கிரிக்கெட்டில் பொதுவாக நிதானமாக ஆடும் வீரர்களைவிட அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் வீரர்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். குறிப்பாக ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை காண்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூடுதல் இன்பத்தை தரக்கூடியதாகும்.
நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் ஒட்டுமொத்தமாக 240 க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் தற்போது வரை அடிக்கப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணி கேப்டன் 'இயான் மோர்கன்' 22 சிக்ஸர்களை விளாசி முன்னணியில் உள்ளார். இவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 17 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தக் கட்டுரையில் ஒட்டுமொத்த உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசி டாப் 3 வீரர்களைப் பற்றி காண்போம்.
(குறிப்பு : இந்த தகவல்கள் இந்த உலக கோப்பையின் 29-ஆவது ஆட்டம் வரையிலானது).
3) ரிக்கி பாண்டிங். (31 சிக்ஸர்கள்)
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான 'ரிக்கி பாண்டிங்' உலக கோப்பை தொடரில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். உலக கோப்பை தொடரில் 46 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 5 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களுடன் 1743 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இவர் 121 பந்துகளில் குவித்த 140 ரன்களை ரசிகர்கள் எவரும் மறந்து விட முடியாது.
பாண்டிங் ஒட்டுமொத்தமாக உலக கோப்பையில் 31 சிக்சர்கள் விளாசி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இது மட்டுமல்லாது உலக கோப்பையில் அதிக போட்டியில் விளையாடிய வீரர், அதிக கேட்ச்களை பிடித்த வீரர், அதிக முறை உலக கோப்பையை வென்ற வீரர் என்ற பல்வேறு சாதனைகள் இவர் வசம் உள்ளன.
2) ஏபி டிவில்லியர்ஸ் (37 சிக்ஸர்கள்).
தென் ஆப்பிரிக்க நாட்டின் அதிரடி மன்னனான 'ஏபி டிவில்லியர்ஸ்'க்கு உலகெங்கிலும் ரசிகர்கள் மிக அதிகம். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் டிவில்லியர்ஸ்.
ஒட்டுமொத்தமாக 23 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 4 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களுடன் 1207 ரன்களை குவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக 22 இன்னிங்சில் 37 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் 66 பந்துகளில் குவித்த 162 ரன்கள் இவரின் அதிரடியை எப்பொழுதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
1 ) கிறிஸ் கெயில் (47 சிக்ஸர்கள்).
கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் இவருடையதுதான். 'யுனிவர்சல் பாஸ்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் 'கிறிஸ் கெய்ல்' தனது 39-வது வயதிலும் இன்னும் தனது அதிரடி வேட்டையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 32 உலக கோப்பை ஆட்டங்களில் பங்கேற்றுள்ள இவர் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உடன் 1138 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக 215 ரன்கள் விளாசி உலக கோப்பை வரலாற்றின் முதல் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மட்டும் இவர் 26 சிக்ஸர்களை வெறும் 6 இன்னிங்சில் விளாசி தள்ளினார். மேலும் ஒட்டுமொத்தமாக இவர் 31 இன்னிங்சில் 47 சிக்சர்களை விளாசி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். தற்போது தனது இறுதி உலக கோப்பையில் விளையாடி வரும் கெயில் மேலும் பல சிக்ஸர்களை விளாசி தனது சாதனையை மேலும் வலுப்படுத்துவார் என நம்பலாம்.