“ஈ சாலா கப் நம்தே” - இந்த வார்த்தைகள் இந்த வருடமும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) ரசிகர்களுக்கு பொய்யாகவே போய் விட்டது. ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற RCB அணியின் கனவு இந்த வருடம் ‘புள்ளி பட்டியலில் கடைசி இடம்’ என்ற நிலையோடு முடிந்துவிட்டது.
RCB அணியின் பேட்டிங்கை பொருத்தவரை ‘விராட் கோலி’ மற்றும் ‘டிவில்லியர்ஸ்’ ஆகியோர் வழக்கம் போல் இந்த முறையும் அதிக ரன்களை குவித்தனர். ஆனால் அவர்களுக்கு உறுதுணையாக நின்று ஆடுவதற்கு வழக்கம் போல இந்த முறையும் எந்த ஒரு வீரரும் இல்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்த கேப்டனாக இருக்கும் ‘விராட் கோலி’க்கு RCB அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தருவது மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் RCB அணியின் கேப்டன்ஷிப்பை மாற்றினால் அது நல்ல பலன் தரும் எனக் கூறி வருகின்றனர்.
அவ்வாறு விராட் கோலிக்கு பதிலாக அடுத்த ஐபிஎல் சீசனில் RCB அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
3 ) மொயின் அலி.
இங்கிலாந்து அணியின் திறமைவாய்ந்த பேட்டிங் ஆல்-ரவுண்டரான இவர் இந்த சீசனில் ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தார். இந்த சீசனில் ஆரம்பத்தில் இவர் மோசமாக செயல்பட்டாலும் பின்னர் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் 2006-ஆம் ஆண்டு U-19 உலக கோப்பை தொடரில் ‘இங்கிலாந்து U-19’ அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ‘வார்செஸ்டர்ஷயர்’ கிளப் அணிக்காகவும் தனது சிறப்பான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே அடுத்த ஐபிஎல் சீசனில் RCB அணியை வழிநடத்த இவர் ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.
2 ) பார்த்திவ் பட்டேல்.
குஜராத்தை சேர்ந்த விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மனான ‘பார்த்தீவ் பட்டேல்’ இந்த ஐபிஎல் சீசனில் RCB அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் இவர் 26.64 என்ற சராசரியில் 373 ரன்களை குவித்துள்ளார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 139.17 என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 6 அணிகளுக்காக பார்த்தீவ் பட்டேல் விளையாடியிருக்கிறார். அதில் 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவரது 17 வருட கால சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இவருக்கு கேப்டனாக நிச்சயம் கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
1 ) ஏ.பி டிவில்லியர்ஸ்.
ஏ.பி டிவில்லியர்ஸ் - இந்த தென்னாப்பிரிக்க அதிரடி மன்னனுக்கு அறிமுகமே தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பேட்ஸ்மனாகவும், கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார் டிவில்லியர்ஸ்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஓய்வை அறிவித்த இவர், தற்போது ஐபிஎல் உள்ளிட்ட உலகின் பல்வேறு T-20 லீகுகளில் மட்டும் விளையாடி வருகிறார். RCB அணிக்காக கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் அணி வீரர்களோடு நல்ல புரிந்துணர்வோடு இருக்கிறார்.
எனவே இந்த 360° வீரன் RCB அணிக்காக அடுத்த சீசனில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பட்சத்தில் அது ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்’ அணி மிகப்பெரிய பலமாகவும், ஐபிஎல் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு தருணமாகவும் அமையக்கூடும்.