இங்கிலாந்து மண்ணில் விரைவில் தொடங்க உள்ள 'ஐசிசி உலகக்கோப்பை 2019' கிரிக்கெட் போட்டி தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய போகிறது என்பதில் சந்தேகமில்லை. உலகின் மிகச் சிறந்த டாப் 10 அணிகள் மோதும் இந்த போட்டி தொடர் மிகக் கடினமான ஒரு தொடராக, சுவாரஸ்யம் மிகுந்த ஒரு தொடராக நிச்சயம் இருக்கப் போகிறது.
ஒரு அணியின் வெற்றிக்கு ஆல்-ரவுண்டர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் அணியில் இருந்தால் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சரியான கலவை காணப்படும். அதுவே வெற்றிக்கும் வழிவகுக்கும்.
இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர்களை பெற்றுள்ள 'டாப் 3' அணிகளை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
3 ) நியூசிலாந்து.
ஆல்-ரவுண்டர்கள் : மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷிம், கோலின் டீ கிராண்ட்ஹோம், கோலின் முன்ரோ.
நியூசிலாந்து அணி சிறந்த ஆல்-ரவுண்டர்களை உள்ளடக்கிய ஒரு அணியாக இந்த உலக கோப்பையில் பங்கேற்கிறது. அந்த அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான 'மிட்செல் சாண்ட்னர்' 7-வது வீரராக களமிறங்கி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
மித வேகப்பந்து வீச்சாளர்களான 'ஜேம்ஸ் நீஷிம்' & 'கோலின் டீ கிராண்ட்ஹோம்' ஆகியோர் தங்களின் சிறப்பான பந்துவீச்சை மட்டுமல்லாது பேட்டிங்கிலும் இறுதி கட்டத்தில் மிக அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் திறமை வாய்ந்தவர்கள். மேலும் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் 'கோலின் முன்ரோ', வலது கை மித வேக பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் ஆவார்.
2 ) இந்தியா.
ஆல்-ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா.
மிகச்சிறப்பான ஆல்-ரவுண்டர்களை உள்ளடக்கிய ஒரு அணியாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழும் 'ஹர்திக் பாண்டியா' மிகச்சிறந்த ஃபார்மில் தற்போது இருக்கிறார். இவரின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்கு வகிக்கும் என நம்பலாம்.
அணிக்கு எப்பொழுதெல்லாம் விக்கெட்டுகள் தேவைப்படுகிறதோ அப்போது விக்கெட்டை எடுத்துக் கொடுக்கும் சிறந்த 'கோல்டன் ஆர்ம்' பந்து வீச்சாளராக திகழ்கிறார் 'கேதார் ஜாதவ்'. மேலும் 'ரவீந்திர ஜடேஜா' தற்போது பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார்.
தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் 'விஜய் சங்கர்' இந்த உலகக் கோப்பையில் சிறப்பான பேட்டிங் ஆல்-ரவுண்டராக திகழ்வார் என எதிர்பார்க்கலாம். மேலும் அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் இவர் தனது பந்துவீச்சிலும் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 ) இங்கிலாந்து.
ஆல்-ரவுண்டர்கள் : பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியம் டாவ்சன், டாம் கரன்.
இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறந்த கலவையில் வீரர்களை பெற்றுள்ள அணி இங்கிலாந்து தான். இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இங்கிலாந்து அணிக்கு அவர்களின் சிறந்த 5 ஆல்-ரவுண்டர்கள் அணிக்கு மிகப்பெரிய வலு சேர்க்கிறார்கள்.
இதில் மிக முக்கிய வீரர்களாக கருதப்படும் 'பென் ஸ்டோக்ஸ்' மற்றும் 'மொயின் அலி' ஆகியோர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லவர்கள். குறிப்பாக இவர்களின் பேட்டிங் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.
மேலும் அந்த அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களாக கருதப்படும் கிறிஸ் வோக்ஸ், லியம் டாவ்சன் & டாம் கரன் ஆகியோர் தங்களின் சிறப்பான பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு கடைசி கட்டத்தில் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க கூடியவர்கள். சிறப்பான கலவையில் வீரர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பையில் மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.