இந்த ஐபிஎல் சீசன் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்’ (RCB) அணிக்கு தற்போது வரை சிறப்பானதாக அமையவில்லை. ஆடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது RCB அணி.
பேட்டிங்கில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழப்பது, கடைசி கட்ட பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவது, பீல்டிங்கில் கேட்சுகளை கோட்டை விடுவது என பெங்களூர் அணி எல்லாவற்றிலும் மோசமாகவே செயல்படுகிறது. மேலும் சரியான கலவையில் ஆடும் வீரர்களை கண்டறிவது RCB அணிக்கு தற்போது வரை பெரும் சோதனையாக உள்ளது.
இன்று (ஏப்ரல் 5) பெங்களூரில் நடைபெறும் ஆட்டத்தில் RCB அணி ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான RCB அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் முதல்முறையாக இந்த சீசனில் RCB அணிக்காக களமிறங்க காத்திருக்கும் மூன்று முக்கிய வீரர்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
3) வாஷிங்டன் சுந்தர்.
சிறந்த ஆல்ரவுண்டரான ‘வாஷிங்டன் சுந்தர்’ இந்த சீசனில் இன்னும் பெங்களூர் அணிக்காக களம் காணாமல் இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். ஆரம்பக்கட்ட பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக் கூடிய சுழற்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் சிறப்பாக கை கொடுக்க கூடியவர். ‘ஸ்டீவ் ஸ்மித்’ தலைமையின் கீழ் 2017 ஆம் ஆண்டு ‘புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்’ அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தார் வாஷிங்டன் சுந்தர்.
பெங்களூர் அணியில் ‘மொயின் அலி’ இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக இன்றைய நாள் வாஷிங்டன் சுந்தர் பெங்களூர் அணிக்காக களம் இறங்க கூடிய நாளாக அமையலாம்.
2) ஹென்ரிச் கிளாசன்.
இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்த ‘ஹெட்மயர்’ பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது RCB அணிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இவருக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ‘கிளாசென்’, RCB அணிக்காக 5-ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்க சிறப்பான ஒரு வீரர் ஆவார்.
மேலும் இவர் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன்கள் சேர்ப்பதிலும் வல்லவர். எனவே பெங்களூர் அணியின் தொடக்க ஜோடி பிரச்சினைக்கும் இவர் ஒரு நல்ல தீர்வாக இருப்பார் எனக் கருதலாம். எனவே கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் கிளாசன் களமிறங்க நல்ல வாய்ப்பிருக்கிறது.
1 ) டிம் சவுதி.
நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘டிம் சவுதி’ இதுவரை இந்த சீசனில் RCB அணிக்காக களமிறங்காமல் இருப்பது அவர்களின் அணி தேர்வின் குறைபாட்டையே காட்டுகிறது. இறுதிக்கட்ட ஓவர்களில் தற்போதைய பெங்களூர் அணி ரன்களை வாரி வழங்கும் அணியாகவே இருக்கிறது.
இறுதிக்கட்ட ஓவர்களில் கட்டுக்கோப்பாகவும், சிறப்பாகவும் பந்துவீசக் கூடிய டிம் சவுதி இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றால் அது பெங்களூர் அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும். மேலும் சவுதி பேட்டிங்கிலும் கை கொடுக்க கூடியவர் என்பது கூடுதல் பலமாகும். எனவே கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சவுதி இடம்பெறுவார் என நம்பலாம்.
மேலும் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘நாதன் குல்டர்-நைல்’ பெங்களூர் அணியுடன் இணைந்துள்ளதால், அவரும் இன்றைய போட்டியில் களமிறங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.