இந்திய கிரிக்கெட் அணி ஆரம்ப காலத்தில் பீல்டிங்கில் மிக சிறப்பாக அறியப்படாத ஒரு அணியாக இருந்தது. இந்தியாவிலிருந்து மிகச்சிறப்பான பீல்டர்கள் அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இந்திய மைதானங்களின் ‘அவுட்-ஃபீல்டு’ கடினமாக, குறைவான தரம் உடையதாக இருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
பின்னர் ‘சவுரவ் கங்குலி’யின் கேப்டன்ஷிப் காலகட்டத்தில் இந்திய பில்டிங்கில் மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. அதற்குப் பிறகே இந்திய அணி பீல்டிங்கில் பெரிதும் முன்னேற்றம் கண்டது. தற்போதைய காலகட்டத்தில் இந்திய அணி உடற்தகுதி தேர்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கு உதாரணமாக இந்திய அணியின் கேப்டன் ‘விராட் கோலி’யை குறிப்பிடலாம்.
இந்த கட்டுரையில் நாம் 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த 3 ஃபீல்டர்களை பற்றி காணலாம்.
#3 ரவீந்திர ஜடேஜா
இந்திய அணியின் சிறப்பான ஆல்-ரவுண்டராக அறியப்படும் ‘ரவீந்திர ஜடேஜா’, தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தவிர்த்து ஃபீல்டிங்கில் தான் அதிகப் புகழ் பெற்றார். இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது உலகின் சிறந்த ஃபீல்டராகவும் ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார்.
எந்த இடத்திலும் மிகச் சிறப்பாகவும், வேகமாகவும் ஃபீல்டிங் செய்வதில் வல்லவர். இவரிடத்தில் பந்து சென்றால் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது ரன் ஓடவே பயப்படுவர். சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 101 கேட்ச்களை பிடித்துள்ள இவர் இந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அது இந்திய அணியின் ஃபீல்டிங்க்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
#2 சுரேஷ் ரெய்னா
இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 322 சர்வதேச போட்டிகளில் ஆடிய பெருமையுடையவர் சுரேஷ் ரெய்னா. மிகச் சிறப்பான ஃபீல்டரான இவர் பிரமிக்கத்தக்க பல கேட்ச்களை பிடித்துள்ளார். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு இவரின் ஸ்லிப் ஃபீல்டிங் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருந்தது.
இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த 5 வீரர்களில் இவரும் ஒருவராவார். அசாருதீன், சச்சின், டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் மற்ற நான்கு வீரர்கள் ஆவார்கள்.
அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளில் மொத்தம் 167 காட்சிகளை சுரேஷ் ரெய்னா பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வீரரான இவர் மேலும் 5 கேட்ச்களை பிடித்தால், ஐபிஎல் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
#1 முகமது கைஃப்
முகமது கைஃப்’ இந்தியாவின் மிகச் சிறப்பான ஃபீல்டராக ரசிகர்கள் மனதில் இப்போதும் இருப்பவர். 2002 ‘நாட் வெஸ்ட்’ டிராபி இறுதிப் போட்டியில் இவர் யுவராஜ் சிங்குடன் இணைந்து வெற்றி இலக்கை அடைய வைத்தது யாரும் மறந்து விட முடியாது.
கங்குலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில், இந்திய அணியில் மிகச்சிறப்பான ஃபீல்டராக அறியப்பட்டவர் கைஃப். தனது உடலை வருத்தி பீல்டிங் செய்யக்கூடியவர் இவர். அன்றைய காலகட்டத்தில் முகமது கைப் - யுவராஜ் சிங் ஆகியோரே இந்திய ஃபீல்டிங்கின் தூண்களாக இருந்தனர்.
கைஃப், ஒருநாள் போட்டிகளில் 55 கேட்ச்களையும், டெஸ்ட் போட்டிகளில் 14 கேட்ச்களையும் பிடித்துள்ளார். இவர் பேட்டிங்கில் சுமாரான பங்களிப்பே இந்திய அணிக்காக அளித்திருந்தாலும் தற்போது வரையில் இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டராக ‘முகமது கைஃப்’ அறியப்படுகிறார்.