2019-ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கிறது. குறிப்பாக ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’, ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’, ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ ஆகிய அணிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி போட்டியில் முன்னணியில் இருக்கின்றன.
ஆனால் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்’ (RCB) அணிக்கு இந்த ஐபிஎல் மிக மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது RCB அணி. கேப்டன் ‘விராட் கோலி’ பலவகையில் அணித்தேர்வை மாற்றி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோல்வியே மிஞ்சுகிறது.
இந்த கட்டுரையில் RCB அணி ஏலத்தில் தக்கவைக்காமல் நழுவ விட்ட மூன்று முக்கிய வீரர்களின் பட்டியலை காணலாம்.
#3) ஷேன் வாட்சன்.
உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் ஷேன் வாட்சன். பேட்டிங்கில் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்க ஐபிஎல் தொடரில் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக களம் கண்ட இவர் அந்த தொடரில் 472 ரன்கள் குவித்ததுடன் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்தத் தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்றார்.
2015-ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த இவரை RCB அணி 2016-ஆம் ஆண்டு 9.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த ஆண்டில் வாட்சன் RCB அணிக்காக வெறும் 179 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதோடு பந்துவீச்சிலும் சோபிக்கவில்லை. இதே நிலை அடுத்த ஆண்டும் நீடித்ததால் RCB இவரை ஏலத்தில் கழட்டி விட்டது.
இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி இவரை ஏலத்தில் எடுத்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. சென்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 500 ரன்களுக்கு மேல் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார் வாட்சன்.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார் ஷேன் வாட்சன்.
#2 ) கே.எல். ராகுல்.
இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவர் தான் கே.எல். ராகுல். கர்நாடகா அணிக்காக சிறப்பாக ஆடி வந்த இவரை 2013-ஆம் ஆண்டு RCB அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த தொடரில் இவருக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர் ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணிக்காக களம் கண்டார். அங்கு இவர் சிறப்பான ஆட்டத்தை அளித்தாலும், இவரது ‘ஸ்ட்ரைக் ரேட்’ டி-20 போட்டிகளுக்கு போதுமானதாக இல்லை.
அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு RCB அணி இவரை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டில் இவர் தனது பேட்டிங்கில் மிகச் சிறப்பான பங்களிப்பை RCB அணிக்காக அளித்தார். ஆனால் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இவர் தோள்பட்டை காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.
2018-ஆம் ஆண்டின் ஐபிஎல் ஏலத்தில் RCB அணி இவரை தக்கவைக்காமல் போகவே, ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி இவரை ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டில் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய ராகுல் அந்தத் தொடரில் மொத்தம் 659 ரன்கள் குவித்தார். இவரை அப்போதே தக்கவைத்து இருந்தால் RCB அணிக்கு தற்போது இருக்கும் தொடக்க வீரர் பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கலாம்.
#1 ) கிறிஸ் கெய்ல்.
‘யுனிவர்சல் பாஸ்’ என செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், ஆரம்பத்தில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்காக விளையாடி வந்தார். அப்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 2011-ஆம் ஆண்டு இதுவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் RCB அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘திர்க் நானேஸ்’ காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக கிறிஸ் கெயிலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட கெயில், RCB அணிக்காக பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பினார். 2011-ஆம் ஆண்டில் 608 ரன்களும், 2012-ஆம் ஆண்டில் 733 ரன்களும் குவித்து மலைக்க வைத்தார். ‘புனே வாரியர்ஸ்’ அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்து, அதோடு இல்லாமல் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து சாதனை படைத்தார்.
இவரின் அதிரடி ஆட்டத்தில் RCB அணி பலமுறை அபார வெற்றியை பெற்றது. ஆனால் கடந்த முறை இவரை RCB அணி தக்கவைக்காமல் விடவே, ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி இவரை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் ஆடிய இவர் 368 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணிக்காகவே இவர் ஆடி வருகிறார்.
இந்த மூன்று வீரர்கள் இருந்திருந்தாலே இந்த ஐபிஎல் தொடரில் RCB அணியின் தலையெழுத்து மாறியிருக்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.