இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை பெற்றுள்ள முதல் 3 அணிகள் எவை தெரியுமா?.

Jasprit Bumrah - World No 1 Bowler.
Jasprit Bumrah - World No 1 Bowler.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'உலகக் கோப்பை' கிரிக்கெட் திருவிழா இந்த வருடம் மே 30-ஆம் தேதி 'இங்கிலாந்து' மற்றும் 'வேல்ஸ்' மண்ணில் தொடங்கி நடைபெற உள்ளது. உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டி அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.

போட்டியை நடத்தும் நாடான 'இங்கிலாந்து' ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்துக்கே அதிக வாய்ப்பு என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்கள் தற்போது பேட்ஸ்மென்களுக்கு அதிக சாதகமாக இருக்கிறது. இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்தக் கட்டுரையில், வரவிருக்கும் உலகக்கோப்பையில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி அமையப்பெற்ற டாப் 3 அணிகளை பற்றி பார்ப்போம்.

3 ) பாகிஸ்தான்.

Mohamed Amir.
Mohamed Amir.

வேகப்பந்து வீச்சாளர்கள் : ஹசன் அலி, முகமது ஆமீர், ஷஹீன் அப்ரிடி, வஹாப் ரியாஸ், முகமது ஹசனன்.

ஆசியக் கண்ட அணிகளில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி அமைய பெற்ற அணி 'பாகிஸ்தான்' தான். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மிக மோசமாகவே அமைந்தது. இருப்பினும் இந்த அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது எதிரணிக்கு மிகப்பெரும் பிரச்சனையாக மாறும்.

'ஹசன் அலி' 2017 ஆம் ஆண்டு 'சாம்பியன்ஸ் டிராபி'க்கு பிறகு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த முறை பாகிஸ்தான் அணியில் முகமது ஆமீர், ஷஹீன் அப்ரிடி, வஹாப் ரியாஸ் ஆகிய 3 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் அதிக வேகத்தில் துல்லியமாக பந்துவீச கூடிய 'முகமது ஹசனன்' பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கிறார்.

2 ) ஆஸ்திரேலியா.

Mitchell Starc.
Mitchell Starc.

வேகப்பந்து வீச்சாளர்கள் : பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பேரென்டாப், நாதன் குல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன், மார்க்கஸ் ஸ்டோய்னஸ்.

நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான 'ஆஸ்திரேலியா' அணி இந்த முறை உலகக் கோப்பையை தக்க வைக்க மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியுடன் களமிறங்க இருக்கிறது. எதிர்பாராத விதமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் 'ஜெய் ரிச்சர்ட்சன்' காயம் காரணமாக விலகினாலும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு வலுவாகவே உள்ளது.

'மிச்செல் ஸ்டார்க்' மற்றும் 'பேட் கம்மின்ஸ்' ஆகிய இருவரின் பந்துவீச்சு ஆஸி அணிக்கு மிக முக்கியமானதாகும். மேலும் இளம் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் 'ஜேசன் பேரென்டாப்' சமீப காலத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகிறார்.

மேலும் இவர்களுடன் துல்லியமாக பந்து வீசக்கூடிய 'நாதன் குல்டர்-நைல்' மற்றும் 'கேன் ரிச்சர்ட்சன்' ஆகியோர் பக்க பலமாக உள்ளனர். மேலும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்தக்கூடிய ஆல்-ரவுண்டர் 'மார்கஸ் ஸ்டோய்னஸ்' அணியில் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது.

1 ) தென் ஆப்பிரிக்கா.

Kaggiso Rabada.
Kaggiso Rabada.

வேகப்பந்து வீச்சாளர்கள் : காகிசோ ரபாடா, டேல் ஸ்டெய்ன், லுங்கி நெகிடி, டுவயின் பிரிடோரியஸ், ஆண்ட்ரே பெலெக்வாயோ, கிறிஸ் மோரிஸ்.

இந்த உலக கோப்பையில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி அமைய பெற்ற அணி தென் ஆப்பிரிக்கா. மேலும் இவர்களின் மிகப்பெரிய பலமே இவர்களின் வேகப்பந்து வீச்சு தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சில் எதிரணி வீரர்களை மிரட்டிய 'காகிசோ ரபாடா' தான் இவர்களின் மிகப் பெரிய பலம்.

'டேல் ஸ்டெய்ன்' மற்றும் 'லுங்கி நெகிடி' ஆகியோர் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச கூடியவர்கள். இங்கிலாந்து மைதானத்தின் 'ஸ்விங்கிங்' கண்டிஷனில் இவர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நம்பலாம்.

மேலும் பெலக்வாயோ, பிரிடோரியஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசுவதுடன், கடைசி கட்ட பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர்கள். சிறப்பான கலவையில் வேகப்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய அணியாக தென் ஆப்பிரிக்க அணி இந்த உலக கோப்பையில் களமிறங்க இருக்கிறது.

Quick Links