இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து ‘பிளே-ஆஃப்’ சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற உள்ளன. ரசிகர்களுக்கு எண்ணற்ற சுவாரஸ்யமான சம்பவங்களையும், திரில்லிங்கான ஆட்டங்களையும் இந்த ஐபிஎல் தொடர் வழங்கியுள்ளது.
யாராலும் அதிகம் அறியப்படாத உள்ளூர் வீரர்கள் பலர் இந்த ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்தனர். அதே நேரத்தில் எதிர்பார்க்கப்பட்ட பல முன்னணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வழங்கி தங்களது அணியின் தோல்விக்கு காரணமாக விளங்கினார்.
இந்தக் கட்டுரையில் அடுத்து வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாமல் வெளியேற வாய்ப்பு உள்ள 3 முன்னணி இந்திய வீரர்களை பற்றி காணலாம்.
3) யூசுப் பதான்.
மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரரான இவர் 2012-ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் நிலையான ஒரு இடம் பிடித்து வந்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு ஆண்டுக்கு ஆண்டு இவரது ஆட்டம் மோசமாகிக் கொண்டே வந்துள்ளது.
இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. தற்போதைய ஐபிஎல் தொடரில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 40 ரன்களை 13.33 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்ட்ரைக்-ரேட் 88.88 என்ற ரீதியில் மிக மிக மோசமானதாக அமைந்துள்ளது. அதிரடியாக ஆட முடியாமல் தவித்து வரும் இவர் தனது விக்கெட்டை மிக எளிதாக இழந்து விடுகிறார்.
தற்போது ‘ஹைதராபாத் சன்ரைசர்ஸ்’ அணிக்காக விளையாடி வரும் இவரை அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்குமா என்பது சந்தேகமே.
2 ) ஸ்டுவர்ட் பின்னி.
கர்நாடகாவை சேர்ந்த 34 வயதான ‘ஸ்டூவர்ட் பின்னி’ இந்த வருட ஐபிஎல் சீசனில் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக பங்கேற்று விளையாடினார். வலதுகை அதிரடி பேட்ஸ்மேனும், மித வேகப்பந்து வீச்சாளருமான இவர் ராஜஸ்தான் அணிக்கு கடைசி கட்ட அதிரடிக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 23.33 ஆகும். மேலும் பந்துவீச்சிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே அடுத்து ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை தக்கவைப்பது சந்தேகமே.
ராஜஸ்தான் அணியில் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் பலர் இருப்பதால் ஸ்டூவர்ட் பின்னி அடுத்த ஐபிஎல் ஏலத்தில் விலை போவதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.
1 ) உமேஷ் யாதவ்.
திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்குள் நுழைந்தவர் தான் ‘உமேஷ் யாதவ்’. அதன் பின்னர் தனது மோசமான பந்துவீச்சால் இந்திய அணியில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார். தற்போதைய ஐபிஎல் தொடரில் ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்’ அணிக்காக விளையாடிய இவர் அங்கும் தனது மோசமான பந்துவீச்சை தொடர்ந்தார்.
இந்த சீசனில் RCB அணிக்காக 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதிலும் இவரது எக்கானமி ரேட் 9.80 என்ற அளவில் மிக மோசமாக அமைந்துள்ளது. குறிப்பாக கடைசி கட்ட பந்துவீச்சில் அதிக அளவில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார் உமேஷ்.
இந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் கடைசி இடம் பிடித்து வெளியேறியது RCB அணி. எனவே அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அணியில் பல மாற்றங்களை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது. தொடர்ந்து மோசமாக பந்து வீசி வரும் உமேஷ் யாதவை RCB அணி தக்க வைப்பது மிக கடினம். அதே நேரத்தில் மற்ற அணியிலும் இவரை ஏலத்தில் எடுப்பார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமாகவே உள்ளது.