்டக்காரராக ஐபிஎல்-லில் விளங்குகிறார். ஐபிஎல் முதல் சீசனில் கிங்ஸ்XI பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த இவர் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இவர் இதுவரை 5 வேறுபட்ட ஐபிஎல் அணிகளில் விளையாடியுள்ளார்- கிங்ஸ் XI பஞ்சாப்,புனே வாரியர்ஸ் இந்தியா,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,டெல்லி டேர்டெவில்ஸ்,சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.2019 ஐபிஎல் சீசனில் 6வது அணியாக 3 முறை சேம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியில் அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். நாம் இங்கு ஐபிஎல் வரலாற்றில் யுவராஜ் சிங்கின் சிறந்த சாதனைகளை காண்போம்.
#1.ஒரே ஐபிஎல் சீசனில் 2 முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர்
ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பௌலிங்கை பலமுறை வெளிபடுத்தியுள்ளார்.இவரது சுழலில் ஒரே ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருமுறை ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011 ஐசிசி உலககோப்பையில் யுவராஜ் சிங் தனது மாயாஜால சுழலில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே சீசனில் 2 முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அதிக பட்சமாக ஒரு போட்டியில் 29 ரன்களை அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகனாமி ரேட் ஒரு ஒவருக்கு 7.43 ஆகும். யுவராஜ் சிங்கின் மிகப்பெரிய ஹிட்டிங் திறமை அனைவரும் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கின் ஒரு தனிப்பட்ட சாதனை என்றால் அது ஒரே ஐபிஎல் சீசனில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது தான். 2009ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டாவது ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் இருமுறை ஒரே சீசனில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இன்று வரை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் யுவராஜ் சிங். இவரது முதல் ஹாட்ரிக் விக்கெட் டர்பனில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வந்தது. முதல் ஹாட்ரிக்கில் ராபின் உத்தப்பா, காலிஸ், மார்க் பௌசர் போன்றோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சீசனில் இரண்டாவது ஹாட்ரிக்கை ஜோகன்னஸ்பார்கில் டெகான் சார்ஜர்ஸ் (தற்போது சன் ரைசர்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அணிக்கு எதிரான வந்தது. இரண்டாவது ஹாட்ரிக்கில் கிப்ஸ், ஆன்ட்ரிவ் சைமன்ஸ், வேனு கோபால் ராவ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமித் மிஸ்ரா வெவ்வேறு ஐபிஎல் தொடர்களில் 3 ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக முறை ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை வைத்துள்ளார்.
#2. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்
யுவராஜ் சிங் 2008 முதல் 2017 வரை ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றால் மிகுந்த ஆர்வத்துடன் ஐபிஎல் அணி நிர்வாகிகள் அவரை ஏலம் கேட்பர். இவர் 2008 முதல் 2010 வரை கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் விளையாடினார். பின்னர் 2011 முதல் 2013 வரை புனே வாரியர்ஸ் இந்தியா (தற்போது இந்த அணி ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டது) என்ற அணியில் விளையாடினார். அதன்பின் 2014 ஐபிஎல் சீசன் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 14 கோடி என்ற அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர்தான் ஐபிஎல் - லில் 14 கோடி என்ற அதிக விலைக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர் ஆவார்.
அத்தொடரில் 375 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை யுவராஜ் சிங் வீழ்த்தினார். பின்னர் 2015 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணியால் விடுவிக்கப்பட்டார். அந்த வருட ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 கோடி என்ற மிக அதிக விலைக்கு ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்கியது. 12 வருட ஐபிஎல் ஏல வரலாற்றில் யுவராஜ் சிங்கிற்கு அளிக்கப்பட்ட 16 கோடியே ஐபிஎல் ஏலத்தில் இதுவரை ஒரு வீரருக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இன்றளவும் உள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 248 ரன்களை குவித்தார்.
#3.ஐபிஎல் வரலாற்றில் 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு அதிக ரன்களை அடித்தவர்
யுவராஜ் சிங் 2014 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியால் 14 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் யுவராஜ் சிங் இனைந்து 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு 132 ரன்களை குவித்தனர். இதுவே இன்றளவும் ஐபிஎல் வரலாற்றில் 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு வந்த அதிக ரன்களாகும். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்து தடுமாறி வந்தது. அந்நிலையில் யுவராஜ் சிங் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர்களின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக மாற்றி 132 ரன்களை குவித்தனர்.
இந்த அற்புதமான பார்ட்னர் ஷிப்பால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் 32 பந்துகளை எதிர்கொண்டு 58 ரன்களையும், யுவராஜ் சிங் 38 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 83 ரன்களை விளாசினர். அத்துடன் பந்துவீச்சிலும் 35 ரன்களை அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆனால் இப்போட்டியில் பெங்களூரு அணி எதிர்பாராத விதமாக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் யுவராஜ் சிங்கின் இந்த 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப் ரன்களான 132 ரன்கள் இன்றளவும் யாரலும் முறியடிக்க முடியாத சாதனையாகவே ஐபிஎல் வரலாற்றில் உள்ளது.
#4. ஐபிஎல் தொடரில் ஐந்து வெவ்வேறு அணிகளில் விளையாடி அரை சதங்களை விளாசிய முதல் கிரிக்கெட் வீரர்
யுவராஜ் சிங் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்வில் முதல் மூன்று சீசனில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் விளையாடிய போது 3 அரை சதங்களை விளாசினார். 4வது,5வது( 5வது சீசனான 2012ல் இவரால் சரியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இயலவில்லை) மற்றும் 6வது ஐபிஎல் சீசனில் புனே வாரியர்ஸ் இந்தியா என்ற அணிக்காக விளையாடி 2 அரை சதங்களை விளாசினார். அதன்பின் 7வது ஐபிஎல் சீசனில் விராட் கோலி தலைமையிலான ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 14 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இந்த ஒரு சீசனில் மட்டும் 3 அரை சதங்களை விளாசினார். இத்தொடரில் அதிகபட்சமாக 83 ரன்களை அடித்தார்.
அதன்பின் 8வது ஐபிஎல் சீசனில் 16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அந்த சீசனில் 2 அரை சதங்களுடன் 248 ரன்களை குவித்தார். 9வது ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.10வது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட இவர் 2 அரை சதங்களை அடித்தார். 11வது ஐபிஎல் சீசனில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியிலேயே மீண்டும் விளையாடினார். யுவராஜ் சிங் கிங்ஸ் XI பஞ்சாப்,புனே வாரியர்ஸ் இந்தியா,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்,டெல்லி டேர்டெவில்ஸ்,சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடி தான் விளையாடிய அனைத்து அணிகளிலுமே அரை சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்