ஐபிஎல் போட்டி தொடர் உலகின் மிகவும் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரிக்கெட் போட்டி தொடராகும். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளையாடும் ஒரு அற்புத அனுபவத்தை கொடுக்கும் தொடர்தான் ஐபிஎல்.
சர்வதேச வீரர்கள் மட்டுமல்லாது உள்ளூர் போட்டிகளில் ஆடி வரும் வீரர்கள் கூட தங்கள் அணியின் வெற்றிக்காக சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் முன்னணி வீரர்கள் பலர் தங்கள் அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியாமல் போகிறது.
இந்த கட்டுரையில் இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருந்து வரும் 3 முன்னணி வெளிநாட்டு வீரர்களைப் பற்றி காணலாம்.
3 ) மொயின் அலி.

வெளிநாட்டு முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருவதுதான் ‘பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்’ அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாகும். டிவில்லியர்ஸ் தவிர்த்து மற்ற முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் RCB அணிக்காக மோசமான பங்களிப்பையே அளித்துள்ளனர். அதில் ஒருவர்தான் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ‘மொயின் அலி’.
இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 6 ஆட்டங்களில் ஆடியுள்ள மொயின் அலி வெறும் 74 ரன்களை மட்டுமே 18.50 என்ற சராசரியில் எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கி விடப்பட்ட போதும் இவரால் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியாமல் போனது.
வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் பந்துவீச்சிலும் சோபிக்கவில்லை. வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள இவரின் மோசமான ஃபார்ம் தொடரும் பட்சத்தில் இவர் ஆடும் லெவனில் இருந்து எந்த நேரத்திலும் அதிரடியாக நீக்கப்படலாம்.
2 ) பென் ஸ்டோக்ஸ்.

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வீரர் தான் ‘பென் ஸ்டோக்ஸ்’. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி ஆல்ரவுண்டரான இவரால் இந்த ஐபிஎல்-லில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
இந்த ஐபிஎல் தொடரில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் இறுதிக்கட்ட ஓவர்களில் இவரால் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க முடிவதில்லை.
வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்த ஐபிஎல்-லில் வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் ஒரு ஓவருக்கு சராசரியாக 11.22 ரன்கள் விட்டுக் கொடுப்பது இவரது மோசமான பந்து வீச்சுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டோக்சின் மோசமான கடைசி ஓவரால் தான் ராஜஸ்தான் அணி அந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
1 ) ஷேன் வாட்சன்.

கடந்த ஐபிஎல்-2018 தொடரில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் ‘ஷேன் வாட்சன்’. ஆனால் இந்த ஐபிஎல்-லில் இவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
அதிரடி தொடக்க ஆட்டக்காரரான இவர் இந்த ஐபிஎல் தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி 105 ரன்கள் மட்டுமே 15 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மேலும் 114.13 என்ற இவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
சென்னை அணி கேப்டன் ‘தோனி’ இவரை பந்துவீச்சாளராக இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் பயன்படுத்தவில்லை. எனவே வாட்சன் தனது பேட்டிங்கில் எழுச்சி காண்பது அவசியமாகும். இல்லையெனில் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக ‘முரளி விஜய்’ களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.